Wednesday, November 8, 2017

தொல்-காப்பியக் காதல்

அப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான்.

இடம்: வேலணை, யாழ்ப்பாணம்
காலம்: 22 ஓகஸ்ற் 1990

'கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்'

அன்றைய விடியலிலும் வழமைபோன்றே காகங்கள் கரைந்திருந்தன. சேவல்களும் தங்கள் கடமைகளைச் சரிவரவே செய்திருந்தன. அவனது அம்மாவும் வழமை போன்றே சிவப்பியில் பாலைக் கறந்து விட்டு கறுப்பியில் கறப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கையில் அவனும் இயற்கைக்கடனை முடித்துவிட்டுக் குளிப்பதற்காக கிணற்றடியினை அடைந்தான். வழமை போன்றே குளித்துவிட்டு வந்து ஜன்னலின் உள்ளே கொழுவிவிட்டிருந்த திருநீற்றுக்குட்டானிலிருந்து திருநீற்றினை எடுத்துப் பூசிவிட்டுவர, தாயாரும் வழமை போன்றே தயாராக பசுப்பால்த் தேனீரும் பனங்கட்டித்துண்டுடனும் வர, எல்லாமே வழமை போன்றிருக்கையில் தூரத்தில் உலங்குவானூர்தியினதும் குண்டுவீச்சு விமானங்களினதும் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. அது மட்டும் வழமைக்கு மாறாகவிருந்தது.

அந்த வழமைக்கு மாறான சத்தங்கள் அவர்கள் இருப்பையே வேரோடு பிடுங்கியெறியப்போகின்றன என்பது அந்தக்கணத்தில் அவர்களுக்கு ஒருதுளியேனும் தெரிந்திருக்கவில்லை. மூன்றுநாட்கள் தொடர்ச்சியாக பதுங்குகுழிகளினுள் அவர்களை முடக்கிப்போட்டது அந்த 'முச்சக்திப் (திரவிடபலய) படைநடவடிக்கை'. மூன்றாம்நாள் மாலையில் விமானங்களினது குண்டுவீச்சுக்களும்  உலங்குவானூர்திகளினது துப்பாக்கித் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும் ஓய்ந்துவிட்ட பின்னரேயே நேர்ந்துவிட்டிருந்த அவல நிகழ்வுகள் அவர்களுக்குத் தெரியவந்தன. சிதைக்கப்பட்டவை தவிர்ந்து எஞ்சியவூர் தானாகவே சிதையலாயிற்று. வல்லூறுகளால் சிதைக்கப்பட்ட அந்த அழகிய கூட்டினைவிட்டு எல்லாப் பறவைகளும் ஒவ்வொரு திக்கில் வெளியேறின.

கைக்கிளை (ஒருதலைக் காதல்)

இடம்பெயர்ந்து தற்காலிகமாக ஒரு உறவினர்வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கே பலரும் அவனது குடும்பத்தைப்போலவே இடம்பெயர்ந்து தங்கியிருந்தார்கள். அங்கேதான் அவளைக்கண்டான்.

'அணங்குகொல் ஆய்மயில்கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு' – (திருக்குறள் 1081)

அவன் குழம்பிப்போனான். அவள் மானிடப் பெண்ணா இல்லை தேவதையா?

அவனுக்குள் ஏதேதோ இரசாயன மாற்றங்கள். அவன் இப்போது அவனாக இல்லை. அவன் உடலின் அத்தனை அணுக்களும் கண்களாகமாறி அவளையே நோக்கிக்கொண்டிருக்க, அவள் அறைக்குள் சென்று மறைந்து விட்டாள். அவன் மனது அவனைவிட்டுப் பிரிந்து அவளுடனேயே சென்றுவிட்டது. அவள் யாராயிருப்பாள்? உறவினளாயிருப்பாளா? அவளை நான் காதலிக்கத் தொடங்கி விட்டேனா? பார்க்க என்னிலும் விடவயது குறைந்தவளாக இருக்கிறாள். அவளுக்கு என்காதல் புரியுமா? எனது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்வார்களா? இந்தவயதில் காதலா என்று ஏசமாட்டார்களா? நான் எனது படிப்புகளை முடித்து வேலை பெறுவதற்குள் அவளுக்குத் திருமணம் நடத்திவிடுவார்களா? அவளும் என்னைக் காதலிப்பாளா? அல்லது அவளுக்கு ஏற்கனவே வேறு யாரேனும் காதலன் இருக்கக்கூடுமோ? ச்சேச்சே அவளைப் பார்க்க அப்படியான பெண்ணாகத்தெரியவில்லை. அது மட்டுமன்றி அவளைப்பார்க்கச் சின்னப்பெண்ணாகவே தெரிகிறது. அதற்குள் காதல் கீதல் என்று விழுந்திருக்கமாட்டாள். அப்படியானால்; என்காதலை மட்டும் ஏற்றுக் கொள்வாளா? சிந்தனைச் சிக்கல்களால் உறக்கமில்லா விழிகளின் கனவுகளுடன் உலவினான் அவன்.

