Thursday, December 23, 2010

வேரென நீயிருந்தாய்...(22)

அன்றைய விளக்கத்தின் பின்னர் நதீஷா பெரிதும் மாறிப் போயிருந்தாள். இயன்றவரையிலும் ஆங்கிலத்தில் உரையாடுவதைத் தவிர்த்து தமிழிலேயே என்னிடம் உரையாடலைத் தொடர்ந்து கொண்டிருந்தாலும் எனக்குள் அவள் மீதான அச்சம் முற்றுமுழுதாக விலகியிருக்கவில்லை. எதற்காக இவள் தமிழில் இவ்வளவு ஆர்வமாக இருக்கின்றாள் என்கின்ற சந்தேகம் மனதைக் குடைந்து கொண்டிருந்தது.

“உங்கள் நண்பரின் நண்பன் உளவாளியாக இருக்கலாம்.” என்கின்ற வாசகங்களை 95 இற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் பரவலாகக் காணக்கூடியதாக இருந்திருந்தது. அக்காலப்பகுதியில் உளவாளிகள் அதிக அளவில் ஊடுருவியிருப்பதாக தெரிய வந்திருந்தது. 1991 இல் ஆனையிறவுப் படைத்தளத்தின் மீதான ஆகாய கடல் வெளித் தாக்குதல் தோல்வியில் முடிவடைந்திருக்கையில் யாழ்குடா நாட்டிற்கும் வன்னிப்பெருநிலப்பரப்பிற்குமான போக்குவரத்துத் தொடர்பு ஆட்டம் கண்டிருந்தாலும், பின்னர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணி தொடக்கம் ஆனையிறவு வரை நீண்டு அமைக்கப்பட்டிருந்த சிறிலங்கா இராணுவ வேலிகளை பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு அது அகற்றி விட்டிருந்தது. ஆயினும் ஆனையிறவுத்தளம் மீதான முற்றுகையை உடைப்பதற்காய் தரையிறக்கப்பட்டிருந்த படையினர் கட்டைக்காடு வெற்றிலைக்கேணிப் பிரதேசங்களில் நிரந்தரப் படைத்தளங்களை அமைத்துக் கொண்டு விட்டிருந்ததால் இப்போது ஊரியான் கொம்படியூடான சேற்று நிலப் பகுதியே வன்னியையும் யாழ்குடாவையும் இணைக்கும் போக்குவரத்துப் பாதையாக மாறிவிட்டிருந்தது. பொதுமக்கள் பயணம் செல்லும் அந்தப் பாதையில் ஒரு வெடிகுண்டுத்தாக்குதலைத் தன்னுடைய உளவாளிகைளைக் கொண்டு நடாத்தி அதன்மூலம் மக்களைப் பேரச்சத்துக்குள் தள்ள முயன்ற சிறிலங்காப் படைகளின் முயற்சி பிசுபிசுத்துப் போயிருந்ததை அடுத்து, மக்களிடையே உளவாளிகள் பற்றிய விழிப்புணர்வினை ஏற்படுத்துவதற்காகவே அவ்வாறான வாசகங்கள் யாழ்குடாவெங்கும் பரவலாக பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. “எல்லாவற்றையும் சந்தேகி” என்கின்ற மனநிலையை அந்தச் சூழ்நிலை உண்டாக்கி விட்டிருந்தது. ஆதலினால் இப்போது நதீஷா மீதும் இலேசான சந்தேகம் துளிர்விட ஆரம்பித்திருந்தது.

சிலநாட்களி்ன் பின்னர் வந்துபோன மாவீரர்தின இறுதிநாள் நிகழ்ச்சிக்கு வான்புலிகள் உலங்குவானூர்தியிலிருந்து முள்ளியவளை மாவீரர் துயிலும் இல்லத்தின் மீது பூக்களைத் தூவியதை அடுத்து வான்புலிகளின் உதயம் பற்றி முதன்முறையாக விடுதலைப்புலிகளால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்குச் சிலகாலங்களுக்கு முன்னரும் ஒரு உலங்குவானூர்தி வன்னியில் விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப்பிரதேசங்களின் மீது நீண்ட நேரமாகத் தாழப்பறந்து கொண்டிருந்ததை அவதானித்த மக்கள் அது விடுதலைப்புலிகளின் வானூர்தியென்றே எண்ணியிருந்தனராயினும், அன்றைய சம்பவத்தினை ரத்வத்தையும் பிரபாகரனும் தங்கள் வாழ்வில் மறக்கவே மாட்டார்களென்று பின்னர் தினமுரசில் அதன் ஆசிரியர் அற்புதன் அவர்கள் விபரித்திருந்தார். அந்த உலங்குவானூர்தியில் சிறிலங்காவின் பாதுகாப்பு இணையமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை அவர்கள் உட்பட சிறிலங்காப்படைகளின் முக்கிய படையதிகாரிகளும் பயணித்திருந்தனர். உலங்குவானூர்தியில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக சென்றடைய வேண்டிய இடத்தினைக் கண்டடைவதில் ஏற்பட்ட சிக்கல் காரணமாக அது தாழ்ந்து பறந்துகொண்டே முடிவிடத்தினைத் தேடிக்கொண்டிருக்க, கீழே அதை வேடிக்கை பார்த்தவர்கள் அதை வான்புலிகளின் உலங்குவானூர்தியென்றே எண்ணியிருந்தனர். பின் அந்த உலங்குவானூர்தி சூனியப் பிரதேசத்திற்குள் தரையிறங்கி அதிலிருந்தவர்கள் எல்லாம் பாதுகாப்பாக தங்கள் இடங்களை அடைந்து விட்டிருந்தனர். அப்படியானவொரு சம்பவத்தினைக் கனவிலும் எண்ணிப்பார்த்திருக்க முடியாத விடுதலைப்போராளிகளும் அந்த உலங்குவானூர்தி தங்களதே என்கின்ற எண்ணத்தில் அந்த அரிய சந்தர்ப்பத்தினைக் கோட்டைவிட்டிருந்தனர்.

1997 மே 13 இல் பெருமெடுப்புடன் ஆரம்பிக்கப்பட்டிருந்த வெற்றி நிச்சயம் படைநடவடிக்கை பதினெட்டு மாதங்களைக் கடந்த தொடர்ந்து கொண்டிருக்கையில் திடீரென 1998 டிசம்பர் 04ஆம் திகதியன்று சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு அந்தச் செய்தியை வெளியிட்டிருந்தது. சூரிய சக்தி (ரிவிபல) நடவடிக்கை மூலம் அது ஒட்டுசுட்டான் பகுதியைக் கைப்பற்றியிருப்பதாக அறிவித்ததனூடாக வெற்றி நிச்சயம் (ஜெய சிக்குறு) நடிவடிக்கை அறிவிக்கப்பட்ட அதன் இலக்கை அடையாமலேயே முடிவுக்கு வந்ததனை மறைமுகமாக அறிவித்திருந்தது.

பின்வந்த சில நாட்களில் எங்களின் முதலாண்டுப் பரீட்சையின் விரிவான பெறுபேறுகள் வெளியாயிருந்தன. அதைத் தொடர்ந்து நாங்கள் தொடர விரும்பும் பொறியியில் கற்கை நெறிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தன. எனக்கும் நதீஷாவிற்கும் விரும்பிய கற்கைநெறியைத் தொடர்வதற்கு ஏற்புடையதான பெறுபேறுகளே வெளியாகியிருந்தது.

“நீங்க என்ன Engineering செய்யப் போறீங்க?”
நதீஷா தான் ஆரம்பித்தாள்.

“நீங்க என்ன decide பண்ணியிருக்கிறீங்க?”

“நான்தான் முதல் கேட்டது. அப்ப நீங்கதான் முதல் சொல்லவேணும். சரிதானே?” - சிரித்தாள்.

“நான் இன்னும் decide பண்ணேல்ல.”

“ஏன்?”

“இல்லை, இனித்தான் decide பண்ணவேணும்.”

“உங்களுக்கு elect செய்ய விருப்பமா?”

நான் ஏற்கனவே Civil Engineering செய்வதாகத் தீர்மானித்து அதற்கான விண்ணப்பத்தினையும் நிரப்பி அனுப்பி விட்டிருந்தேனாயினும், இவள் எதற்காக நான் செய்யவிருக்கும் துறையினைப்பற்றி அக்கறை காட்ட வேண்டும்? என்னை எதற்காகவேனும் ஒரு பகடைக்காயாக மாற்ற நினைக்கின்றாளா? அவளது நோக்கத்தைப் புரிந்து கொள்ள முடியாமல் இருந்ததால்,

“ஏன் கேக்கிறீங்க?” - என்றேன்

“இல்ல, உங்களுக்கு elect செய்யிறதுக்கு result காணும் தானே. அதுதான் கேட்டன். நான் இன்னும் decide பண்ணேல்ல. அதுதான் உங்களுக்கு எது விருப்பமெண்டு கேட்டனான்.”

“உங்களுக்கு எது விருப்பமோ அதைச் செய்யுங்க.”
அவளிடமிருந்து விலகவேண்டும் போலிருந்தது.

“நீங்க என்ன செய்யப் போறீங்க எண்டு சொல்லுங்களன். please....”

“நான் என்ன செய்யப் போறன் எண்டதைப் பற்றி நீங்க ஏன் கவலைப்படுகிறீங்க? உங்களுக்கும் elect செய்யுறதுக்கு result காணும்தானே. அப்ப உங்களுக்கு எது விருப்பமோ அதுக்கு apply பண்ணுங்கோ.”
சற்று முறைப்பாகவே நான் சொன்னதைக் கேட்டதும் அவள் முகத்தில் சோகம் படர்வதைக் காணக்கூடியதாயிருந்தது. பார்க்கப் பாவமாயிருக்கவே,

“நான் civil தான் செய்யப் போறன். அதுக்கு apply-யும் பண்ணீற்றன்.”
கூறிவிட்டு அங்கிருக்கப் பிடிக்காமல் இருக்கவே அங்கிருந்து விலகி நடந்தேன்.







Saturday, November 27, 2010

வேரென நீயிருந்தாய்...(21)

இரண்டாம் வருட முதல்நாள் சம்பவத்தின் பின்னர் நதிஷாவுடனான சந்திப்புக்களை இயலுமானவரை தவிர்க்கத் தொடங்கியிருந்தேன் ஏதோ ஒரு வேகத்தில் அப்போதைக்குப் பிரச்சனையில் இருந்து தப்பிப்பதற்காய் பின்னர் விரிவாக உரையாடலாம் என்று கூறியிருந்தாலும் அவளது உணர்ச்சி வீச்சினைக் கண்டு அரண்டு போயிருந்தேன். அவளுக்கு விளக்கமளிக்கப்போய் அதிலே ஏற்படும் தர்க்கத்தில் கோபமாகி நான் ஏதாவது உளறப்போய் கடைசியில் என்னைச் சிறிலங்கா காவல்துறையிடம் மாட்டி விடுவாளோ என்கின்ற சந்தேகம் வேறு அரித்துக் கொண்டிருந்தது. ஆகையினால் ஆய்வுகூட வகுப்புகளுக்கு நேரம் பிந்திப் போகத் தொடங்கியிருந்தேன்.

அன்று ஒரு வெள்ளிக்கிழமை. 20 நவம்பர் 1998. அன்றைய காலை நேர ஆய்வுகூட வகுப்பு முடிவடைகையில்,

“ஜேந்தன்! இண்று நானு நீங்க கதைக்கிற. சரியா?”

நதிஷா அப்படிச் சொன்னது கட்டளையா அல்லது வேண்டுகோளா என்கின்ற சந்தேகம் எழுந்து என் ஈகோவைத் தாக்கியது.

“ஈவினிங் பிறக்ரிகல் இல்லத் தானே. கன்ரீனுக்குப் பின்ன ESU றூம் இருக்கிறது தானே. சாப்டு முடிஞ்சு நீங்க அங்க வாறது. நான் உங்களப் பாத்திக்கொண்டிருக்கிறது. சரியா?”

அவளது கொச்சைத் தமிழ் இப்பொழுது ஓரளவிற்கு விளங்கத் தொடங்கியிருந்தது. இவளிடமிருந்து எப்படித் தப்பிப்பது என்கின்ற எண்ணம் எழுந்தது. அவளை எதிர்கொள்ள அச்சமாயிருந்தது. குழம்பினேன். மனதுக்குள் பல்வேறு சிந்தனைகளும் ஓடிற்று. எவ்வளவு நாளைக்கென்று பிரச்சனைகளைக் கண்டு ஓடிஒளிவது? பிரச்சனைகளைக் கண்டு ஓடி ஒளிவதால் எதுவும் ஆகிவிடப் போவதில்லை. தள்ளிப் போடுவதால் ஒரு தற்காலிக நிம்மதி மட்டுமே கிடைக்கிறது. ஆயினும் அதை எண்ணித் தினம்தினம் அஞ்சி நடுங்க வேண்டியிருக்கிறது. இப்படிப் பயந்து கொண்டே வாழ்வதை விட அவளை எதிர் கொள்வது மேலென்பது புரிந்தது. பெரும்பாலும் நாமெல்லாம் தேவையற்ற கற்பனைகளை எண்ணி சாதாரண விடயங்களையே சில வேளைகளில் பெரிய பிரச்சனைகளாக உருவகித்துக் கொள்கின்றோம். அதைக்கடந்து வந்த பின்னர், “அட! இதுக்குப் போயா இப்படிப் பயந்தேன்” என்கின்ற எண்ணமும் எழுவதுண்டு. ஆகவே மாலை நதீஷாவைச் சந்திப்பதாய்த் தீர்மானித்துக் கொண்டேன். மனதுக்குள் இருந்த குழப்பங்கள் தீர்ந்து தெளிவடைகையில் சந்தோஷமாக இருந்தது.

ESU அறையினுள் நுழைகையில் நதிஷா ஏற்கனவே காத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. அவளிற்கு முன்னால் இருந்த கதிரையில் அமர்ந்து அவள் முகத்தைக் கூர்ந்து பார்த்தேன். அவளது மனநிலையை ஊகிக்க முடியாமல் இருந்தது. அவள் தன் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி விட்டிருப்பது தெரிந்தது. அவளாகச் சொன்னாலொழிய அவள் மனத்தில் இருப்பதை அறிய முடியாது என்பதை உணர்ந்து கொண்டேன். பொதுவாகவே பெண்களைப் புரிந்து கொள்ள முடியாது என்று அனுபவஸ்தர்களே சொல்லிவிட்டுச் சென்றிருக்கிறார்கள். “ம்... என்னத்தைக் கதைக்கப் போறாளோ?” மனதுக்குள் அலுத்துக் கொண்டேன்.

“Thanks Jeyanthan for your coming!”

இவள் எப்போது தமிழில் கதைப்பாள் எப்போது ஆங்கிலத்தில் கதைப்பாள்? இப்போது இவளுடன் தமிழில் கதைப்பதா அல்லது ஆங்கிலத்தில் கதைப்பதா? அவள் ஆங்கிலத்தில் கதைத்ததால்

“You are welcome!”

வலிந்து புன்னகையை வருவித்துக் கொண்டேன்.

“பிரபாகரண் செய்யுறது சரியா? நீங்க தமிழ தானே. நீங்களே சொல்லுங்க!”

“I didn't understand your question clearly?”

