Thursday, February 13, 2014

காதலர் தினம்

கொலை செய்வதென்று தீர்மானித்து கொல்லப்படுவரையும் தேர்ந்தெடுத்தபின்பும் மனதிற்குள் கொஞ்சம் கிலேசமாகத்தான் இருக்கிறது. இன்று நேற்றல்ல ஏறத்தாழ இரண்டு மாதங்களுக்கு முன்பே கொலை செய்வதென்று முடிவெடுத்தாயிற்று. ஆனால் யாரைக் கொலை செய்யலாம் என்பதில் தான் இத்தனை நாட்களை வீணடித்து விட்டேன். கொலை செய்தபின், என்னை மாட்டிவிடக்கூடிய எந்தவொரு தடயத்தையும் விட்டுவைக்கக் கூடாது என்பது தொடங்கி அதைத் தற்கொலையாகக் காட்ட என்னவெல்லாம் செய்யவேண்டும் என்பது வரை என்மனதிற்குள் பலவிதமான வழிமுறைகளையும் சிந்தித்தும் எந்தவொரு முடிவிற்கும் வரமுடியாமலிருந்தது. ஆயினும் லிண்டாவிடமிருந்து சற்றுமுன் வந்திருந்த அந்தக் குறுஞ்செய்தி யாரைக் கெலை செய்யலாம் என்கின்ற கேள்விக்கு வழிகாட்டிவிட்டிருந்தது.

Will you let me to be the happiest person in this valentines day?

நாளை பெப்ரவரி 14.

கடந்த சில வாரங்களாகவே லிண்டாவிடம் அந்த மாற்றத்தை நான் அவதானிக்கத் தொடங்கியிருந்தேன். அதற்கு முன்பே கொலை ஒன்றைச் செய்துவிட வேண்டுமென்ற ஆசை மனதிற்குள் மூண்டு விட்டிருந்ததால் அவளது மாற்றங்களை அவதானித்ததை நான் காட்டிக் கொள்ளாமலிருந்தேன். மற்றம்படிக்கு அவளைப் போன்றொரு அப்சரஸை அடைவதற்கு நான் ஏழேழு பிறப்பிலும் பிரம்சரிய விரதம் பூண்டிருந்திருக்க வேண்டும். எனது இப்பிறப்பு முழுமையடைந்து விட்டிருக்கிறது என்பதை அவளைச் சந்தித்த கணத்தில்தான் தான் உணர்ந்து கொண்டேன். அவளைப் போன்றொரு அழகான அம்சமான அணங்கை நீங்கள் முன்னெப்பொழுதும் பார்த்திருக்க முடியாது. இனிமேலும் பார்க்க முடியாது. அது உங்களின் விதி. ஏனெனில் நான் தான் நாளைக்கு அவளைக் கொன்றுவிடப் போகின்றேனே. 

அனைத்துக் காதலர்களும் என்னை மன்னித்துக் கொள்ளுங்கள். நாளை காதலர்தினம் தான் அன்றைய தினத்தில்தான் காதலை யாசித்தவளைக் காதலின் பெயரால் ஏமாற்றிக் கொலை செய்யப் போகின்றேன். நான் ஒன்றும் காதலுக்கு எதிரி கிடையாது. ஆயினும் பாழாய்ப்போன மனதிற்குள் கொலைசெய்தேயாக வேண்டுமென்கின்ற ஆசை, காதல் காம உணர்வுகள் யாவற்றையும் விஞ்சி நிற்கையில் மனிதநேயம் பற்றியெல்லொம் துளிகூட நினைத்துப் பார்க்க முடியாது. புரிகிறது உங்கள் குழப்பம். இப்படியும் ஒருத்தன் இருக்க முடியுமா என்று. விசுவாமித்திரரையே மேனகையால் காமுறச் செய்ய முடியுமென்றால் நான் எம்மாத்திரம்? அதற்காக என் ஆண்மையிலோ அல்லது அவள் கவர்ச்சியிலோ சிறிதும் சந்தேகம் வேண்டாம். 