காமம் சாலா இளமையோள்வயின்,
ஏமம் சாலா இடும்பை எய்தி,
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்,
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து,
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்-
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.
– (தொல்காப்பியம். பொருள். நூற்பா-53)


அன்பின் ஐந்திணை

குறிஞ்சி (புணர்தலும் புணர்தல் நிமித்தமும்)
             
இடம்: பேராதனை, கண்டி (மலையும் மலைசார்ந்த இடமும்)
காலம்: 1998 கார்த்திகை (கூதிர்காலம் யாமப்பொழுது)

பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தில் அவன் மூன்றாம் ஆண்டில் கற்றுக்கொண்டிருந்தான். புதுமுகமாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள் ஆரம்பித்துவிட்டிருந்தன. கடந்த வருடங்களைப் போலல்லாமல் இம்முறை பகிடிவதைகளின் ஆரவாரம் குறைந்திருந்தது. கடந்தவருடம் வரப்பிரகாஷின் இழப்பின் பின் புதுமுகமாணவர்களுடன் கதைப்பதற்குக்கூட சிரேஷ்ட மாணவர்கள் அஞ்சினர். அவனும் அதற்கு விதிவிலக்காகாமல் தன்பாட்டில் இருந்தான். இல்லையெனில் புதுமுகமாணவர்களைச் சந்திப்பதில் முதல்ஆளாய் நிற்பவன் அவன். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. சிலவேளை அவளும் அங்கே வருவாளோ என்கின்ற மீ-மிகச்சிறிய நப்பாசை. அவ்வப்போது அவளின் ஞாபகங்கள் தலைதூக்கும். எவ்வளவு பெரிய கோழை அவன்? ஒரு வாரம் ஒரே வீட்டிலேயே இருந்திருக்கிறான் அவளின் பெயரைக்கூடத் தெரியாமல்.

வெள்ளிக்கிழமைகளில் மாலைவேளையில் குறிஞ்சிக்குமரனிடம் செல்வது அவன் பழக்கம். அக்பர்பாலத்தின் மீதாக இலங்கையின் மிகநீண்டநதியான மகாவலியாற்றினைக் கடந்து அந்த மலையில் ஏறிச்செல்வது ஒருவித சுகானுபவம். இந்தமுறை பூசைமுடிந்து இறங்க ஆயத்தமாகுகையில் எதேச்சையாக அவன் கண்களில் தட்டுப்பட்டது?

ஓ மை காட்! அவளா?

அவனுக்குள் ஹோர்மோன்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. கடவுளே அது அவளாகவே இருக்க வேண்டும். அவளுக்கு என்னை ஞாபகம் இருக்குமா? எப்படி அவளை அணுகுவது? பாதணிகளை எடுப்பதற்காக அவள் செல்வதைக் கண்டு அவள் அருகே விரைந்தான்.

'ஹலோ! Fresher-ஆ?

'ஓம் அண்ணா!'

'என்ன? அண்ணாவோ?'

'இல்லை அண்ணா!'

'என்ன நக்கலா? ராக்கிங் ஒண்டும் இல்லையெண்ட நினைப்போ?'

'இல்ல....' என்றவள் நிமிர்ந்து அவனை ஒருநொடி பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்'

'சீனியர்ஸ் எல்லாரையும் தெரிஞ்சிருக்கவேணுமெண்டு தெரியாதோ? என்னைத் தெரியுமோ?'