“பரவால்ல. நீங்க தமிழ கதைக்கிறது. எனக்கு தமிழ் விளங்கும். நான் தமிழ் படிக்கிறது”

முதல்வருட நிறைவுவரை இவள் ஒரு தமிழ் வார்த்தை பேசி நான் கேட்டதில்லை. இந்த நாலரை மாத இடைவெளியில் அவள் கற்றிருக்கும் தமிழ் இந்த உரையாடலுக்குப் போதுமானதாயிருக்குமென நான் நம்பவில்லையாயினும் வேதாளம் மீண்டும் முருங்கையேறி விடுமோ என்கின்ற அச்சத்தில்,

“நீங்க எதைப்பற்றிக் கேக்கிறீங்க?”

“எல்ரீரீ சண்டை பிடிக்கிறது சரியா? அவங்க ஏன் சிங்களிசைக் கொல்லுறது? நாங்கெல்லாம் ஒருநாடு தானே”

“நான் சொல்லுறது இருக்கட்டும். நீங்க என்ன நிகை்கிறீங்க?”

“பிரபாகரன் தான் அதுக்கு றீசன். அவர் வேற ஆக்கள நல்லா brain wash பண்றது. அதால சும்மா சண்டை. அவங்க சூசைட் அற்றாக் எல்லாம் பண்றது. அவங்க பாவம் தானே”

“சரி ஏன் அப்பிடிச் செய்கிறேர் எண்டு நினைக்கிறீங்க?”

“அவருக்கு தான் ஆள வேணுமெண்டு ஹரி ஆசாவ (ஹரி ஆசாவ - சரியான ஆசை) அதுக்கு தெமிழ பெடியள சிங்கள ஆக்களோட சண்ட பிடிக்க வைக்கிறது.”

“அப்ப தமிழ் சிங்களப் பிரச்சனை பிரபாகரனால தான் வந்தது எண்டுறீங்களா?”

“ஆ!. eighty three-யில தா?னே பிரச்சன வந்தது. அவங்கதானே யாழ்ப்பாணத்தில thirteen ஆமியைச் சுட்டது. அதுக்கு முதல் பிரச்சனையே இல்லத் தானே.”

நான் எதிர்பார்திருந்ததை விட அவளுக்கு பல தகவல்கள் தெரிந்திருந்தது ஆச்சரியமாயிருந்தது. பெரும்பாலான சிங்களவர்களைப் போலவே இவளுக்கும் இந்தப் பிரச்சனையின் ஆணிவேர் பற்றிய அறிவில்லை. ஆனால் இந்தப் பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருக்கிறாள். அதனால் இந்தப் பிரச்சனையின் தாற்பரியங்களைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாயிருக்கிறாள். ஆகவே இவள் ஆபத்தானவளாக இருக்க முடியாது. இவளுடன் துணிந்து உரையாடலாம்.

“சரி பதின்மூன்று ஆமியைச் சுட்டதுக்கு எதற்காக சிங்கள இடங்களில் வாழ்ந்த எல்லாத் தமிழரையும் கொலை செய்தும் அடித்தும் கடைசியில் அங்கிருந்து கலைத்து வடக்கு கிழக்கிற்கு அனுப்பினீர்கள்”

“அது எல்ரீரீ செய்ததுக்குப் பழிக்குப்பழி”

“அவர்கள் எல்லோரும் எல்ரீரீஈ-யா?”

பதில் தெரியாமல் திணறுவதை உணரமுடிந்தது.

“இல்ல, ஆனா அவங்க எல்லாம் எல்ரீரீ சப்போட் தானே!”

“எண்பத்தி மூன்றாம் ஆண்டில எத்தின தமிழாக்களுக்கு எல்ரீரீஈ-யைத் தெரிஞ்சிருக்கும் எண்டு நினைக்கிறீங்க?”

“ம்ம்ம்... ஆ! ஆனா அப்பவும் many தமிழர நாங்க காப்பாத்தினது தானே”

“சரி! பிறகு எதுக்கு அவங்கள வடக்கு கிழக்குக்கு அனுப்பி வைச்சீங்க?”

“இங்க இருக்கிறது அவங்களுக்கு safe இல்லையெண்டு.”

“அப்ப வடக்கு கிழக்கு தமிழரின்ர இடம் எண்டது உங்களுக்கே தெரியுது தானே.”

“ம்ம்ம்.......ஆனா?”

“சொல்லுங்க. ”

“ஆனா எல்ரீரீ எங்கட leaders எல்லாம் கொல்லுறது தானே. ரஞ்சன் விஜேயரத்ன..”

“ரஞ்சன் விஜேரத்ன வந்து பாதுகாப்பு இணை அமைச்சரா இருந்தவர். ஆனா அவர் செத்ததை எத்தனை சிங்கள ஆக்கள் கொழும்பில வெடி கொழுத்திக் கொண்டாடினவை எண்டு தெரியுமா? 'ரயர்மாமா கியா' (tyre-மாமா போய்ற்றேர்) எண்டு எத்தனை சிங்கள ஆக்கள் சந்தோஷப்பட்டவை எண்டு தெரியுமா?”

“ம் தெரியும்! அது ஜேவிபி. அப்ப அவர் நிறைய சிங்கள ஆக்களையும் ஜேவிபி எண்டு ரயர் போட்டுக் கொழுத்தினது. சரி ஆனா பிறகு லலித் அத்துலத் முதலி, பிறகு பிரேமதாசா அவர்தான் எல்ரீரீக்கு இந்திய ஆமியோட சண்டைபிடிக்க ஆயுதமே குடுத்தது. அவங்களையெல்லாம் ஏன் செத்தச் செய்தது?”

83 இற்குப்பின்னர் நடந்த சம்பவங்கள் யாவுமே இவளுக்குத் தெரிந்திருக்கிறது என்பது புரிந்தது.

“சரி பண்டாரநாயக்காவை யாரு சுட்டது?”

அவள் முகத்தில் குழப்பம் பரவுவதை உணரமுடிந்தது.

“சரியாத் தெரியா. ஆனா ஒரு பிக்கு தான் சுட்டது எண்டு I heared"

“ஏன் சுட்டது?”

“தெரியா?”

“பண்டா-செல்வா memorandum, டட்லி-செல்வா memorandum பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கிறீங்களா?”

“இல்லை.”

“fifty-six-இல fifty-eight-இல seventy-seven-இல எல்லாம் தமிழருக்கு எதிரா நடந்த riots-அ பற்றியெல்லாம் கேள்விப்பட்டிருக்கறீங்களா?

“அப்பிடியெல்லாம் நடந்ததா?”

“eighty-one-இல யாழ்ப்பாண லைபிரறியை எரிச்சதாவது தெரியுமா?”

“அது I heared”

“அப்ப எப்படி சொல்லுறீங்க eighty-three-இல எல்ரீரீ பதின்மூன்று ஆமியைச் சுட்டதாலதான் இந்தப் பிரச்சனை வந்தது எண்டு?”

இப்போது அவள் முகம் மிகவும் குழம்பிக் காணப்பட்டது.

“ஆனா பிரபாகரண் சூசைட் அற்றாக் எல்லாம் செய்யுறது. வைபோசா படிக்கிற பிள்ளைகளைப் பிடிக்கிறது. அவங்க பாவம் தானே!”

“சரி. உங்கட அண்ணா ஏன் ஆமிக்குப் போனவர்?”

“அது அவற்ற வேலை.”

“நீங்க ஏன் ஆமிக்குப் போகேல்ல?”

“நான் படிச்சு Engineering கிடைச்சது. அப்ப போற தேவை இல்ல தானே.”

“அப்ப உங்கட அண்ணாக்கு வேற நல்ல வேலை கிடைக்காததாலதான் ஆமிக்குப் போனவர்”

“ம்ம்ம்... இல்ல. சரி...”

“ஆமி என்ன செய்யுது? அவங்க ஆக்களை கொல்லுறதில்லையா?”

“அவங்க நாட்டைக் காக்கிறதுக்குத் தானே கொல்லுறது”

“தமிழர்களுக்கும் இந்த நாட்டில உரிமை இருக்குத்தானே”

“ஓ”

“அப்ப ஏன் அவங்கள eighty-three யில சிங்கள ஆக்கள் கொலை செய்யேக்குள்ள இந்த அரசாங்கம் அவையைக் காப்பாற்றவில்லை? ஒரு அமைச்சர் let them to taste it என்று சொல்லி police-காரர்களையெல்லாம் ஒரு நடவடிக்கையும் எடுக்க விடாமச் செய்தது தானே”

“ம்ம்ம... எனக்கு இது தெரியாது. ஆனா பிரபாகரண் இல்லையெண்டா இவ்வளவு பெரிய சண்டை வந்திருக்காது தானே?”

எல்ரீரீஈ மட்டுமா சண்டை பிடிச்சது? வேற இயக்கங்கள் சண்டை பிடிக்கேல்லையா?”

“ஆ.. ஆனா எல்ரீரீஈ அவங்க எல்லாரையும் சுட்டது தானே. அது எப்பிடி? அவங்க தமிழ் தானே?”

இதற்கு என்ன பதில் சொல்வது? சகோதர யுத்தத்தை என்னவென்று சொல்வது? பாரததேசம் தன் சுயநலனுக்காய் புற்றீசல்கள் போன்று ஏராளமான தலைமைகளையும் இயக்கங்களையும் உருவாக்கி விட்டிருந்தது. அது எப்போதுமே தனி தமிழ் தேசம் என்று ஒன்று உருவாகிவிடாமல் இருப்பதில் மிகுந்த அக்கறை கொண்டிருந்தது. இந்தியாவில் திராவிடம் என்கின்ற பெயரில் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் தனித்தமிழ்நாடு என்கின்ற போராட்டத்திலும் தமிழகம் இருந்த காலம். இந்திய-சீன யுத்தத்தில் இந்தியா தோல்வியைத் தழுவிக் கொண்டிருந்த நேரம், தனித்தமிழ்நாட்டுக் கோரிக்கையை அடுத்து சிறை செய்ப்பட்டிருந்த அறிஞர் அண்ணா அவர்கள் விடுதலை செய்யப்பட்டு வெளியேவந்து தனது முதலாவது உரையில் “தனிநாட்டுக் கோரிக்கைக்கான அனைத்துக் காரணங்களும் இன்னமும் அப்படியே தான் இருக்கின்றன. ஆயினும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு தற்காலிமாக அதைப் பின்போடுகின்றோம் என்றார்.”. அதன் பின்னர் அந்தக் கோரிக்கைக்கான காரணங்கள் பற்றிய விழிப்புணர்வு தமிழகத் தமிழர்களிடம் ஏற்பட்டு விடாமல் பார்த்துக் கொள்வதில் மிகுந்த ஜாக்கிரதையாக அது இருக்கிறது என்பதே உண்மை.

சகோதர யுத்தம் நடைபெற்ற காலத்தில் சிங்களப்படை ஏனைய இயக்க உறுப்பினர்களைத் தம்மிடம் வந்து சரணடையுமாறும். அவ்வாறு சரணடைபவர்களை அவர்கள் விரும்பிய நாடுகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் அடிக்கடி அறிவித்துக் கொண்டிருந்தாலும் எந்தவொரு மாற்று இயக்கங்களைச் சேர்ந்தவர்களும் சிறிலங்காப் படைகளிடம் சென்று சரணடைந்திருக்கவில்லை. மாறாக அவர்கள் இந்தியாவிற்கும் ஏனைய நாடுகளுக்குமே தப்பியோடியிருந்தார்கள். அதன்பின் இந்தியப்படையின் துணையுடன் மீண்டும் வந்திருந்தனர். பின் இந்தியப் படைகள் வெளியேற்றப்படுகையில் அவர்கள் சிறிலங்காப் படைகளுடன் இணைந்துகொண்டனர்.

“honestly, எனக்கும் அது பற்றிப் போதிய தெளியவில்லை. ஆனா சிலவேளையில அவை தங்கடை கொள்கையிலயிருந்து விலகியிருக்கலாம். அதோட மற்ற இயக்கங்களுக்குள்ளை நிறைய உள்ப்பிரச்சனைகள் இருந்தது. ஆயுதத்தோட இருக்கிறவை தங்களுக்குள்ளயே அடிபட வெளிக்கிட்டினமெண்டால் ஒருத்தரும் மிஞசேலாது. அவை வந்து ஒரு தலைமைக்குக் கீழதான் இருக்க வேணும். அரசியல் கட்சிகளெண்டால் ஜனநாயக ரீதியில எத்தினை கட்சிகள் வேணுமெண்டாலும் இருக்கலாம். அதால பெரிசா பிரச்சனை வராது. அப்படி வந்தாலும் அதால பெரிய பாதிப்பு மக்களுக்கு வராது. ஆனா ஆயுதம் தூக்கினாக்களுக்குள்ள பிரச்சனை வந்தா அதால எத்தினை பேர் கொல்லப்படுவினம்? சிலவேளை இதுகளை நினைச்சுத்தான் பிரபாகரன் ஆரம்பத்திலையே இப்படிச் செய்திருக்கலாம் எண்டு நான் நினைக்கிறன்.”

”அப்ப அமிர்தலிங்கத்தை ஏன் சுட்டது? அவர் சும்மா ஆள்தானே?”

என்னடா இவள்? ஏதோ என்னைக் கேட்டிட்டுப் போய்ச் சுட்டது போல எல்லாத்தையும் என்னட்டைக் கேட்டுக் கொண்டிருக்கிறாள்? யோசித்தேன்.

“honestly I too don't know.”

“I know you don't know. I'm just asking your openion.” - சிரித்தாள்.

உண்மையிலேயே எனக்கு நடந்து முடிந்த சம்பவங்களுக்கு விளக்கம்/விமர்சனம் சொல்லுபவர்களைக் கண்டாலே பிடிக்காது. அவர்கள் சொல்லுவதைப் பார்க்கும்போது ஏதோ தங்களைக்கேட்டுத்தான் எல்லாம் நடத்திமுடிக்கப்பட்டது போலவும். அதுதான் சரி என்பது போலவும் மேதாவித்தனமாகச் சொல்லுவார்கள். உண்மையிலேயே சரி தப்பு என்று எதுவும் கிடையாது. அவை அனைத்துமே நாங்கள் எங்களை அடையாளப் படுத்திக் கொள்பவற்றிற்குத் தகுந்தால்போலவே பார்க்கப்படுகின்றது. நான் என்னை ஒரு சிங்களவனாக அடையாளப்படுத்திக் கொண்டிருந்தால் பிரபாகரன் செய்வது தப்பாகவும் சந்திரிக்காவும் ரத்வத்தையும் செய்வது சரியாகவும் தோன்றியிருக்கும். நாவற்குழியில் வன்புணர்ச்சிக்குள்ளாக்கப்பட்டுக் கொல்லப்பட்ட கிருஷாந்தியோ அன்றி திருகோணமலையில் வன்புணர்ச்சியின் பின் பிறப்புறுப்பிற்குள் குண்டு வைத்துக் கொல்லப்பட்ட கோணேஸ்வரியோ என்னைப் பாதித்திருக்க மாட்டார்கள். மாறாக இரண்டு மாதங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இருக்கையில் நடந்த குண்டுத்தாக்குதலில் கொல்லப்பட்ட யாழ் படைத்தளபதி பிரிகேடியர் சுசந்த மெண்டிசின் சாவிற்கு ஆத்திரப்பட்டிருந்திருப்பேன்.