நீங்கள் அரேபியக் குதிரைகள் பார்த்திருக்கிறீர்களா? அதிலும் மண்ணிறத்தில் ஒலிவ் எண்ணெய் விட்டு மினுக்கிய உரோமத்துடன் வாளிப்பாய், பார்த்தால் மீண்டும் மீண்டும் பார்க்கத் தூண்டும் அந்த வனப்பை கண்டிருக்கிறீர்களா. இப்போது அப்படியே அந்த வாளிப்பை ஒரு வெள்ளையினப் பெண்ணிடம் கற்பனை செய்து பாருங்கள். பொதுவாக வெள்ளையினப் பெண்களில் வாளிப்பான உடல்வாகு கொண்டவர்களை நீங்கள் பார்த்திருக்க மாட்டீர்கள். வெள்ளையினத்தில் விதிவிலக்காய் இவள் மட்டும் தன் தந்தையின் சேர்பிய ஜீனிலிருந்து அதைப் பெற்றிருந்தாள். அமெரிக்க சேர்பியக் கலப்பினில் உருவான அந்த அபூர்வ அழகியை கண்டால் எந்த ஆடவனும் ஒருதடவை ஆடித்தான் போவான். அப்படிப்பட்ட அந்த அதிசய நாரி நேரங்கெட்ட நேரத்தில் என்னிடம் தன் காதலைச் வெளிப்படுத்தியிருக்கிறாள்,


எல்லாவற்றிற்கும் ஒரு நேரங்காலம் வேண்டுமென்று சொல்வார்கள். அது என் விசயத்தில் எப்படியெல்லாம் விளiயாடுகிறது. இப்போது மட்டும் நான் சாதாரண மனநிலையிலிருந்திருந்தாலும் அவளின் கோரிக்கையை என்னால் பூர்த்தி செய்திருக்கமுடியாது என்பது என்னவொரு முரண். ஆம் அப்போது அவளல்ல நான் தான் உலகிலேயே மிகவும் மகிழ்ச்சி கூடிய மனிதனாக இருந்திருப்பேன். பிறகென்ன மயிருக்கு, அவளைக் கொலை செய்யப் போகிறேன் என்கிறீர்களா?  அதற்கும் அவள்தான் காரணம். சொல்கிறேன். எல்லாவற்றையும் சொல்கிறேன். நீங்கள் யாருக்கும் சொல்லிவிடமாட்டீர்கள் என்கின்ற நம்பிக்கையில் சொல்கிறேன். அவளுடன் பழகிய இந்த ஆறு மாதங்களில்தான் கொலை செய்யவேண்டுமென்கின்ற விஷநச்சு என்னுள் விதையாக விழுந்து இன்று வேர்விட்டு விழுதுவிட்டு ஆலமரமாகி என் மூளையின் ஒவ்வோர் கலங்களிலும் வியாபித்து நிற்கிறது.

அதுவரை கணினிகளின் மென்பொருளுக்கு நிரலி எழுதி எழுதி எழுதிக்  களைத்துக் கொண்டிருந்த நான் அதில் ஏற்பட்ட சலிப்பில் வேறு வேலை கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருந்த பொழுதில் எல்லா வேலைவாய்ப்பு முகவர் இணையத்தளங்களிலும் எனது சுயவிபரக் கோவையை தரவேற்றியிருந்தேன். லிண்டாவின் விதி அவளது மேலாளர் கண்ணில் என் விபரம் அகப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் அதுவொரு வெளித்தெரியாத ஆராய்ச்சி நிறுவனம். அவர்கள் ஆராய்ச்சி பற்றி வெளியே மூச்சுக்கூட விடமுடியாது. எனது பின்புலம் பற்றிய நீண்ட ஆய்வின் பின்னர் வேறு நிறுவனம் ஒன்றின் பெயரில் ஒப்பந்த அடிப்படையில் உள்வாங்கப்பட்ட நான் லிண்டாவின் ஆராய்ச்சிக்கு நிரலி எழுதும் பணியில் அமர்த்தப்பட்டேன். ஆராய்ச்சி பறறிய விபரங்கள் வெளியே கசிந்துவிடாபடி எத்தனையோ பாதுகாப்பு நடவடிக்கைகள். எனது மென்பொருள் தயாராகும் வரை நான் வெளிநபர்கள் யாரையும் சந்திக்க முடியாது. ஏறத்தாழ வீட்டுக்காவலில் தான் இருந்தேன். தேவையான அத்தனை வசதிகளும் செய்து தரப்பட்டிருந்தன. சட்டியிலிருந்து அடுப்புக்குள் விழுந்த கதையாகி விட்டிருந்தது என் நிலமை. அதிக சம்பளமும் தேவையாயிருந்த வேலைத்தள மாற்றமும் என்னை இங்கே கொண்டுவந்து தள்ளியிருந்தாலும் பாலைவனத் தென்றலாய் லிண்டாவின் அருகாமை அவை அனைத்தையும் மறக்கடித்துக் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் ஏற்பட்டிருந்த கசப்பான பாதுகாப்புக் கெடுபிடிகளை அடுத்து அவளுடன் நெருங்கவே அஞ்சியிருந்தேன். எல்லா இடங்களிலும் நான் கண்காணிக்கப்படுவதை உணர்ந்திருந்தாலும் அவளின் அருகாமை என் மனதிற்கு இதமாக இருந்தது. 