'தெரியும்'

'தெரியுமோ? எப்பிடி?'

'தெரியும்'

'எப்பிடித் தெரியுமெண்டுதான் கேட்டனான்?'

'அதான் தெரியுமெண்டு சொல்லுறனே. விடுங்கோவன்'

'நல்லா வாய் காட்டுறீர் என. நாளைக்கு பக்கல்ரீல என்ன வந்து சந்திக்கவேணும் சரியா?'

'ஏலாது. நான் ஈ-பக்கல்ரியில்ல. டென்ரல் பக்கல்ரி'

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள்போய்விட்டாள். ஒருவேளை அவளுக்கு என்னை ஞாகபமிருக்குமோ என்னைப்பற்றிய எல்லா விபரமும் அவளுக்குத் தெரிந்திருக்குமோ?’ அவன் குழம்பினான். அடுத்த வெள்ளி மாலைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்

அடுத்த வெள்ளி மாலை நேரத்துடன் சென்று, தன் நண்பனான கோவில்த் தலைவரிடம் அந்தப் பெண்கள் வந்தவுடன் அவர்களைப் பூப்பறிப்பதற்குத் தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக்கொண்டான்.

குறிஞ்சிக்குமரனின் பூந்தோட்டத்தில் அவனைக் கண்டதும் அவள்தன் தோழிக்குப்பின்னால் ஒளிந்துகொள்ள முற்பட்டாள்.

'எப்பிடி உங்களுக்கு என்னைத் தெரியும்?'

'எடியே இவரையா சொன்னனீ?' என்றாள் அவளுடன் வந்திருந்த அவள் சிநேகிதி.

தன்தோழியின் வாயைத் தன்தளிர்க்கரங்களால் பொத்தினாள் அவள்.

'என்ன சொன்னவா என்னைப்பற்றி? ராக்கிங் குடத்தனானாமோ?'

'ஓ! நீங்க ஏற்கனவே சந்திச்சிற்றீங்களா? கள்ளி இவள் சொல்லவேயில்லை'

'அப்ப என்னெண்டு இவாவுக்கு என்னைத் தெரியுமாம்?'

'இவாவின்ரை மாமி உங்கட சித்தியின்ரை ஒண்டுவிட்ட தங்கச்சியாம். தொண்ணூறில நீங்கெல்லாம் இடம்பெயர்ந்து ஒண்டா இருந்தனீங்கெண்டெல்லாம் சொன்னவள். நீங்க என்ன தெரியாதமாதிரிக் கதைக்கிறீங்கள்?'

'ஓ.....'

சித்தியின்ரை தங்கச்சி அவளுக்கு மாமியெண்டா அவள் தனக்கு என்ன முறை?

ஆயிரந்தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மியைக் கொட்டுங்களே....

அவனுக்குள் ஆனந்தக் கும்மி ஆரம்பமாகியது.

'நான் இஞ்சை நிற்கிறது உங்களுக்கு இடைஞ்சலா இருக்குமெண்டா நான் மாலை கட்டுற இடத்துக்குப் போறன்' என்றாள் அவள் தோழி

'உதை வேண்டுவ' என்றாள் அவள்.

அடுத்து வந்த வாரங்களில் ஒன்றில்

'இஞ்சேரும் உம்மட காலில மலையட்டை ஒண்டு ஊருது'

'ஐயோ எங்க?'

'அப்பிடியே அசையாம நில்லும் எடுத்து விடுறன்'

அவன் குனிந்து, யானைத்தந்தங்களைக் கடைந்து உருவாகியிருந்த அவள் கெண்டைக்காலில், ஒட்டிக்கொண்டிருந்த அட்டையை இழுத்தெடுத்தான்

இருவருமே மனதிற்குள் அட்டையைப் போற்றத்தொடங்கினர்.