அது 11 செப்ரம்பர் 1998. எங்கள் Engineering training period. site-இலிருந்து மதியம் நேரத்துடன் திரும்பியிருந்தோம். நண்பர்களுடன் சென்று நல்லூர் பின் வீதியில் உள்ள RIO-வில் மீகுளிர்களி (ஐஸ்கிறீம்) அருந்தி விட்டு அவர்கள் பருத்தித்துறைப் பேரூந்தில் ஏறிக்கொள்ள நாங்கள் மிதிவண்டியில் வீட்டிற்குத் திரும்பிய சற்று நேரத்தில் பாரிய குண்டுச் சத்தம். சில மணி நேரங்களிலேயே நல்லூர் மாநகரசபைக் கூட்டத்தினுள் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் விபரங்கள் வாய்வழியாகப் பரவிக்கொண்டிருந்தன.

“Hey! I asked your openion"

நதீஷா என்னை விடுவதாகத் தெரியவில்லை.

“ம்ம்ம்....Did you heared about lord Krishna?”

“ஓ. தெரியும். நீங்க தமிழில சொல்லுறது. எனக்கு விளங்கும்”

நான் விளங்கின மாதிரித்தான். இவளுக்கு இண்டைக்குத் தீத்துறதுதான். முடிவெடுத்தேன்.

விமர்சனங்களே ஒருவகைக் கருத்துத் திணிப்புத்தானே. நடந்து முடிந்த சம்பவங்களை எங்கள் விருப்புவெறுப்பிற்கேற்ப திரித்துச் சொல்வதுதானே. வாடி வா!

**“பாரதச்சண்டை தொடங்க இருக்கேக்குள்ள அருச்சுனனுக்கு கவலை வந்திற்றுது. எதிரில் நிற்பவர்கள் அவனுடைய குருவும் பிதாமகனும் மற்றும் பாசத்திற்கும் மதிப்பிற்குமுரிய பல பெரியோர்களுமே. அவர்களைக் கொல்ல வேண்டி வருமே என்கின்ற கவலையில் சண்டையைத் தவிர்த்து மீண்டும் காட்டுக்குப் போய்விடப் போவதாகச் சொல்கிறான். அப்போது கிருஷ்ணன் அவனைத் தடுத்து விளக்கமளித்து அவனை மீண்டும் ஆயுதம் ஏந்த வைக்கின்றான். அப்பிடிப் பார்த்தால் கிருஷ்ணனிலும் பார்க்க அருச்சுனன் தானே நல்லவன்?”

“Yes of course”

**“பிறகு எதுக்கு கிருஷ்ணனைக் கடவுளாகக் கொண்டாட வேண்டும்?”

தலையைச் சொறிந்தாள்.

**“அருச்சுனன் அவர்களைக் கொல்ல மறுத்ததால் நல்லவன் என்று ஆகிவிட முடியாது. அவனுக்குக் கொல்வது பிரச்சனையல்ல. அவனது பிரச்சனை எதிரில் நிற்கும் ஒரு சிலரே. பீஷ்மரையும், துரோணரையும் இன்னும் சிலரையும் அந்தக் களத்தில் இருந்து அகற்றிவிட்டால் மற்றவர்களைக் கொல்வதில் அவனுக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஆனால் கிருஷ்ணனோ தான் கட்டிக்காத்த தன் முழுப்படையையுமே எதிர்த்தரப்பிற்காகக் கொடுத்து விட்டுத் தனது படையினரையும் சேர்த்து அளிப்பதற்கு அருச்சுனனுடன் சேர்ந்து நிற்கின்றான். இலக்கைத் தீர்மானித்த பின்னர் அதற்குத் தடையாக வருபவர்களைக் கொல்வதில் கிருஷ்ணனுக்கு எந்தப்பாரபட்சமும் கிடையாது. அதனால்தான் அவன் மேலானவனாகப் போற்றப்படுகின்றான். நான் என்ன சொல்ல வாறன் எண்டு விளங்குதா?”

தலையை ஆட்டினாள்.

“ஆனா பிரபாகரன் பிள்ளைகளைப் பிடிச்சு brain wash பண்ணித்தானே சண்டைக்கு அனுப்புறது தானே.”

“உங்கட அண்ணியின்ர அண்ணாவும் அங்கிளும் செத்ததைக் கேட்ட உடனே உங்களுக்கு எப்பிடி இருந்தது?”

“எல்ரீரீ எல்லாத்தையும் அடிச்சுக் கொல்ல வேணும் போல”

“சரி எல்ரீரீ உங்கட வீட்டவந்து உங்கட சொந்தக்காரரையெல்லாம் பிடிச்சு சுட்டா என்ன செய்வீங்கள்?”

“என்ன செய்வனா? கையில கிடைக்கிறதால எடுத்து அவங்களை அடிப்பன். என்னெட்டத் துவக்கு இருக்குமெண்டா அவங்கள் எல்லாரையும் சுட்டுத்தள்ளிப்போடுவன்”

“அப்ப உங்களுக்கொரு நியாயம் மற்றாக்களுக்கு ஒரு நியாயமா?”

“என்ன சொல்லுறீங்க?”

“இதைத் தானே உங்கட ஆமியும் எங்கட இடத்தில செய்யுது? அப்ப அதை நேர கண்ணுக்கு முன்னால பாக்கிறவங்கள் சும்மா இருப்பாங்களா?”

அவள் முகம் முற்றிலுமாய் மாறிப் போயிருந்தது.

======================
** மூலம் : சற்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் உரையிலிருந்து

Thursday, November 25, 2010

வேரென நீயிருந்தாய்...(20)

முதல்நாள் practical session ஆதலால் விரைவிலேயே முடித்து விட்டிருந்தோம்.

“How is Jaffna?” இதுவரை நேரமும் அமைதியாயிருந்தவள் திடீரென வினவினாள்.

“It's OK. as usual”

“But we are not usual”

அவள் நோர்மலாக இல்லை என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்தாலும் அதைப்பற்றி அவளிடம் கேட்பதற்கான தயக்கத்தில் இருந்த அமைதியைக் கலைத்து,

“Why? what happenned?” -வினவினேன்.

“நீங்கட ஆக்க தாண்”

“what?”
-வாயிலிருந்து வார்த்தைகள் வெளியேறிய பின்னர்தான் உறைத்தது அவள் ஆங்கிலமும் சிங்களமும் இல்லாதவொரு மொழியில் கதைத்தது.

“தெமிலிலதாண் சொல்றது. விலங்கேல்ல?”

இப்ப இவள் என்னதான் சொல்லவாறாள்? எனக்கு மண்டை காயத்தொடங்கியது.

“Sorry, I couldn't understand”

“நீங்கலுக்கெல்லாம் விலங்காது. நாங்க தெமில் கதைக்கிற. நீங்க இங்கிரிசு கத்தாகரணவா. சொறிசொறி இங்கிரிசு கதைக்கிற”

“இப்ப என்ன சொல்ல வாறீங்க?” எழுந்த எரிச்சலை அடக்கிக்கொண்டே கேட்டேன்.

“நான் வாற இல்ல. போறது.”

இவளுக்கேதும் விசர்பிடித்து விட்டதோ? மனதுக்குள் சந்தேகம் எழுந்தது.

“I'm really sorry. I couldn't understand what you are talking. I don't like to talk anymore.”
சற்றுக் காட்டமாகவே கூறினேன்.

அவள் கண்களிலிருந்து கண்ணீர்த்துளிகள் வெளியே குதித்தோடுவதற்குத் தயாராய் இருப்பது தெரிந்தது. பார்க்கப் பாவமாய்த் தெரிந்தாலும் அடியும் தெரியாது நுனியும் தெரியாது அவளுடன் கதைத்தால் எனக்கும் விசர் பிடித்துவிடும் போல் இருந்தது. ஆயினும் அடிமனதினுள்ளே அவள்மேல் அனுதாபமும் உண்டாயிற்று. பெண்ணென்றால் பேயுமிரங்குமாமே.

“Hey Natheesha! See, if you didn't tell the things clearly, then what can I do?. Honestly I couldn't understand your Tamil. Please tell me it in English. Then only I can help you.”

அவள் நக்கலாய்ச் சிரிப்பதாய்ப் பட்டது.

“You can't help us. Not only you, even Prabhakaran comes, he can't do anything.”

அதிர்ந்தேன். நான் என்னவோ கதைத்துக் கொண்டிருக்கும் போது இவள் என்னவோ கதைக்கிறாளே.

“What do you mean by?”

“I meant even he can't give the live for the people he killed.”

“What?”

“I told it in English. Did you Understand atleast that?”

அவள் மிகுந்த உணர்ச்சிவசப்பட்டுத் தெரிந்தாள். எனக்குள் பயம் உருவாகத் தொடங்கியிருந்தது. ஒரு பெண், அதுவும் சிங்களத்தி, அதிலும் அவர்களது இடத்தில் வைத்து என்னிடம் நாட்டில் நடக்கின்ற சண்டையை பற்றி உணர்ச்சிவசப்பட்டு விவாதித்துக் கொண்டிருப்பதை வேறு யாரேனும் சிங்களப் பெடியங்கள் பார்த்தால், மனதுக்குள் நான் கம்பிகளை எண்ணத் தொடங்கியிருந்தேன்.

“Natheesha! please...”
குரலைத் தாழ்த்திக் கெஞ்சும் என்னைப் பார்க்க எனக்கே கேவலமாய் இருந்தது. என்ன இழவுக்கு இவள் எனக்கு குறூப்மேற்றாக வந்து சேர்ந்தாளோ? மனது அங்கலாய்த்தது. இந்த வருஷம் எப்பிடித்தான் practical எல்லாம் போகப் போகுதோ? ஏக்கமாய் வந்தது. அளவுக்கு அதிகமாக ஆசைப்படுகிற ஆம்பிளைகளும் அளவுக்கு அதிகமாகக் கோபப்படுற பொம்பிளைகளும் நல்லா வாழ்ந்ததா சரித்திரம் கிடையாது என்கின்ற சூப்பர்ஸ்டாரின் பன்ச் டயலாக் ஞாபகத்தில் வந்து சென்றது.

அவளைப் பார்த்தேன்! இன்னமும் உணர்ச்சிகள் அடங்காதவளாகவே தெரிந்தாள். உதடுகள் துடிப்பது தெரிந்தது. கோபத்தில் முகம் சிவந்திருப்பது அவளது அழகைக் குறைப்பதாய்ப்பட்டது. காடு பத்தி எரியேக்க கரடி காவோலை இழுத்திச்சாம். என் இருப்பே கேள்விக்குறியாக ஆகிக் கொண்டிருக்கையில் அவள் அழகைப்பற்றி எழுந்த சிந்தனையை இன்னொரு மனம் கண்டித்தது. ஆழ்ந்து உற்றுக் கவனித்தால் சிந்தனைகள் யாவும் ஒரு புள்ளியிலிருந்து எழுவதாய்த் தெரியவில்லை. அவை பல்வேறு இடங்களிலிருந்தும் ஒரே நேரத்தில் வெவ்வேறு எண்ணக்குமிழ்களாய் முகிழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒருவகையில் அவைகூட நீர்க்குமிழிகள் போல்தான் சில எண்ணக்குமிழ்கள் சிலநொடிகள் கடந்தும் தொடர்ந்து வளர்ந்து பெரிதாகிக் கொண்டிருக்கின்றன. சில குமிழ்கள் உருவாக ஆரம்பிக்கையிலேயே காணாமல் போய்விடுகின்றன. சில குமிழ்கள் நொடிப்பொழுதுகளில் உடைந்து விடுகின்றன.

ஏறத்தாழ ஒரு வருடத்திற்கு முன்னர் நானிருந்த நிலையுடன் ஒப்பிடுகையில் இன்றைய நிலையை ஒப்பிட்டுப் பார்க்க ஆச்சரியமாய் இருந்தது. எந்தப்பெண்ணையும் ஏறெடுத்தும் பாராமல் நானுண்டு என்பாடுண்டு என்றிருந்தவன் இன்றைக்கு என்னவென்றே தெரியாதவொரு காரணத்திற்காய் அவதிப்பொழுதில் மண்டியிடும் நிலையில். என்றைக்கு இவளை முதன்முறையாய்ப் பார்த்தேனோ அன்றைக்கே பட்டினத்தாரும் கண்ணதாசனும் என்னைக் கைகழுவி விட்டிருந்தனர். பெண்கள் என்றாலே எப்போதும் சண்டைதானா? எப்போதோ படித்த பழைய பாடல் விவேக சிந்தமணியென நினைக்கிறேன், நினைவினில் வந்தது.

வண்டுகள் இருந்திடின் மதுவை உண்டிடும்
தண்டமிழ் இருந்திடின் சங்கம் சேர்ந்திடும்
குண்டுணி இருந்திடின் கோள்கள் மிஞ்சிடும்
பெண்டுகள் இருந்திடின் பெரிய சண்டையே.

அவள் மேல் வைத்திருந்த மரியாதை மடமடவென சரியத் தொடங்கியது. அவளை உறுத்துப்பார்த்தவிட்டுத் திரும்பிக் கொண்டேன்.

“Jeyanthan! I'm sorry, really really sorry!, I was so upset for last few weeks. That's what I behaved like this. I'm extremely sorry.”

மனதிற்குள் ஏதோ இளகியது

“It's OK. Leave it."

“Thanks Jeyanthan! You know one of my uncle and my syster-in-laws brother have been killed recently in Kilinochci. My sister-in-law is so upset. Nobody can console her. Now she hates all Tamils. Yesterday she scolded me too”

“mmm.... Now I can understand your feelings! Yah! her feeling is accceptable”

“For what the hell the LTTE is fighting for?”

இவளுக்கு எப்படிப் புரியவைப்பது?

“You see! It's all because of LTTE”
என்ன சொல்லி இவளுக்கு விளங்கப்படுத்துவது. சொன்னாலும் இவளால் விளங்கிக்கொள்ளத்தான் முடியுமா? என்னைத் தப்பாக எடுத்துக் கொண்டு பொலிஸில் மாட்டிவிட்டு விடுவாளோ? சந்தேகங்கள் மனதைக் குடைந்தன.

“Natheesha! I guess as per your current situation, it's difficult to you to understand the things. at any cost we can't change the things which have happenned already. I hope you know the story about the mother of the dead boy and the lord Budhdha. if you want, we can talk about it after some times?”

“Of course! Thank you. Thank you so much. Now I feel so comportable. Definetly we will talk about it soon.”

நீண்ட நேரமாக நாம் விவாதித்தக்கொண்டிருப்பதைத் தூரத்திலிருந்து அவதானித்த போதனாசிரியர் எங்களை நோக்கி வருவது தெரிந்தது.