என்னை ஒத்த நிலையிலேயே அவளும் இருந்திருப்பாள் போலும். தானாகவே வந்து என்னுடன் உரையாடத் தொடங்கினாள். என்னைப் போலவே அவளுக்கும் உறவென்று சொல்லிக் கொள்வதற்கு யாரும் இருக்கவில்லை. அவளுடன் பழகுவதே ஒரு சித்திரவதை. உணவை அருகினில் வைத்துக் கொண்டு அதை உண்ணமுடியாமலிப்பது சித்திரவதையன்றி வேறென்ன? வந்த தொடக்க காலத்திலேயே ஒவ்வோரிடத்திலும் நான் கண்ணகாணிக்கபடுவதை உணர்ந்துவிட்டிருந்தேன். அத்துடன் இங்கே வேலைசெய்பவர்கள் முகங்களில்கூட மகிழ்ச்சியை நான் கண்டதில்லை. பெரும்பாலானவர்களும் இயந்திரங்களைப் போலவே வேலை செய்து கொண்டிருந்தார்கள். அதனால் என்னுள் இனம் புரியாதவொரு அச்சமும் வியாபித்திருந்தது. அப்படியில்லையெனில் எப்போதோ லிண்டாவை ...

ம்ம்ம்...விடுங்கள். அதற்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும். அவள் மேல் ஏற்பட்டிருந்த காமம் காதலாகிக் கொண்டிருந்த சமாந்தர காலத்தில் அங்கே நடக்கின்ற ஆராய்ச்சிகள் பற்றிய விபரங்களை நான் ஓரளவிற்கு ஊகித்துக் கொள்ளவும் ஆரம்பித்திருந்தேன். அந்த ஊகத்தை உறுதி செய்தவுடன் அதிர்ந்து போய் விட்டேன். அதைச் சொல்லி உங்களுக்குப் புரிய வைக்க என்னால் முடியாது. சொன்னால் என்னை விசரன் என்பீர்கள். அதிக மன அழுத்தம் ஏற்பட்டதால் பிதற்றுகிறேன் என்பீர்கள். ஆனால் இன்னும் பலபத்து வருடங்கள் கழித்து அப்போது வருகின்ற சந்ததிக்கு அது புரியக் கூடியதாகவிருக்கும். அதனால் சுருக்கமாவே சொல்லி விடுகிறேன். 

நம்பினால் நம்பங்கள். அவர்கள் அங்கே வெள்ளெலிகளைக் கொன்று அவற்றின் உயிரிலிருந்து சக்தி எடுப்பதற்குப் பரீட்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏறத்தாழ அவர்களது பரிசோதனை வெற்றியடைந்து விட்டிருந்தது. இப்போது அவர்கள் அதைப் பன்றி ஒன்றில் முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். அதுவும் வெற்றியடைந்தால் ஒரே கல்லில் இரண்டு மாங்காய்கள் கதைதான். உணவிற்காக உடலையும் சக்தித் தேவைக்காக அவற்றின் உயிரையும் பயன்படுத்திக் கொள்ளலாம். அந்த உயிர்ச் சக்தியை அளவிடும் மென்பொருளைத் தயாரிப்பதில்தான் நான் ஈடுபட்டு கடந்தவாரம் அது வெற்றிகரமாக முடிக்கப்பட்டிருந்தது.