“if you have you finished the things, you can submit your reports and leave the lab now”



பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18 பாகம்-19

Wednesday, November 24, 2010

வேரென நீயிருந்தாய்...(19)

யாழிலிருந்து வெளியிடங்களுக்கான போக்குவரத்துத் தொடர்புகள் யாவும் துண்டிக்கப்பட்டு ஏறத்தாழ மூன்று வாரங்கள் கடந்து விட்டிருந்தன. இரண்டாம் ஆண்டிற்கான எமது கற்கை நெறிகள் 26 ஒக்ரோபர் 1998 அன்று ஆரம்பிக்கப்பட இருப்பதாக ஏற்கனவே அறிவக்கப்பட்டிருந்தது. யாழ்ப்பாணத்தில் எமது பிரிவைச் சேர்ந்த சுமார் 40 மாணவர்களும் எப்படிச் செல்வதென்று தெரியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருந்தாலும் கணிசமான அளவு மாணவர்கள் இங்கே இருப்பதனால் பல்கலைக்கழகம் எங்களுக்கு ஏதாவது உரிய நடவடிக்கை எடுக்கும் என்கின்ற நம்பிக்கையும் இருந்தது. யாழ்ப்பாணத்தின் இதுவரைகால வரலாற்றிலேயே பெருமளவிலான மாணவர்கள் பொறியியற் பீடங்களுக்கு தெரிவான பெருமை உயர்தரம் 1995 (A/L 1995) இனையே சாரும். அதற்குப் பின்னர் யாழ்ப்பாணம் இராணுவக்கட்டுப்பாட்டிற்குள் வந்ததன் பிற்பாடு மின்சார வசதிகள் இருந்தும் கூட பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவாகுவோரின் விகிதாசாரம் பாரிய அளவில் வீழ்ச்சி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்தப் பெருமையை உயர்தரம் 1995 பெறுவதற்குக் காரணமாயிருந்தவர்கள்? பரீட்சை நெருங்குகையில் எத்தனையோ இடப்பெயர்வுகள், சொத்தழிவுகள், உயிரிழப்புக்கள். பரீட்சை நடைபெறுமா என்பது கூட பரீட்சை மண்டபத்தில் வினாத்தாளினைக் கையில் பெறும்வரை சந்தேகமாய்த்தானிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிவடையும் வரையிலும் பரீட்சைகள் தொடர்ந்து நடக்குமா என்கின்ற நம்பிக்கையீனம் தொடர்ந்து கொண்டேயிருந்தது. பரீட்சைகள் யாவும் முடிந்த சில தினங்களுக்குள்ளேயே ஒக்ரோபர் 30 இல் ஒட்டுமொத்த வலிகாமமும் இடம்பெயர்ந்து விட்டது. அதுவரை காலமும் அந்த இடப்பெயர்விற்கான அவசியத்தினைத் தாமதப்படுத்தி விட்டிருந்தவர்களை நினைக்கையில் நெஞ்சு நெகிழ்கிறது.

22 ஒக்ரோபர் 1998 அன்று அந்த உறுதிப்படுத்தப்பட்ட செய்தி எங்களை வந்தடைந்திருந்தது. மறுநாள் யாழிலிருந்து திருமலை செல்வதற்கான கப்பல் ஆயத்தமாகவிருப்பதால் மறுநாள் அதிகாலையில் யாழ் புகையிரத நிலையத்திற்கு வருகை தருமாறு அறிவித்திருந்தார்கள். யாழிலிருந்து வெளியே செல்வதற்காக பெருமளவிலானோர் அந்தரித்துக் கொண்டிருந்தனர். கடந்த 25 நாட்களாக யாழிலிருந்தான வெளியிடங்களுக்கான போக்குவரத்துத் துண்டிக்கப்ட்டிருந்தது. 1200 பயணிகள் வரை இந்தக் கப்பலில் செல்லலாம் என்று அறிவிக்கப்பட்டு மக்களுக்கு கப்பலில் செல்வதற்கான பயணச்சீட்டுக்களும் விற்கப்பட்டுக் கொண்டிருந்தன. பல்கலைக்கழக மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட முதல் இரண்டு பேரூந்துகளுக்குள் நாங்கள் திணிக்கப்பட்டுதட தெல்லிப்பழையில் இறக்கிவிடப்பட்டோம். மாலை மூன்று மணியளவில் மேலும் சில பேரூந்துகளில் பயணிகள் வந்து சேர்ந்திருந்தனர். 1200 பயணிகளில் பாதிப்போர் கூட வந்து சேர்ந்திருக்க மாட்டார்கள். திடீரென சில பச்சைநிறப் பேரூந்துகள் காங்கேசன்துறைப் பக்கமாகவிருந்து வந்து சேர்ந்தன. அவற்றின் யன்னல் கண்ணாடிகள் யாவும் கறுப்புவர்ணம் பூசப்பட்டு வெளியால் எதையுமே பார்க்க முடியாதவாறு இருந்தது. அவசரஅவசரமாக வந்திருந்த பயணிகள் யாவரையும் அந்தப் பேரூந்துகளில் அள்ளி அடைத்துக் கொண்டு காங்கேசன்துறை துறைமுகத்தை அடைகையில் மாலை நான்கரை கடந்து விட்டிருந்தது. எங்கள் அனைவரையும் பேரூந்துகளில் இருந்து இறக்கி உடனடியாகவே கப்பலின் அடித்தட்டுக்கு முந்திய தளத்தி்ற்குள் செலுத்திக் கொண்டிருந்தார்கள். உள்ளே புழுங்கி அவிந்து கொண்டிருந்தது. நீண்ட நேரமாகியும் கப்பல் புறப்படுவதற்கான அறிகுறிகளைக் காணோம். அந்தத் தளத்தை விட்டு வெளியே செல்வதற்கான அனுமதி எங்களுக்கு மறுக்கப்பட்டிருக்க வெக்கையால் ஏற்பட்ட வியர்வையில் குளித்துக் கொண்டிருந்தோம்.

சில மணிநேரங்களின் பின்னர் கப்பல் நகரத் தொடங்குவதை உணர முடிந்தது. பின் மறுநாள் காலையிலேயே திருமலைத் துறைமுகத்தைச் சென்றடைந்திருந்தாலும் கப்பலைக் கரைக்கு நகர்த்தாமல் சிறுசிறு வள்ளங்கள் கொண்டு கொஞ்சம் கொஞ்சமாக பயணிகளை இறக்கிக் கொண்டிருந்தார்கள். எங்கள் முறை வந்ததும் மேல்தளத்துக்கு வந்து ஆசுவாசமாக வெளிக்காற்றைச் சுவாசித்தோம். வள்ள்தில் பயணிக்கையில் அருகிலிருந்தவன் “அங்க பாருங்கடா” எனச் சொல்லவே அவன் காட்டிய திசையில் பார்த்தோம். நாங்கள் வந்த அதே கப்பலிலிருந்து மற்றப்பக்கமாக கடற்படைக் கலங்களினூடாக நீலச்சீருடை தரித்த கடற்படையினரை வெளியேற்றிக் கொண்டிருந்தார்கள். 1200 பொதுமக்கள் பயணிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், எங்களுடன் வந்திருந்த பயணிகளின் எண்ணிக்கை 500 இலும் குறைவானதாக இருந்ததற்கான காரணம் வெளிப்படலாயிற்று.

அன்றைய இரவே அக்பர் விடுதியை அடைந்து சிரேஷ்ட மாணவர்களின் அறைகளில் 'கஜே' அடித்து விட்டு (இலவசமாக விடுதிச் சட்டத்திற்கு முரணான வகையில் தங்குதல்) மறுநாள் வெளியிடங்களில் அறைகளைத் தேடியலைந்து அன்றைய இரவே புதிய இடங்களுக்குக் குடியேறினோம். தொடர்ச்சியான பயணக்களைப்பும் அலைச்சலும் காலை தாண்டியும் எங்களை உறக்கத்தில் ஆழ்த்தியிருந்தது. இரண்டாம் வருடத்தின் முதல் நாளிலேயே காலை வேளை விரிவுரைகளைத் தவறவிட்டிருந்தோம். மதிய உணவை முடித்துவிட்டு வந்து ஆய்வுகூடங்களை அலசியதில் அன்றைக்கே Elect lab-இல் செய்முறை வகுப்பு இருந்தது தெரிய வந்தது. இந்தவருடத்தில் இருவர் கொண்ட குழுக்கள். இந்தவருடமும் நதீஷா தான் குறூப்மேற். அம்மாவுடன் இருந்த இத்தனை காலமும் நதீஷா என்கின்ற ஒருத்தி என் நண்பியாகி விட்டிருந்ததை மறந்தே போயிருந்தேன். அம்மாவுடன் இருந்த ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு விதமாகக் கழிந்திருந்தன. சில நாட்களில் மிக்க மகிழ்ச்சியாகக் கழிந்திருந்தது. விதம்விதமாக சமைத்துப் போட சப்புக்கொட்டிச் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். அனேக நாட்களில் இரவில் வெள்ளைப்பி்ட்டுடன் கயல்மீன் பால்சொதியும் அல்லது மணக்கமணக்க நண்டுக் கறியும் வெழுத்துவாங்கியிருந்தேன். காலை வேளைகளில் பாலப்பம், உழுத்தங்கழி, தேசையென என்னை அசத்தியிருந்தார் அம்மா. எங்காவது சண்டை ஆரம்பித்து விட்டால் அம்மாவின் முகத்தில் கவலைகள் கவிந்து கொள்ளும். சமைக்கவும் மறந்து சாப்பிடவும் மறந்து ஆழ்ந்த சிந்தனையுடன் கடவுளைப் பிரார்த்தித்தபடியே இருப்பது அவரின் வாடிக்கையாகிவிடும். என்னைப் பொறுத்த வரையில் அக்காவுக்கு நித்திய கண்டம் பூரண ஆயுசு என்கின்ற உணர்வே ஏற்பட்டிருந்தது. மணலாற்றில் 1993 இல் இயக்கம் பெயரிட்டு நடாத்திய முதலாவது தாக்குதலான இதயபூமி-1 இனைக் கேட்ட நாளிலிருந்து அண்மையில் நடந்துமுடிந்த ஓயாத அலைகள்-2 வரை ஒவ்வொரு சண்டைப் பொழுதுகளிலும் அம்மா அக்காவிற்காகப் பிரார்த்திப்பதைப் பார்த்துப் பார்த்து அக்காவிற்கு மரணமே கிடையாது என்கின்ற எண்ணம் ஊறிப் போயிருந்தது.

Elect lab - இற்குள் நுழைந்து எங்கள் குழுவிற்கான இருப்பிடத்தைத் தேடுகையில் நதீஷா ஏற்கனவே வந்து விட்டிருப்பது தெரிந்தது.

“Hi! how was your training and holiday? how is your mum?"

“Thanks! it was good, my mother is also fine. what about you?”

“It's OK”
அவள் சிரிக்க முயற்சித்துத் தோற்பது தெரிந்தது. வழமையாகப் புன்னகையைத் தவழவிட்டுக் கொண்டிருக்கும் அவள் வதனத்தில் சோகம் சூழ்ந்திருப்பது தெரிந்தது.

“Anything wrong?. It seems like you are not happy”
பற்களால் உதடுகளைக் கடித்து சோகத்தை அடக்குவது தெரிந்தது. என்னிடம் சொல்லலாமா விடலாமா என்கின்ற தயக்கமும் குழப்பமும் அவள் மனத்திற்குள் ஓடுவதை முகம் காட்டிக்கொண்டிருந்தது. எம்மை நோக்கிப் போதனாசிரியர் வருவது தெரியவே அன்றைய செய்முறைக்காக வைக்கப்பட்டிருந்த குறிப்பினில் பார்வையைத் திருப்பினோம்.

பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17 பாகம்-18

Tuesday, November 23, 2010

வேரென நீயிருந்தாய்...(18)

இரத்மலானை விமானப்படைத் தளத்திற்குள் நுழைந்திருந்தோம். முதன்முதலாக வான்வழிப் பயணம். துள்ளிக்குதித்த மனதுக்கு நடைபெற்ற பாதுகாப்புக் கெடுபிடிகளும் சோதனைகளும் பெரிதாகத் தெரியவில்லை. பேரூந்தில் சென்று விமானத்தை அடைந்தோம். வாழ்வில் முதல் தடவையாக ஒரு விமானத்தினை அருகே நின்று கண்களால் பார்க்கின்றேன். Lion Air என்கின்ற பெயருடன் அந்த இயந்திரப்பறவை தன் சிறகை விரித்தவாறே நீட்டி நிமர்த்தி நின்றிருந்தது. வானத்தில் பறந்து செல்கின்ற விமானங்களை அண்ணாந்து பார்க்கின்ற ஒவ்வொரு தடவையும் அவை கீழே விழுந்து நொறுங்காதா என்று ஏக்கங்களே இதுவரை என்னுள் எழுந்திருக்கின்றன. இதுவரைகால எனது வாழ்வில் விமானங்கள், அத்தனையும் போர் விமானங்களே, தந்தவிட்டிருந்த எனது அனுபவங்களே அந்த ஆதங்கத்தை என்னுள் உண்டு பண்ணி விட்டிருந்தன. இப்போது நானே இந்த விமானத்தில் பயணிக்கப் போகின்றேன். இப்போது இந்த விமானம் விழவேண்டும் என்கின்ற ஆதங்கம் உண்டாகுமா? எண்ணிப் பார்க்க சிரிப்பாய் வந்தது. தனக்குத் தனக்கெண்டால் சுளகு படக்குப்படக்கெண்டுமாம் என்று சும்மாவா சொன்னார்கள்? உள்ளே ஏறுவதற்காக வைக்கப்பட்டிருந்த ஏணிப்படிகள் வழியே ஏறி இருக்கையில் அமர்ந்து முன்னே வைக்கப்பட்டிருந்த தகவல் குறிப்பின் பிரகாரம் ஆசனப்பட்டியை அணிந்து கொண்டேன். விமானம் தரையில் ஓடி, வேகத்தை அதிகரித்து பின் வேகத்தைக் குறைத்து 180 பாகையில் திரும்பித் தரித்து நின்று உறுமியது. பின் மீண்டும் ஓடவாரம்பித்து வேகத்தைக்கூட்டிக் கூட்டி, சாளரங்களின் வழியே கீழே பார்க்கையில் தரை வழுவிக் கொண்டிருக்க சட்டென அடிவயிற்றில் மேல்நோக்கிய விசையொன்றினை உணர்கையில் விமானம் தன் நாசியினை மேலே உயர்த்தியிருந்தது.

முகில்களைத் துளைத்துச் சென்று கொண்டிருந்தது விமானம். தரையில் மட்டுமல்ல வானிலும் மலைகளும் பள்ளத்தாக்குகளும் உண்டு. ஆயினும் அவை கணப் பொழுதுகளில் மாறிக் கொண்டிருப்பவை. இப்போது என்னால் முகில்களின் இன்னோர் பரிமாணத்தையும் பார்க்கக் கூடியதாகவிருந்தது. பயணங்கள் எங்கள் மனப்பரப்பை விரிக்கின்றன. கீழிருந்து பார்க்கையில் புரியாத அல்லது தெரிந்திராத காட்சிகளையெல்லாம் இப்போது காணக்கூடியதாகவிருந்தது. கண்ணால் காண்பவையெல்லாம் எபப்போதுமே உண்மையல்ல என்பது புரிந்தது. இலங்கையின் மேற்குக்கரை வழியே பயணிக்கும் விமானத்தினூடாக இலங்கைத்தீவின் கரையோர நெழிவு சுழிவுகளைப் பார்ப்பது ரம்மியமாயிருந்தது. புத்தளம் தாண்டி மன்னாரை அண்மிக்கையில் இராமர் அணை எனச் சொல்லப்படும் மணல் திட்டுக்கள் இலங்கைக்கும் இந்தியாவிற்குமிடையிலான பாக்கு நீரிணையில் மிகத் தெளிவாகத் தெரிந்தன. ஏறத்தாழ ஒருவருடத்தின் பின் தாயக மண்ணில் கால் பதிக்கப் போவதான உணர்வே நெஞ்சுக்குள் பரவசத்தை ஏற்படுத்தியது. விமானம் தாழப்பதிந்து கடலின் மேல் அரைவட்டமடித்துப் பின் பலாலி விமான தளத்திற்குள் இறங்கத் தொடங்கியது.

யாழ்நகரினை பேரூந்தில் வந்தடைந்து பின் முச்சக்கர வண்டியில் வீட்டினை அடைகையில் அம்மா வாசலில் நின்றிருந்தார். அவர் மிகவும் இளைத்திருந்ததாய்த் தெரிந்தது. ஓட்டோவிலிருந்து இறங்கியதும் கட்டிணயைத்து முத்தமிட்டவர்,
“என்னடா நல்லா வயக்கெட்டுப் போனாய். சாப்பாடு ஒத்து வரேல்லையா?”

சிரிப்பாய் வந்தது. இங்கிருந்து போகையில் 28 ஆயிருந்த இடுப்பளவு இப்போது 30 ஆகியிருந்தது. எல்லா அம்மாமாருக்குமே தங்கள் பிள்ளைகள் தங்களை விட்டு விலகியிருக்கையில் உணவிற்கு என்ன செய்கின்றார்களோ? எப்படிச் சமாளிக்கின்றார்களோ என்கின்ற ஏக்கங்கள் இருக்கத்தானே செய்கின்றன. தாயோடு அறுசுவை போம் என்று சும்மாவா சொன்னார்கள்?

நாட்கள் வேகமாக ஓடின. 1998 செப்டம்பர் 26. தியாகி திலீபனின் பதினோராவது நினைவு தினத்தையொட்டி யாழ்நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. அன்றைய தினம் சனிக்கிழமையாதலால் வெளியே செல்லவேண்டிய தேவையேதும் இருக்கவில்லை. அன்றைய தினமும் அமைதியாகவே கழிந்திருந்தது. மறுநாள் மதியமளவில் அந்தச் சேதி பரவத் தொடங்கியிருந்தது. அதை உர்ஜிதம் செய்யுமாற்போல் அம்புலன்ஸ் வண்டிகள் அபாய சமிக்ஞைகளை அலற விட்டவாறே கண்டி ஏ9 வீதிவழியே வந்து பலாலியை நோக்கி விரைந்து கொண்டிருந்தன. கிளிநொச்சியில் கடும் சண்டை நடைபெறத்தொடங்கியிருந்தது. வெற்றிநிச்சயம் என்று சொல்லி வவுனியாவிலிருந்து புறப்பட்ட சிங்களப்படை புளியங்குளத்தில் முக்கி முனகி மாங்குளத்திற்கு அண்மையில் திணறித் தத்தளித்துக் கொண்டிருந்தாலும் மாங்குளத்தை ஏலவே கைப்பற்றி விட்டதாக இராணுவம் அறிவித்து விட்டிருந்தது. விரைவில் கிளிநொச்சியிலிருந்து கண்டிக்கு தரைவழிப் பாதையைத் திறந்துவிடப்போவதாக ஜெனரல் அனுருத்த ரத்வத்த அவர்கள் சூழுரைத்திருந்தார்கள். ஆகையினால் மாங்குளத்தில் போக்குக் காட்டிவிட்டு இப்போது கிளிநொச்சியிலிருந்து முன்னேறத் தொடங்கியிருக்கின்றது சிறிலங்காப்படைகள் என்றே ஆரம்பத்தில் எல்லோரும் பேசிக் கொண்டனர். ஆயினும் அன்றைய இரவிற்குள்ளேயே இயக்கம்தான் கிளிநொச்சியைப்பிடிப்பதற்கான சண்டையைத் தொடங்கியிருப்பதாக வானொலியூடாக அறியக் கிடைத்திருந்தது. அம்மா அந்தரிக்கத் தொடங்கியிருந்தார். ஆண்டவனிடம் அக்காவையும் அவளைச் சேர்ந்தவர்களையும் காப்பாற்றுமாறு பிரார்த்தித்தபடியே இருந்தார். Welcome party-யில் நடந்த சம்பவத்தின் பின்னர் மானசீகமாய் அக்கா என்னிடம் வருவது நின்று போயிருந்தது.

கடவுள் இருக்கு இல்லை என்கின்ற விவாதம் எனக்கு இப்போதைய நிலையில் அர்த்தமற்றதாய்ப் பட்டது. எனக்கு என்னுடைய அக்கா வேண்டும். எதுவுமே செய்ய முடியாத கையறு நிலையில் கை தானாகவே கூப்பியது. திக்கற்றவனுக்குத் தெய்வமே துணை என்பார்கள். அதன் பொய்மெய்களுக்கப்பால் அதை நம்பிப் பிரார்த்திப்பதே இப்போதைக்கு நெஞ்சுக்கு நிம்மதி தரக்கூடிதொன்றாக இருந்தது. மறுநாள் கிளிநொச்சி வெற்றிகொள்ளப்பட்ட சேதி களிப்பினைத் தந்தாலும் அக்காவின் நிலைமை தெரியாமல் நானும் அம்மாவும் கலங்கிக் கொண்டிருந்தோம்.

அடுத்தநாள் 29 செப்ரம்பர் 1998 திங்கட்கிழமை. இப்படியே அம்மாவை விட்டுவிட்டு வெளியே செல்ல ஒருமாதிரி இருந்ததால் நானும் Training site -இற்குப் போகவில்லை மாலை நெருங்குகையில் தீபன் வந்தான்.
“மச்சான் மத்தியானம் வெளிக்கிட்ட lion-air plane -ஐக் காணேல்லையாமடாப்பா”

“என்னடா சொல்லுற?”

“ஓமடாப்பா! செக்கண்ட் பிளைற் சனம்தான் அதில போனதுகள். ஆரும் தெரிஞ்ச ஆக்களும் போச்சினமோ எண்டும் தெரியேல்லை”

அடுத்தநாள் தினசரிகள் 48 பயணிகள் உட்டபட 54 பேர் விமானத்துடன் காணமல்போன செய்திகளை உறுதிப்படுத்தியிருந்தன. அதன்பின்னர் யாழ்-கொழும்பு விமான சேவைகள் காலவரையறையின்றி

நிறுத்தப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அத்துடன் யாழ் திருமலை கப்பல் பயணமும் இடைநிறுத்தப்பட மக்களுக்கான வெளியிடப் போக்குவரத்துத் தொடர்பாடல்கள் துண்டிக்கப்பட்டன.


பாகம்-1 பாகம்-2 பாகம்-3 பாகம்-4 பாகம்-5 பாகம்-6 பாகம்-7 பாகம்-8 பாகம்-9 பாகம்-10 பாகம்-11 பாகம்-12 பாகம்-13 பாகம்-14 பாகம்-15 பாகம்-16 பாகம்-17

Saturday, November 20, 2010

வேரென நீயிருந்தாய்...(17)

பொறியியற் கற்கை நெறியின் முதலாண்டுத் தேர்விற்கான கற்கை விடுமுறையின் இறுதி நாள். மாலை மங்கி இருள் கவியத் தொடங்கியிருந்தது. தமிழ் சிங்கள வேறுபாடின்றி சிரேஷ்ட மாணவர்கள் அனைவரும் முதலாண்டு மாணவர்கள் எல்லோரினதும் அறைகளுக்கு வந்து தங்கள் வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்திருந்தார்கள். பல்கலைக்கழக வாழ்வின் முதல் பரீட்சை. எமக்கான துறையினைத் தீர்மானிக்கப் போவதும் இந்தப் பரீட்சையின் பெறுபேறுகள் தான். அதுவும் ஆங்கில மொழியில். மனதுக்குள் ஏற்கனவே உருவாகியிருந்த பதற்றம் அதிகரிக்கத் தொடங்கியிருந்தது.

எப்படி ஆரம்பித்து எப்படி முடிந்தது என்பதை உணர்வதற்குள் காலம் கடுகதி வேகத்தில் நாட்களை ஓட்டி விட்டிருந்தது. மழை விட்டாலும் தூவானம் விடாது என்பது போல் பரீட்சை முடிந்து விட்டிருந்தாலும் Drawing corrections சமர்ப்பிக்கப்பட வேண்டியிருந்தது. அந்த இடைவெளிக்குள் அவசரஅவசரமாக தமிழ்ச்சங்கமும் சங்கீத நாட்டிய சங்கமும் இணைந்து எமது சமாந்தர பிரிவைச் சேர்ந்த அனைத்துப் பீட மாணவர்களுக்குமான வரவேற்பு விழாவினை புதுவசந்தம் என்கின்ற பெயரில் ஏற்பாடு செய்திருந்தார்கள். ஊருக்கு சீக்கிரமே போகவேண்டும் என்கின்ற ஆவலில் என்னுடைய Drawing correction-களை இரவு முழுதும் கண்விழித்து காலையிலேயே முடித்து மதியமளவில் சமர்ப்பித்ததில் மனம் நிம்மதியடைந்திருந்தது. விமானப் பயண அநுமதி வேண்டி ஒரு மாதத்திற்கு முதலிலேயே யாழ்ப்பாண மாணவர்கள் எல்லோரும் ஒன்றாக பாதுகாப்பமைச்சிடம் விண்ணப்பித்திருந்தாலும் எங்களுக்கான அனுமதிகள் இன்னமும் வந்து சேர்ந்திருக்கவில்லை.

பெரும்பாலான தமிழ் மாணவர்களின் அறைகளிலிருந்து “கொலம்பஸ் கொலம்பஸ் விட்டாச்சு லீவு...” உரத்த சத்தத்தில் ஒலித்துக் கொண்டிருந்தது. அப்போது தான் ஜீன்ஸ் திரைப்படத்தின் திரையிசைப்பாடல்கள் வெளியாகிச் சக்கை போடு போட்டுக் கொண்டிருந்தன. எங்களுக்கும் விடுமுறைதான். அதுவும் மூன்றரைமாத விடுமுறை முதல் மூன்று மாதங்களும் NAITA-வின் Engineering Training. நல்ல வேளையாக எங்களுக்கான Training யாழ்ப்பாணத்திலேயே கிடைத்திருந்தது. ஆனாலும் எங்களுக்கோ விடுமுறை விட்டும் உடனேயே வீட்டுக்குச் செல்ல முடியாத நிலை. நாடிருந்த நிலையில் வேறுபிரதேசங்களுக்கும் செல்வதில் பல சிக்கல்கள் காணப்பட்டன. எனவே பொழுதைப் போக்குவதற்காக புதுவசந்தம் நிகழ்ச்சிக்குச் செல்வோம் என நானும் தீபனும் முடிவெடுத்து E.O.E.பெரேரா அரங்கினுள் நுழைந்தோம்.

.....
பரீட்சையில் பாஸ்பண்ணி
பாஸூக்கு அலைந்து
எத்தனையோ தடைதாண்டி
'தாண்டிக் குளம்' தாண்டி
.....

எமது சகமாணவன் ஒருவன், கவிதை என்கின்ற பெயரில் அறுத்துக் கொண்டிருந்தான். எப்படா முடிப்பான்? என்றிருந்தது. ஏதாவது நகைச்சுவை நாடகங்கள் இருந்தால் நன்றாயிருக்கும் என்ற எண்ணம் தோன்றியது. அப்படியான அறிகுறி எதுவுமே தெரியவில்லை. ஏதோவொரு பீடத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு நாடகத்தை அரங்கேற்றியிருந்தனர். பெண்பாத்திரம் ஒன்று திரைக்கு வந்ததும் விசில் பறந்தது. ஏனோ அங்கிருக்கப் பிடிக்கவில்லை ஆயினும் தீபனின் இரசனையைக் கலைக்க விரும்பாததால் அமைதியாயிருந்தேன். சிற்றுண்டியும் குளிர்பானமும் வரவே எடுத்து அருந்திக் கொண்டோம்.

“ஜெயந்தன்! வந்த வேலை முடிஞ்சுது தானே. அப்ப இனி நாங்க வெளிக்கிடுவம்”

'அடப்பாவி! இவன் ஏதோ நாடகத்தை ரசித்துப் பார்க்கிறான் என்று நினைத்தால்...'

“அப்ப CC-க்க போவமாடா? இப்ப போனா ஒருத்தரும் பெரிசா இருக்கமாட்டாங்கள். இன்ரர்நெற் பார்க்கலாம்” தீபனை அழைத்தேன். அப்போதெல்லாம் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பொறியியல் பீடத்திற்குள் அமைந்திருந்த Computer Center-இல் 6 கணினிகளில் மட்டுமே இணைய இணைப்பு கொடுக்கப் பட்டிருந்தது. பகல் வேளைகளில் அவற்றையெல்லாம் சிரேஷ்ட மாணவர்களுக்கே ஒதுக்கியிருந்தார்கள். எனவே மாலை நான்கு மணிக்குப் பிறகே நாங்கள் CC-க்குள் நுழைய முடியும். அப்படி நுழைந்தாலும் இணைய இணைப்புள்ள கணினிகள் கிடைப்பது அருமை. அதுவும் 32MB RAM கொண்ட அந்தக் கணினிகளின் வேகத்தைச் சொல்லிப் பிரயோசனம் இல்லை.

CC-க்குள் நுழைகையில் அதைப்பூட்டிக் கொண்டிருந்தார்கள்.

“இதுவும் சரிவரேல்லை. ம்ம்... ஆ! பெராவில கார்ணிவெல் நடக்குதடாப்பா! அங்க போய்ப்பாப்பம் வாடா”

Elect lab இற்கும் car park இற்கும் இடையே அமைந்திருந்த பாதையினுாடே நடந்து பனிதெனியாவுக்குள் இறங்கி பேரூந்தினைப் பிடித்தோம். கார்ணிவெல் களைகட்டியிருந்தது. கிணற்றுக்குள் சைக்கிள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஓடுவதை இரசித்துவிட்டு வெளியே வர,

“ஹேய்!”

எங்கேயோ கேட்ட குரலாக இருக்கவே திருப்பினேன். நதீஷா வேறொரு பெண்ணுடன் நின்றிருந்தாள்.


“When are you going to your hometown?”

“We are waiting for the MOD clearence”

“Oh! Then have you submitted the drawing corrections? I've submitted them this evening."

“Yes! I've submitted before the lunch time.”

“Then how was the exam?”

“just...”

“Tomorrow if you are free, then you can visit my home. It is just one killometer from the Katugastota bridge”



திரும்பித் தீபனைப் பார்த்தேன். வேறெங்கோ பாரத்துக் கொண்டிருப்பதாய் பவ்லா காட்டினான். இவன் எப்பவுமே இப்படித்தான். எதுவுமே தெரியாத அப்பாவிப் பிள்ளையாட்டம் பாவனை செய்துவிட்டு பொறுத்த இடங்களில் போட்டுக் குடுப்பவன்.

“Hey! You can also visit to my place.”

அவள் தீபனையும் அழைத்தது நிம்மதியாய் இருந்தது. இனி இவர் இதைப் போட்டுக்கொடுக்கேலாது. அப்பிடிச் செய்தால் அவருக்கும் சேர்த்துத்தான் நோட்டீஸ் வரும்.

“Sure! give me your address, we will come tomorrow for lunch.”

தனது வீட்டு முகவரியையும் எடுக்க வேண்டிய பேரூந்து மற்றும் இறங்க வேண்டிய தரிப்பிடம் என்பவற்றையும் விபரமாகக் கூறிவிட்டு விடைபெற்றாள்.