அவர்களின் பரிசோதனை பற்றி எனக்குத் தெரிந்திருப்பதை ஏதோவொரு மயக்கப் பொழுதில் லிண்டாவிடம் தெரிவித்திருந்தேன். எனது அறிவுத் திறனை மெச்சியவள் என்னில் மயங்கத் தொடங்கியது அன்றிலிருந்துதான். நாளையுடன் எனது பணி ஒப்பந்தம் நிறைவடைகிறது. அதற்குள் ஒர் மனித உயிரின் சக்தியை அளந்துவிடவேண்டுமென்கின்ற ஆவல்தான் சந்ததியைப் புதுப்பிக்க வேண்டுமென்கின்ற இயல்பான உயிரியல் உந்துதலையும் மீறி அவளைக் கொலை செய்யுமாறு என்னைத் தூண்டிக்கொண்டிருக்கிறது. நாளையை விட்டால் அதற்குப் பின் எனக்கு அதற்குச் சாத்திமில்லாமல் போய்விடும். இன்றைய இரவிலேயே அதைச் செய்து பார்த்து விட்டால்.................

Why not? we both will be the happiest couple in the world since this midnight

செய்தியை அனுப்ப. உடனடியாகவே அவளிடமிருந்து பதில் வந்தது

Sure, come to the lab at exactly 12.00. you will hve a surprize too

காதலையும் கொன்று காதலியையும் கொல்ல வேண்டியிருக்கின்றதே என்கின்ற தயக்கம் இருந்தாலும், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பரிசோதனையை நானே செய்துவிடவேண்டுமென்கின்ற பேராசையில் ஆய்வகத்திற்கு விரைந்தேன்.

காத்திருந்தாள் கன்னி, மனதிற்குள் ஊற்றெடுத்த உணர்ச்சிகளை கவிதைகளாய்ச் சொல்லில் வடிக்கமுடியவில்லை. கட்டியணைத்து முத்தமிட ஆரம்பித்தாள். 

போகட்டும் சாகப் போகிறவள் இன்பத்தைக் கொஞ்சம் அனுபவித்துவிட்டுச் சாகட்டும் என்று நினைத்தேன். அவள் பிடி இறுகியது. கள்ளி இவ்வளவு ஆசையை என்மீது வைத்திருக்கிறாளே என்று பெருமையாக இருந்தது. அந்தளவிற்கு என்னை இறுக்கினாள் மேலும் இறுக்கினாள். மேலும் மேலும் இறுக்கிக்கொண்டே போனாள். முடியாது. இதற்குமேல் தாங்காது என்கின்ற நிலையயை நான் எப்போதோ அடைந்து விட்டிருந்தேன்.

இவ்வளவு பலசாலியாக இருக்கிறாளே. இவள் பெண்தானா என்கின்ற சந்தேகம் எழுந்தது. அவள் கரங்களில் பெண்மைக்குரிய மென்மை இல்லை. மார்பகங்கள் மெத்தென்று இருக்கவில்லை.முத்தமிட்டு நாக்கைச் சுழற்றித் துழாவியபோது தித்திக்கவில்லை. எல்லாமே என் எதிர்பார்ப்பிற்கு எதிர்மாறாகவே இருந்தன. இவள் பெண்ணில்லை. இவள் இவளல்ல. இது.!!!!! மனதுக்குள் பயம் வந்து குந்திக் கொண்டது.

என்னை அப்படியே தூக்கிக் கொண்டு பரிசோதனை இடத்தை நோக்கி நடந்தது. என்னைக் கீழே விட்டுவிடச் சொன்னேன். பதிலில்லை. கெஞ்சினேன் பதிலில்லை. என்னைக் கொண்டு சென்று அகண்ட அந்தப் பரிசோதனைக் குழாயினுள் பொருத்தும் போது தான் உறைத்தது. 

என்னையா?

2 comments:

  1. வணக்கம்...

    வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

    உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

    அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்

    அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி

    வலைச்சர தள இணைப்பு : கடிக்கீறியே வாத்து !!

    ReplyDelete
  2. I have been following your blog for long time. Specially veerana nee ierunthi. Last long two years I was wating for you to finish your story. I storangly belive not only me but others also wating. I beg you to finish it as soon as posible.
    Thanks
    Regards
    Ravi

    ReplyDelete