“என்னடா? உண்மையா நாளைக்குப் போகப் போறியா?” என்னால் தீபனைப் புரிந்து கொள்ள முடியவில்லை.

“ரெண்டு பேரும்தான் போறம்.”

“பிறகு லெக்சர்கோலில நோட்டீஸ் விடுவாங்களடா”

“அம்மாண நீயொரு லெப்பையடா. இன்னும் மூண்டரை மாசத்துக்குப் பிறகுதான் இனி எங்களுக்கு கம்பஸ். அதுக்குள்ள இதையெல்லாம் மறந்து போயிருவாங்கள். இல்லாட்டியும் நீயும் நானும் சொல்லாட்டி எங்கட பெடியளுக்கு நாங்க போனது எப்பிடித் தெரியவரும்?”

மறுநாள் மதியம் கட்டுகஸ்தோட்டையில் நதீஷாவின் வீட்டை அடைந்திருந்தோம். ஓரளவிற்கு விசாலமான வசதியான வீடு. வீட்டினுள்ளே குளுமையாக இருந்தது. வீடு பளிச்சென்று துப்பரவாக நேர்த்தியாக அழகாக இருந்தது. தொலைக்காட்சிப் பெட்டிக்கருகில் வெண்கலத்தாலான கண்கள் மூடிய புத்தர் கருணையே உருவாகக் காட்சியளித்தார். அவருக்கு முன்னே பித்தளைத் தட்டத்தில் தண்ணீருக்குள் நித்திய கல்யாணி மலர்கள் வட்ட வடிவில் சீராக மிதந்து கொண்டிருந்தன. நேற்று கார்ணிவெல்லில் பார்த்த அந்தப் பெண்ணும் நதீஷாவுமே இருந்தார்கள்.

“Where is your parents?”
-தீபன் எப்போதுமே ஆட்களைத் தோண்டித் துருவி விடயங்களைக் கறந்து விடுவதில் வல்லவன். அதற்கு நான்கூட விதிவிலக்காக அமைய முடியவில்லை. என்னைப் பற்றிய எல்லா விடயங்களையும் அவன் என்னிடம் 'போட்டு வாங்கியிருந்தான்'.

“My mother is no more. father is working in Colombo, and my brother is a disabled and she is my brother's wife.”

“What is your father?”

“He is a police officer.”

அவளது அண்ணிக்கு நாங்கள் ஆங்கிலத்தில் உரையாடுவது புரியாமலிருந்தது. அவர் நதீஷாவிடம் ஏதோ சொல்ல, அவள் சிரித்துக் கொண்டே

“Shall we talk in Sinhale please. I understand that you don't know much, but she feels odd as she can't understand English.”

“கமன்-ன” (பரவாயில்லை) என்றான் தீபன்.

எங்கள் பேர் ஊர்களைப் பரிமாறிக் கொண்டோம். தீபனிலும் விட அவள் என்னையே அதிகம் விசாரிப்பதாய்ப் பட்டது.

“ஒயாகே தாத்தா மொனவத கரண்ணே?” (உங்கட அப்பா என்ன செய்கிறேர்?)

“நத்தியூணா” (காணாமல் போய்ற்றேர்)

“அய்? மொக்கத உணே?” (ஏன்? என்ன நடந்தது?)

விளக்கமாகச் சிங்களத்தில் சொல்லத் தெரியாததாலும் சொல்வதில் உள்ள தயக்கத்தாலும்,

“மட்ட ஹரியட்ட மதக்க-ந. கொடக் கால இசற மெயா நத்தியூணா” (எனக்கு சரியா நினைவில்ல. கன காலத்துக்கு முதலே காணாமப் போய்ற்றேர்)

“ஒயாகே கஸ்பண்ட் மொனவதக் கரண்ணே?” (உங்கட husband என்ன செய்கிறேர்)
-அவளின் வினாக்களிலிருந்து என்னை விடுவிக்க இடையில் புகுந்தான் தீபன்.

அவள் கண்களில் நீர்த்துளிகள் எட்டிப் பார்த்தன.

“எயாட்ட கொட்டி வெடி தீலா. தங் எயாட்ட மொக்குத் கரண்ட-ப” (அவருக்கு புலி சுட்டது [வெடி வைச்சிட்டுது]. அவரால இப்ப ஒண்டும் செய்யேலாது)

“அய் கொட்டி வெடி தீலா? கொகேத மேக்க உணே?” (ஏன் புலி சுட்டது? எங்க இது நடந்தது?)
-தீபன் கதையை வளர்க்க எனக்கு உள்ளுக்குள் உதறல் எடுத்தது.

“மெயா கமுதாவெட்ட வெடக்கரா. அணுபகாய் வகே வெலிஓயாவெங் பைற்-உணா நே. எத்தக்கொட்ட தமாய் மேக்க உணே. பிட்ட பஸ்ஸ, தாம மெயாட்ட மொக்குத் கரண்ட-ப” (இவர் படையில இருந்தவர். தொன்னூற்றியஞ்சில (95) மணலாறில சண்டை நடந்தது தானே. அப்பத்தான் இது நடந்தது. அதுக்குப் பிறகு இவரால ஒண்டும் செய்யேலாது)

“ஓ!”
-இருவருமே உச்சுக் கொட்டினோம்.

நடைபெறுகின்ற சண்டையில் சிங்களக் குடும்பங்களும் பாதிக்கப்படத்தான் செய்கின்றன என்பது புரிந்தது. ஆனாலும் 95 இல் எதிர்பாரத விதமாகப் பாரிய தோல்வியில் முடிவடைந்த மணலாறு இராணுவப்படைத் தொகுதிகள் மீதான தாக்குதல் சம்பவம் நினைவினில் வந்து போனது. தாக்குதலுக்காக உள்ளே புகுந்திருந்த பெருமளவிலான பெண் போராளிகள் எதிர்பாராது சுற்றிவளைக்கப்பட்ட தாக்குதலில் கொல்லப்பட்டு பின் அவர்களின் பிறப்புறுப்புக்கள் சிதைக்கப்பட்ட நிலையில் அவர்களின் வித்துடல்கள் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தினரூடாக கையளிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலம் தமிழர்களுக்குப் போதாத காலம். 1995 ஜூலை 09 இல் ஆரம்பிக்கப்பட்ட முன்னேறிப்பாய்தல் படைநடவடிக்கையினுாடாக வலிமேற்குப் பிரதேசங்களை ஆக்கிரமித்திருந்தது. அந்த வேளையில் தான் நவாலி சென்ற். பீற்றர்ஸ் தேவாலயம் மீது மேற்கொள்ளப்பட்ட விமானத் தாக்குதலில் நூறு்றுக்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் உடல் சிதறிப் பலியாகியிருந்தனர். வெற்றிபெற்று விட்டதான இறுமாப்பிலிருந்த சிறிலங்காப்படையினரை அதே மாதம் 14ம் திகதி புலிப்பாய்ச்சல் நடவடிக்கையினுாடாக பழைய இடங்களுக்கே திருப்பியனுப்பிய வெற்றிக்களிப்பில் தமிழர் தேசம் இருக்கையில்தான், தமிழர்படை தன் இதயபூமியில் நடாத்த இருந்த அந்தச் சண்டை பாரிய உயிர் இழப்புக்களுடன் தோல்வியைத் தழுவியிருந்தது. அது கொடுத்த தெம்பில் மீண்டும் யாழ்நகரைக் கைப்பற்றுவதற்கான சூரியக்கதிர் நடவடிக்கையினை சிறிலங்காப்படையினர் ஆரம்பித்திருந்தனர். அந்த நடவடிக்கையைில் ஈடுபட்டிருந்த சிறிலங்காப் படையினரை துடைத்தழிக்கும் நடவடிக்கையில் இறங்கிய தமிழர்படை குறுகிய கால இடைவெளியில் மீண்டுமொரு தடவை எதிர்பாராத வகையில் பாரிய உயிரிழப்பினைச் சந்தித்திருந்தது. அதன் பின்னர் தற்காப்பச் சமரில் மட்டுமே ஈடுபட்டவாறு தமிழர் படை தன் தளங்களை வன்னிக்கு நகர்த்திக் கொண்டது. 95 ஓகஸ்ரின் இறுதியில் ஒட்டுமொத்த வலிகாமமும் வடமராட்சிக்கும் தென்மராட்சிக்கும் இடம்பெயர 95 டிசம்பர் 05ம் திகதி மனிதர்களற்ற யாழ்நகரைக் கைப்பற்றித் தனது வெற்றி விழாவினைக் கொண்டாடியிருந்தது சிங்கள தேசம்.

எங்களிடையே நிலவிய நீண்ட மௌனத்தைக் கலைத்து உணவருந்த வருமாறு அழைத்தாள் நதீஷா.

Friday, November 19, 2010

வேரென நீயிருந்தாய்...(16)

அன்றைய மாலை அக்பர் விடுதியும் கலகலத்துக் கொண்டிருந்தது. முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு வைபவம் பல்கலைக்கழகத்தின் Gym இற்குள் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. முதலாண்டு மாணவர்கள் எல்லாம் தங்களை அலங்கரித்துக்கொண்டு குழுக்கள்குழுக்களாகப் பிரிந்தும் சேர்ந்தும் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்தனர். என் மனம் ஏனோ அமைதியிழந்து காணப்பட்டது. எந்தக்குழுவுடனும் சேராது தனித்திருக்கவே விரும்பினேன். ஆயினும் நண்பர்களின் வற்புறுத்தல்கள் அதிகமாகத் தொடங்கியிருந்தது. என்னவென்று சொல்லித் தப்பிப்பது? சில மாதங்களுக்கு முன்னர் எமது பிரிவின் சுற்றுலாப் பயணத்தின் நினைவுகள் மனதில் நெருடலை ஏற்படுத்தின.


முதலாண்டு மாணவர்களின் அந்த வருடத்திற்கான சுற்றுலா (batch trip) சிறிலங்காவின் தென்பகுதியை நோக்கியதாக அமைந்திருந்தது. சூரியன் மேற்கே சாயத் தொடங்கியிருந்த நேரம், காலி (Galle) கடற்கரையில் நீராடி விட்டு எழுந்து வந்து உடைமாற்றிப் பின் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டிருந்தோம்.

“Jeyanthan! join with us to take a group photo"
நதீஷா அழைத்தாள்.

சுற்றும் முற்றும் பார்த்தேன். தமிழ் மாணவர்களில் தீபன் மட்டுமே அருகில் நின்றிருந்தான். இவன் எப்பிடியும் இதைப் போட்டுக்குடுப்பான். பிறகு மற்றவர்களின் கடி தாங்கமுடியாதுபோய்விடும். யோசித்தேன். இளநீர் குடிச்சவனும் கள்ளன்தான் கோம்பை சூப்பினவனும் கள்ளன்தான். அவனையும் என்னுடன் சேர்ந்து படம் எடுக்க வருமாறு அழைத்தேன். நமட்டுச் சிரிப்புடன் வந்தவன், திடீரென புகைப்படம் எடுக்க நின்றிருந்த சிங்களப் பெண்ணிடம் புகைப்படக்கருவியினை வாங்கிவிட்டு அவளையும் எங்களுடன் சேர்ந்துநிற்கச் சொல்லிவிட்டு அவன் புகைப்படப்பிடிப்பாளனாக மாறிவிட்டான். “ஆப்புத் தான்” என்றது உள்மனது. நன்றி சொல்லிவிட்டு அந்தச் சிங்களப் பெண்கள் வேறிடம் நோக்கிச் செல்ல,

“வாழ்ந்திற்றாய் மச்சான்!” கொடுப்புக்குள் சிரித்தான் தீபன்.

'படம் எடுத்த விசயம் C-Wing காரங்களுக்குத் தெரிஞ்சுதெண்டால் அவ்வளவுதான்! லெக்சர் கோலில நோட்டீசுகள் விட்டே கிழிச்சுப்போடுவாங்கள் ஏற்கனவே C-Wing இல இருக்கிற கொஞ்சப் பேரோட கறள். அவங்கள்தான் லெக்சர் கோலில நோட்டீசுகள் எழுதி நாறடிக்கிறவங்கள் என்கின்ற சந்தேகம் ஏறத்தாழ உறுதிப்படுத்தப் பட்டிருந்தது. இந்த விஷயம் வெளிய நோட்டீசில வராமத் தடுக்கிறதெண்டால், சாட்சிக்காரனின் காலில விழுகிறதை விட சண்டைக்காரன்ர காலில விழுகிறது மேல் எண்டது மாதிரி தீபனைத் தான் வாயைத் திறக்காமச் செய்ய வேணும்.'

திரும்பினேன். தீபன் சற்றுத்தூரத்தில் வேறு நண்பர்களுடன் என்னைக்காட்டி ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான். ''சரி! விஷயம் கைமீறி விட்டது' சலித்துக் கொண்டது மனது. நீராடிவிட்டு வருகையில் வந்திருந்த உற்சாகம் காணாமல் போயிருந்தது. எதிலும் ஒன்றிப்போகமுடியாமல் மனம் தத்தளித்தது. திங்கட்கிழமை விரிவுரை மண்டபத்தில் வரப்போகும் நோட்டீசுகளை எண்ணி அது சஞ்சலப்பட ஆரம்பித்தது. இந்த மனம் எப்போதும் இப்படித்தான். மற்றவர்களைப் பற்றி வரும் நோட்டீசுகளை ஆவலுடன் தேடித்தேடி வாசிக்கும் மனது, தன்னைப்பற்றி ஏதாவது நோட்டீசுகள் வருகின்றது எனின் கோபப்படுகின்றது அல்லது வெறுத்துப்போகின்றது. எதையுமே இயல்பாய் பகிடியாய் எடுத்துக் கொள்வதற்கு அதனால் இயலாமல் இருக்கிறது. நான் என்கின்ற Ego அதற்கு நிறையவே இருப்பதுதான் அதற்கான காரணம். இந்த Ego-வினை அகற்றாமல் இருக்கும் வரை எந்தவொரு விடயத்தையுமே உள்ளவாறே இயல்பாய் ஏற்றுக்கொள்வது கடினம் தான்.

மாலைச்சூரியன் மறையத்தொடங்குகையில் பேரூந்துகளுக்குள் ஏறிக்கொண்டோம். ஆட்டங்கள் பாட்டங்கள் மாறி அது நேயர் விருப்பம் நிகழ்ச்சியாக மாறியது.

“ஹலோ!”

“எங்களுக்கு ஒரு பாட்டுப் போடுறீங்களா?”

“என்ன பாட்டு?”

“சிங்களத்துச் சின்னக் குயிலே எனக்கு ஒரு மந்திரத்தைச் சொல்லு மயிலே...”

“யாராருக்காகவெல்லாம் இந்தப் பாடலைக் கேட்கின்றீர்கள்?”

“ஜெயந்தனுக்காக மட்டும்”

பாடல் ஆரம்பிக்க என்னை இழுத்து நடுவில் விட்டுவிட்டு சுற்றிவர நின்ற கைதட்டி ஆடிப்பாடத் தொடங்கினார்கள். சுற்றிவரப் பார்த்தேன் முன்னுக்கு சிலர் வாளி வைத்துக் கொண்டிருந்தார்கள். ஆத்திரம் ஆத்திரமாய் வந்தது. “உங்கா! முன்னுக்கே பப்பிளிக்கா வாளி வைக்கிறாங்கள். அவங்களையெல்லாம் விட்டிட்டு சும்மா ஒரு போட்டோ எடுத்த என்னை வைச்சு நக்கலடிக்கிறதைப் பார்க்க இரத்தம் கொதித்தது. ஆக்களோட கொழுவ வேணும் போலத் தோன்றியது. அப்படிக் கொழுவினால் விஷயம் இன்னும் பெரிதாகி விடும் என்பதால் அடக்கிக் கொண்டேன்.

அடுத்து வந்த திங்கட்கிழமை காலையில் எதிர்பார்த்தபடியே என்னைப் பற்றியும் நோட்டீசுகள் வந்திருந்தன. மற்றையவர்களுடன் ஒப்பிடுகையில் அது குறைவாக இருந்தாலும் அது தந்த பாதிப்பு இன்னமும் மனதில் இருந்தது. எனவேதான் வெளியே சென்று படம் எடுத்தால் சிலவேளை நதீஷாவையும் காண நேரிடலாம். அப்படி நேர்ந்தால் அவள் இயல்பாக படமெடுக்கக் கூப்பிட அதைப்பார்த்து பிறகு லெக்சர் கோலில நோட்டீஸ் வர, ஏன் தேவையில்லாத உபத்திரவங்கள்? எனவேதான் படம் எடுத்துக்கொண்டு செல்லும் குழுக்களுடன் இணைவதைத் தவிர்த்துக் கொண்டிருந்தேன்.

“ஜெயந்தன்! என்னடா செய்யுறாய். கெதியா வாடாப்பா. எல்லாரும் போய்ற்றாங்கள் புறோக்கிறாமெல்லாம் தொடங்கப் போகுது”
தீபன் அழைத்தான்.

மகாவலியின் மேலான அக்பர் பாலத்தினைக் கடந்து Gym இனை அடைகையில் “காதல் ரோஜாவே... எங்கே நீ எங்கே?...” பாடலை ஒருவன் பாடிக் கொண்டிருந்தான்.

“ஜெயந்தன் டேய்! உனக்குச் சிற்றுவேஷன் சோங் போகுதடாப்பா”

”பேய்ப். அம்மாண வாயில வருகுது. சத்தம் போடாம அமத்திக் கொண்டு வா”

சற்று நேரத்தில் ஒவ்வொருவராக உள்ளே வருவதும் சிலரை அழைத்துக் கொண்டு வெளியே போவதுமாய் இருந்தார்கள். அருகில் இருந்த தீபன் என்னையும் வெளியே வருமாறு அழைத்தான். சென்றோம்.

“இந்தா மச்சான்! அடியடா”

“எனக்கு வேண்டாம். எனக்குப் பழக்கமில்லை”

”பேய்ப்.... நாங்க மட்டும் என்ன வீட்டிலையே பழகீற்றா வந்தனாங்கள். சும்மா அடியடா!”

“நான் போறன். நீங்க இருந்து அடியுங்கோ”

”பேய்ப்... நீ மட்டும் போறியோ? அங்கை உள்ளுக்கை போய் சரக்குகளுக்கு போட்டுக் குடு ஆராரு தண்ணியடிக்கிறம் எண்டு”

“ஏன்ரா நதீஷா உன்னைத் தண்ணியடிக்கக்கூடாதெண்டு சொன்னவளோ?”

'என்னடா இவங்கள் எல்லாத்துக்கும் அவளை இதுக்குள்ள இழுக்கிறாங்கள். ஏன்தான் அவள் எனக்கு குறூப்மேற்றா வந்து சேர்ந்தாளோ?' விசராய்க் கிளம்பியது.

“ஜெயந்தன்! நீ நதீஷாவுக்குப் பயந்துதான் தண்ணியடிக்கமாட்டன் எண்டுறாய்”

என்னுடைய Ego-வில் விழுந்தது அடி.

“இஞ்ச கொண்டா அடிச்சுக் காட்டுறன்”

பிளாஸ்ரிக் தம்ளரில் கலந்து தந்ததை வாங்கி முகர்ந்து பார்த்தேன். வயிற்றைப் பிரட்டியது.

“பாத்துக்கொண்டிருக்காம அப்பிடியே மூக்கைப் பொத்திக்கொண்டு அடித்தொண்டையில ஊத்து. ஒரு பெக் போய்ற்றுதென்றால் பிறகு ஒண்டும் தெரியாது”

தொண்டைக்குழியில் கரித்துக் கொண்டே வயிற்றுக்குள் சில்லிட்டுக் கொண்டு இறங்குவதை உணர்ந்தேன்.

“இந்தா மச்சான்! கோல்ட் லீப். இதையும் இழுத்துப்பார்”

உதட்டில் பொருத்தி புகையினை உள்ளுக்குள் இழுத்தேன். தொண்டை கமறிப் புரக்கடித்தது.

சிறிது நேரம் செல்ல மிதப்பாய் இருந்தது. சுற்றிவர இருப்பவையெல்லாம் இலேசாக ஆடுவதாய் தெரிந்தது.

“இன்னொரு பெக் அடி மச்சான்”

இப்போது அதன் மணமும் சுவையும் ரம்மியமாய் தெரிந்தன.

“ஒரு கோப்பையிலே என் குடியிருப்பு ஒரு கோல மயில் என் துணையிருப்பு....” பாடல் வரிகள் மனதிற்குள் ஓட,

“ஜேன்!”

“அழ்க்கா!” - திடுக்கிட்டேன். இவள் எப்படி இங்கே?

“என்னடா இது?”

“அழ்து சுழ்ம்மா தாழ்ன்”

“இதுக்காகவா இஞ்ச வந்தனி?”

“எழ்ன்ன நீ? சுழ்ம்மா தொணதொணழ்ன்னு?”

“என்னடா குடிகாரங்கள் மாதிரி தண்ணியடிச்சு போட்டு உளறுறாய்? அம்மாக்குத் தெரிஞ்சுதெண்டால்..?

“சள்தான் போழ்டி”

தலைசுற்றியது. ஓவ்வ்வ்... வாந்தி வாந்தியாய் வந்தது. மண்டை விண்விண்ணென வலிக்கத் தொடங்கியது. எடுத்த வாந்தியின் மேல் அப்படியே சாய்ந்தேன்.

“ஆள் பிளற்றாகிற்றான். தூக்கிக்கொண்டுபோய் றூமில போட்டிட்டு வாங்கடாப்பா”
எங்கோ கனவில் கேட்பதாய் இருந்தது.

விழிப்பு வருகையில் தாங்கமுடியாத தலைவலி. அந்தத் தலைவலிதான் விழிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. எனது கட்டிலில் வாந்தியெடுத்துவிட்டு அதன் மேலேயே கிடப்பதை உணர்கையில் அருவருப்பாய் இருந்தது. எழ முயற்சித்தேன். முடியவில்லை. தலைப்பாரமாய் இருந்தது.

“அம்மா... அக்கா...” முனகினேன். யாரையும் வரக் காணோம்.

“அக்கா....” வழமையாய் வந்து என் பாரம் தீர்ப்பவள் வரக்காணோம். நேற்றிரவு நடந்தது நினைவினில் வந்தது. ச்சே! என்ன மனிதன் நான். அக்காவைப் போய்த் திட்டியிருக்கின்றேனே. ரோசக்காரி அவள் இனி வரமாட்டாள். மண்டை வெடித்தது. எதையோ இழந்துவிட்டு வெறுமையாய் தனிமையை உணர்ந்தேன். மதுவின் இயல்பு பற்றி எப்போதோ வாசித்த கதையொன்று நினைவினில் வந்து போனது.

ஒரு அறையினுள் ஒரு போத்தல் மதுவும், கிளர்ச்சியூட்டும் மாதுவும், பச்சிளங் குழந்தையும் இருந்தார்கள். நன்னடத்தையைச் சோதிப்பதற்காய் ஒருவனைக் கூட்டிவந்து அந்த அறையினுள் இருக்கும் மதுவை அருந்த வேண்டும் அல்லது அந்த இளம் மாதுவை வன்புணர்ச்சி செய்யவேண்டும் அல்லது அந்தப் பச்சிளங் குழந்தையை அடித்துக் கொல்ல வேண்டும் என்றார்கள். சிறிது நேரம் யோசித்த அந்த மனிதன் மது தனக்கு மட்டும் தான் கெடுதல் தரும். மற்றைய இரண்டும் பிறருக்கு கேடு செய்யும் என்பதால் அங்கிருந்த மதுவினை எடுத்துப் பருகினான். போதையேறியதும் புத்தி தடுமாறியது. காமம் தலைதூக்கியது. மாதுவின் மேல் பாய்ந்தான். அதைக்கண்ட குழந்தை வீரிட்டு அலறியது. அந்த அழுகையொலி அவனுக்கு நாரசமாய் இருக்கவே அந்தக் குழந்தையைத் தூக்கி அடித்துக் கொன்றுவிட்டு மங்கையின் மீது மீண்டும் பாய்ந்து தன் காம இச்சைகளைத் தீர்த்துக் கொண்டான்.

ஏறத்தாழ நானும் அந்த மனிதனின் நிலையிலேயே இருப்பதாய் உணர்ந்தேன். கண்களில் நீர் பெருகியது.


Thursday, November 18, 2010

வேரென நீயிருந்தாய்...(15)



1998ம் ஆண்டின் தைப்பொங்கலினை அக்பர் C-wing இனில் கோலாகலமாகக் கொண்டாடியிருந்தோம். அதைத்தொடர்ந்து வந்த சில நாட்களிலேயே பாதுகாப்புக் காரணங்களை முன்னிட்டு முதலாம் ஆண்டிற்கான முதற்பாதி தவணைக்காலம் அவசரமாக முடிக்கப்பட்டு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது. விடுமுறையினை அடுத்து பெருமளவிலான மாணவர்கள் தங்கள் தங்கள் வீடுகளுக்குத்திரும்பியிருக்க யாழ்ப்பாணம், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில் வேறிடங்களுக்கு செல்லமுடியாதவர்கள் மட்டும் அக்பரில் தங்கியிருந்தோம். சிறிலங்கா அரசு தனது சுதந்திரதினப் பொன்விழாவினை கண்டி நகரில் கொண்டாடுவதற்கு பெருமெடுப்பிலான ஆயத்தங்களைச் செய்துகொண்டிருந்ததனால் பாதுகாப்புக் காரணங்களைமுன்னிட்டு நாங்கள் எல்லோருமே கண்டி நகருக்குள் செல்வதனைத் தவிர்த்துக்கொண்டிருந்தோம். அப்போதைய பிரதிப் பாதுகாப்பமைச்சர் ஜெனரல் அநுருத்த ரத்வத்தை அவர்கள் கண்டிநகரில் நடக்க இருக்கும் சுதந்திரப் பொன்விழாவினை எந்தக்கொம்பனாலும் தடுத்து நிறுத்த முடியாதென சவால் விட்டதை அடுத்து கண்டி நகரெங்கும் பாதுகாப்புக் கெடுபிடிகள் மிகவும் அதிகரித்திருந்தன. தமிழ் மாணவர்களிடையே ஒருவித அச்சநிலை காணப்பட்டுக்கொண்டிருந்தது.


ஜனவரி 25, அதுவொரு ஞாயிற்றுக்கிழமை. முதல்நாள் சனிக்கிழமை இரவு முழுவதும் கொட்டக் கொட்ட விழித்தபடி அடித்திருந்த 'கொன்' (அரட்டை) காரணமாகக் காலையில் ஆழ்ந்த தூக்கத்தில் கிடந்தோம்.

'க்கும்ம்ம்....'

விடுதிக் கட்டடங்கள் யாவும் குலுங்கி அதிர்ந்தன. அதைத்தொடர்ந்து துப்பாக்கி வேட்டுக்கள் சடசடத்தன. எல்லோருடைய நித்திரையும் கலைந்து விட்டிருக்க ஒருவரையொருவர் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கேயோ குண்டு வெடித்திருக்கின்றது என்பதைப் புரிந்து கொள்வது அவ்வளவு கடினமானதாக இருக்கவில்லை. காலை உணவிற்காகச் சிற்றுண்டிச்சாலையை அடைகையில் சிங்கள சிரேஷ்ட மாணவர்களின் முறைத்த முகங்களையே எதிர்கொள்ள வேண்டியிருந்தது. கண்டி தலதா மாளிகைக்குள் தற்கொடைத் தாக்குதல் நடைபெற்றிருப்பது தெரியவந்தது. வழமையாக உணவிற்காக வெளியே 'அக்கா' வீட்டிற்கோ அல்லது ஐடியலுக்கோ செல்லும் எல்லோருமே பீதியின் காரணமாக அக்பர் சிற்றுண்டிச்சாலையிலேயே தங்கள் உணவினனை அருந்திவிட்டிருந்தனர். மாலை நேரமளவில் ஜே.வி.பி.யின் மாணவர் அமைப்பைச் சேர்ந்த சிலர்வந்து தமிழ்மாணவர்களை வெளியே எங்கேயும் செல்லவேண்டாமென்றும். எங்களுக்கான பாதுகாப்பு வெளியே கிடையாது என்றும் எச்சரித்துச்சென்றனர். பல்கலைக்கழக விடுதிகளுக்குள் நுழைய முயன்றிருந்த சில காடையர்களை அவர்கள் திசைதிருப்பி அனுப்பிவிட்டிருந்தது தெரியவந்தது. கட்டுக்கலைப் பிள்ளையார் கோவிலின் முகப்பு வேறுசில காடையர்களால் உடைத்து விடப்பட்டிருப்பதாகச் சேதி வந்தது. அந்தக் கோயிலுக்கு நேர்முன்னாலேயே சிறிலங்கா காவற்றுறையினரின் காவல் நிலையம் ஒன்று அமைந்திருப்பதும் நினைவில் வந்துபோனது.

இரவானதும் மீண்டும் காடையர்கள் எம்மைத்தாக்குவதற்காக எமது விடுதிக்கு வரலாம் என்கின்ற அச்சம் எழுந்தது. அதை எவ்வாறு எதிர்கொள்வது அல்லது எப்படித் தப்பிப்பது என்கின்ற யோசனை எல்லோர் மனதையும் குடைந்தது. ஈற்றில் New-wing இல் உள்ள மாணவர்களும் C-wing இல் சென்று தங்கலாம் என்றும், யாராவது பெருமெடுப்பில் அடிக்க வந்தால் அப்படியே யன்னல்களுக்குள்ளால் குதித்து பற்றைகளுக்குள் பதுங்கி விடுவதென்றும் குறைந்த அளவில் வந்தால் எமது பாதுகாப்பிற்காகத் திருப்பித் தாக்குவது என்றும் முடிவானது. ஆயினும் எல்லோருடைய முகங்களிலும் பயம் பரவிக்கிடப்பதைக் காணமுடிந்தது. உறக்கத்தினைக் கலைப்பதற்காய்ச் சில மாணவர்கள் 304 விளையாட ஆரம்பித்திருந்தார்கள். நேற்றைய இரவுத் தூக்கம் வேறு கண்களைச் சுழற்றியது.


Wednesday, November 10, 2010

வேரென நீயிருந்தாய்...(14)


ஊரெல்லாம் கூடி ஒலிக்க அழுதிட்டுப்
பேரினை நீக்கிப் பிணமென்று பேரிட்டு
சூரையன் காட்டிடைக் கொண்டுபோய்ச் சுட்டிட்டு
நீரினில் மூழ்கி நினைப்பொழிந் தார்களே!



வரப்பிரகாஷின் சாவினை அடுத்து பகிடிவதை முற்றிலுமாய் நின்று போய் விட்டிருந்தது. பின்வந்தவொருநாளில் பகிடிவதை உத்தியோகபூர்வமாக முடிவிற்கு வந்ததாக அறிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்டிருந்த ஒரு சிலரைத் தவிர அனேகமாக நாங்கள் எல்லோருமே வரப்பிரகாஷை மறந்துவிட்டு எங்களெங்கள் வேலைகளில் ஈடுபடலானோம்.

விரிவுரைகளின் போதான தூக்கக்கலக்கங்களை களைவதற்கு துண்டுகளில் வரும் கிசுகிசுக்கள் உதவிக்கொண்டிருந்தன. Drawing வகுப்புகளின் போது போதனாசிரியர்கள்வந்து வரைந்து கொண்டிருக்கும் படங்களின் மேல் 'B' தர பென்சில்களால் வட்டமடித்துக் கடுப்பேற்றிக் கொண்டிருந்தார்கள். அதைத் தவிர்த்து ஏனைய ஆய்வு கூட வகுப்புகளும் surveying - உம் சந்தோஷமாகச் சென்று கொண்டிருந்தன. ஐந்து பேர்களைக் கொண்டிருந்த சில குழுக்களைச் சேர்ந்தவர்கள் வந்து Surveying அலுப்பாயிருக்கின்றது என்று கூறுவதைக் கேட்க வியப்பாயிருந்தது. எனது surveying குழுவில் நான்கு பேர் மட்டுமே. அதிலும் ஒராள் பெண். மற்றைய பெண்களைப் போலல்லாது ஆண்களுக்குச் சமமாக நதிஷாவும் பற்றைகள் பள்ளங்களுக்குள் இறங்கி வேலையில் ஈடுபடுவது அவள் மேல் ஒரு மரியாதையை உருவாக்கியிருந்தது. மற்றைய குழுக்களில் பெண்களுக்காகவும் ஆண்களே பற்றைகளுக்குள் இறங்குவதும் அதைச் சில ஆண்கள் வலியப்போய் விரும்பிச் செய்வதும் வேறு விடயம். அப்படியான விடயங்களே கிசுகிசுக்களாக வந்து விரிவுரைகளில் எங்களை விழிப்புடன் வைத்திருந்தன. பெண்களுடன் ஆண்கள் கதைக்கக் கூடிய தருணங்களாக ஆய்வுகூடங்களும் Surveying-மே விளங்கின. பாடசம்பந்தமான உரையாடல்கள்கூட சில வேளைகளில் வாளி வைப்பதாக திரிபடைவதும் உண்டு. எங்களுக்கிடையில் வாளி என்றும் அன்ரி-வாளி என்றும் இரு பிரிவுகள் உருவாகி விட்டிருந்தன. வாளிகள் என்று தங்களை அழைத்துக் கொள்வதனை யாருமே விரும்பியிருக்கவில்லையாயினும் அன்ரி-வாளி என்று தங்களை அழைத்துக் கொள்வோர் அப்படிக் கூறிப் பெருமைப்பட்டுக் கொள்வதையும், மற்றவர்கள் காணாதவிடத்து கள்ளவாளி வைப்பதில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக இருந்தது. அதுகூட ஒரு அரசியல் மாதிரித் தான். சொல்வதொன்று செய்வதொன்று. அரசியலில் இதெல்லாம் சகஜம், இல்லையா?

இப்போதெல்லாம் நதீஷாவுடன் கூச்சமில்லாமல் உரையாடுவதற்கு நான் பழகியிருந்தேன். அதற்கு அவள் சிங்களமாயிருந்ததால் எங்களைப் பற்றி விரிவுரை மண்டபங்களில் கிசுகிசுக்கள் வராது என்பதும் ஒரு காரணமாயிருந்திருக்கக் கூடும். அதனுடன் முதல் நாள் சந்திப்பில் ஏற்கனவே இவளுடன் நன்றாகப் பழகியிருந்ததாக தோன்றியது கூட இன்னமும் ஞாபகத்தில் இருக்கிறது. இப்போது கூட அப்படித் தோன்றினாலும் அதற்கான எந்தவொரு சாத்தியமும் இருக்கவில்லையென்பது தான் வெளிப்படை உண்மை. இவையெல்லாவற்றையும் தவிர்த்துப் பார்த்தால், இப்போதுதான் முதன்முறையாக என்வயதொத்த ஒரு பெண்ணிடம் பழக வேண்டிய சந்தர்ப்பம் உண்டாகியிருக்கின்றது. இவளுடன் கூச்சமில்லாமல் பழகினாலும் ஏனைய பெண்களுடன் அது சிங்களப் பெண்களாயிருந்தாலும் சரி, பழகுவதில் உள்ள இயல்பான கூச்சம் இன்னமும் போகவில்லை என்பதை Explorer Club-இனரால் அழைத்துச் செல்லப்பட்ட மலையேற்றம் (hike) உணர்த்தியது.

அது முதலாண்டு மாணவர்களுக்கான Explorer club -இன் அறிமுகம். அதையொட்டி ஒரு மலையேற்றத்திற்கு ஒழுங்கு செய்திருந்தார்கள். கண்முன்னே விரவித் தெரியும் கந்தானை மலைத்தொடரின் உச்சியில் கால் பதிப்பதற்கான நாள். மனதிற்குள் கொண்டாட்டம். அந்த மலைத்தொடரின் முகட்டுக்குக் கீழேயே முகில்ப்படலங்கள் விளையாடித் திரிவதை கீழேயிருந்து பார்த்திருக்கின்றேன். மலையேறினால் நிச்சயம் அந்த முகில்களை அளைந்து விளையாடலாம். நினைக்கவே உடல் சிலிர்த்தது.

ஆடிப்பாடி வேலை செய்தால் அலுப்பிருக்காது. அதில் ஆணும் பெண்ணும் சேராவிட்டால் அழகிருக்காது...
பொதுவாக தமிழ்ப் பெண்கள் மலையேற்றத்திற்கு போவதில்லை. இம்முறையும் அப்படியே. ஆனாலும் வழமைக்கு மாறாக பல ஆண்களும் வரமுடியாத நிலையில் இருந்தார்கள். பேராதனைப் பல்கலைக்கழக தமிழ்ச்சங்கத்தின் நாடகப் போட்டி அன்று மாலை EOE அரங்கில் நடைபெற இருந்தது. அந்தப் போட்டியில் எமது பிரிவும் (batch) போட்டியிடவிருப்பதனால் பெரும்பாலான மாணவர்களும் மலையேற்றத்திற்கு வரவில்லை. “வாளி வைக்கிறவங்கள் தான் சங்கங்களோட திரியிறவங்கள்” என்கின்ற கருத்து பகிடிவதைக் காலங்களிலேயே திணிக்கப்பட்டிருந்தது. தமிழ் நிகழ்ச்சிகளுக்கும் எனக்கும் வெகுதூரம். அதற்காக கதை, கவிதை, நாடகம் என்றால் என்னவிலை என்று கேட்பதில்லை. ஏதோ அதற்கும் எனக்கும் தொடர்பில்லை. நாய்க்கேன் போர்த்தேங்காய் என்கின்ற நினைப்பு. அவ்வளவே. நாங்கள் தங்களுக்கு ஆதரவு தராமல் மலையேறுகின்றோம் என்று நாடகத்தில் பங்கேற்ற சிலருக்குக் கடுப்பு, எங்களுக்கோ மலையேற்றத்தை விட்டிட்டு இதென்ன கண்டிறியாத நாடகம் என்கின்ற வெறுப்பு.

“நீங்க நல்லா வாளி வையுங்கோடாப்பா” என்று விட்டு நாங்கள் மலையேற்றத்திற்கு கிளம்பி விட்டோம்.

காடுகள் பற்றைகளுக்குள்ளால் முன்னே செல்பவர்கள் வழியேற்படுத்தித்தர நாங்கள் சிறுசிறு குழுக்களாகப் பின் தொடர்ந்தோம். குளவிகள் இருக்கும் சில இடங்களில் மௌனமாய் நகர்ந்தோம். சில மேடுகளை முன்னே சென்றவர்கள் அமைத்துத் தந்த கயிற்றைப் பிடித்துக்கொண்டு ஏறினோம். மிகுந்த களைப்பாய் உணர்ந்தேன். என்னுடன் வந்திருந்த மற்றைய சில நண்பர்களும் களைத்துப் போகவே அங்கிருந்த புற்றரை மீது அமர்ந்து கொண்டோம். ஏறத்தாழ அதுவும் ஒரு போர்ப்பயிற்சிப் பட்டறை போன்றே தோன்றியது. திடீரென அக்காவின் நினைப்பு வந்தது. இதைவிடக் கடுமையான பயிற்சிகள் எல்லாம் அவள் எடுத்திருப்பாள் என்கின்ற எண்ணமே சோர்வைப் போக்கியது. சில சிங்களப் பெண்கள் நாங்கள் களைத்துப்போய்க் குந்தியிருப்பதைப் பார்த்துச் சிரித்தவாறே கடந்து சென்றார்கள்.

“மச்சான்! விசிறிச் சரக்குகள் எங்கள நக்கலாப் பாக்கிறாளவை. எழும்புங்கோடா. வெக்கமடா”
எழுந்து நடக்கத் தொடங்கினோம்.

“ஜெயந்தன்!”

திரும்பினேன். நதீஷா நின்றிருந்தாள்.

“mmmm... have some snacks."
அவளிடமிருந்த ஒரு பையை நீட்டினாள்.

“Thanks"
வாங்கிக் கொண்டேன்.

“ஹே! மெயா தமாய் நதிஷாகே ஜெயந்தன்” (இது தான் நதிஷாவின்ர ஜெயந்தன்)
அவளுடன் வந்த பெண்கள் அவளைக் கலாய்க்க, சிரித்துக் கொண்டே சென்றார்கள்.

“மச்சான் குடுத்து வச்சனியடா... ”
என்னிடமிருந்த பையினைப் பறித்துக் கொண்டார்கள்.

எனக்கு எதையுமே தராமல் தின்று தீர்த்தவர்கள்,

“அப்ப எப்ப மச்சான் கிச் பார்ட்டி?”
என்னையும் கலாய்க்கத் தொடங்கினார்கள்.

'இதை இப்படியே விட்டால் பிறகு லெக்சர் ஹோல் நோட்டீஸ் வரைக்கும் போய்விடுமே' என்கின்ற பயம் வந்தது.

'இவளுக்கேன் இந்தத் தேவையில்லாத வேலை?' நதிஷாவின் மேல் ஆத்திரமாய் வந்தது.

'கதையை உடனேயே அமத்த வேணும்' மூளைக்குள் அலாரமடித்தது.

“இது மச்சான், surveying-இலயும், workshop-இலயும் என்னைக் கொண்டு வேலை வேண்டுறதுக்கெடாப்பா! இவளவையைப் பற்றித் தெரியாதே?” மனதறிந்து பொய் சொன்னேன்.

“நீ சடையுறாய் மச்சான். என்னவோ எனக்கெண்டால் இது நல்லதாய்ப்படேல்ல. சொல்லிப்போட்டன்”

கோபம் கோபமாய் வந்தது.

“என்ன கதைக்கிறாய் நீ? அம்மாண வாற ஆத்திரத்திற்கு. உனக்கு என்னைப் பற்றி எல்லாக் கதையும் தெரியும். பிறகுமேன் இப்பிடிக் கதைக்கிறாய்?”
அறை நண்பன் தீபனை அதட்டினேன். அவனுக்கு அப்பாவைப்பற்றியும் அக்காவைப் பற்றியும் தெரிந்திருந்தது.

“சரிசரி விடடாப்பா! ஏன் இப்ப கோபப்படுகிறாய்? விசிறிப் பெட்டையள் சோஷலாத்தான் பழகுவாளவை. நாங்க சும்மாதான் உன்னைக் கடுப்பேத்தின்னாங்கள். சரிசரி வெளிக்கிடு. மற்றாக்களெல்லாம் கனதூரம் போய்ற்றாங்கள்”

விரைவாக நடக்க ஆரம்பித்தோம்.

மனது கொந்தளித்துக் கொண்டிருந்தது. அமைதியாய் சலனப்படாதிருந்த மனம் இந்தவொரு சின்னச் சம்பவத்தால் குழம்பிக் கொண்டிருந்தது. இவ்வளவு நாளும் ஒருத்தரும் எந்தவொரு பெட்டையையும் வைச்சு என்னைக் கடிச்சதில்லை. இப்ப இவளால கடிவாங்க வேண்டிக்கிடக்கே. அவமானமாய் உணர்ந்தேன். சுற்றிவர ஒரே புகார் மூட்டமாய் இருந்தது. இந்தப் புகார் மூட்டம் தான் கீழேயிருந்து பார்க்கையில் அழகான முகில்க் கூட்டங்களாய்த் தெரிகின்றன. எந்த முகில் கூட்டங்களைத் தொட்டு அனுபவிக்க வேண்டுமென்று ஆவல் பட்டிருந்தேனோ, அது இப்போது என்னைத் தழுவிக் கொண்டு இருந்தாலும் அந்த சிலிர்ப்புகளையும் சில்லிடல்களையும் பூரணமாய் அனுபவிக்க முடியாதவாறு இந்தவொரு சின்னச் சம்பவம் என்னைப் பாதித்து விட்டிருக்கிறது. எப்படியானவொரு முட்டாள் நான்!

இயல்பாய் எதேச்சையாய் நட்புணர்வில் தரப்பட்ட ஒரு உணவுப் பண்டத்திற்காய் இப்படியா குழம்புவது? கடைக்கண்ணால் அவளை நோக்கினேன். எந்தவொரு விகல்பமுமின்றி தன் தோழிகளுடன் அவள் சிரித்துப் பேசியவாறே அந்த ரம்மியமான சூழலை அனுபவித்துக் கொண்டிருந்தாள். அவளிடம் எந்தக் கல்மிஷமும் கிடையாது என்பதை அவளது அந்த இயல்பான சிரிப்பும் முகபாவனையும் அடித்துச் சொல்லிற்று. நான்தான் சும்மா மற்றவர்களின் பேச்சைக்கேட்டுக் குழம்பியிருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இப்போது மனம் இலேசாகியிருந்தது.

கூதல்காற்று உடலைத் தழுவியது. கீழிருந்து பார்க்கையில் ஏற்பட்டிருந்த முகில்களின் மீதான பிரியமும் பிரமிப்பும் இப்போது குறைந்து விட்டிருந்தன. பஞ்சுப் பொதி போல் அள்ளி விளையாடலாம் என எண்ணியிருந்ததற்கு மாறாக உண்மையில் அவை வெறும் புகார்க் கூட்டங்களே என்பதும், ஆயினும் துாரத்துப் பார்வைக்கே அவை அழகாகத் தோன்றுகின்றன என்பதும் தெரிந்தது. எமது வாழ்வில் பெரும்பாலான விடயங்கள் அப்படித்தானே! தூரத்தில் பார்த்து நாம் மயங்குபவற்றின் உண்மைச் சொரூபங்கள் அவற்றை அண்மித்து விட்டதன் பின் தானே தெரிகின்றன அல்லது புரிகின்றன.