மெய் தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல்,
இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல்,
நீடு நினைந்து இரங்கல், கூடுதல் உறுதல்,
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ.....
- (தொல்காப்பியம். பொருள். நூற்பா-99 இலிருந்து)

முல்லை (இருத்தலும் இருத்தல் நிமித்தமும்)

இடம்: புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (காடும் காடுசார்ந்த இடமும்)
காலம்: 2002 புரட்டாதி (கார்காலம் மாலைப்பொழுது)

அவள் தன் கற்கைநெறி முடிந்து, தற்காலிக பல்மருத்துவராக புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபாகார்த்த வைத்தியசாலையில் பணியாற்றத் தொடங்கியிருந்தாள். குடிசார் பொறியிலாளனான அவன் இலங்கையில் வேலைவாய்ப்பின்மை காரணமாகச் சிங்கப்பூர் சென்றுவிட்டிருந்தான். அவன் சிங்கப்பூர் சென்றபின்னர் இருந்துவந்த அவர்களுக்கிடையிலான தொலைபேசித் தொடர்புகளும் இப்போது துண்டிக்கப்பட்டாயிற்று. வேலைமுடிந்து மாலையில் வீடுவந்தால் வெறுமை அவளை நிரப்பிக் கொள்கிறது.

'மாலை என் வேதனை கூட்டுதடா
காதல் தன் வேலையைக் காட்டுதடா'

என்று அவள் திரையிசைப்பாடல்களை மாற்றி அவனுக்கு மடல்கள் வரையலானாள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி அமைதி திரும்பிக்கொண்டிருந்ததால் வடகிழக்கில் குடிசார் பொறியியலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்க அவனை நாட்டுக்குத் திரும்பிவரும்படி வற்புறுத்தினாள். எடுத்துக்கொண்ட வேலைத்திட்டம் முடியாமல் வரமுடியாது என்றும் இன்னும் ஒருவருடத்தில் அது முடிந்துவிடும், அது முடிந்தவுடன் வந்து விடுகிறேன் என்றும் மடலனுப்பினான் அவன்.

அவன் வருகைக்காக அவள் காத்திருக்கத் தொடங்கினாள்.

மருதம் (ஊடலும் ஊடல் நிமித்தமும்)

இடம்: திருவையாறு, கிளிநொச்சி (வயலும் வயல்சார்ந்த இடமும்)
காலம்: 2004 தை (வைகறை, விடியல் பொழுது)

நியாப் திட்டத்தின் கீழ் ஒரு பொறியியலாளனாக அவனும் இணைந்து கொண்டான். வேலை நிமித்தம் அவன் கிளிநொச்சியில் இருக்கவேண்டியேற்பட்டதால் அவளும் தன் வேலையை கிளிநொச்சியிலுள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றிக் கொண்டாள்.

ஒருமடமாது ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..

மாதங்கள் உருண்டோடின. மழலைகளும் ஒன்றன்பின் ஒன்றாய் இரண்டாயிற்று. ஓய்வில்லா வேலை அவளுக்கு. அவனுக்கும் அவளுக்குமிடையே பிள்ளைகள் உறங்க இருவருக்குமான இடைவெளி அதிகமாகியதாய் அவளுக்குத் தோன்றத் தொடங்கியது. அவனும் அடிக்கடி வேலை நிமித்தமெனக்கூறித் தாமதமாக வருவதாய் உணர்ந்தாள் அவள். தான் புறக்கணிக்கப்படுகின்றேனோ என்கின்ற எண்ணம் எழுந்தது. சந்தேகவிதை விழுந்தது. அவன் செயல்களில் ஐயங்கொண்டு அது முளைக்கவும் தொடங்கியது. அம்முளை வெளியே தெரியவும் தொடங்கியது.

பிள்ளைகள் இருவரும் உறங்கிவிட்ட பின்னும் அவன் வரக்காணோம். அன்று அவன் மிகத் தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். கதவைத் தட்டினான். அவன்மேல் அவளுக்கு மிகுந்த கோபம் உண்டானது. கதவினைத் திறக்காமல் அமைதியாக இருந்தாள். சாளரம் வழியே எட்டிப் பார்த்தான். அவள் கதிரையில் இருப்பது மங்கலாகத் தெரிந்தது. அவள் கோபமாக இருப்பது புரிந்தது. காரணம் புரியாமல் குழம்பினான். மீண்டும் மீண்டும் பலமாகக் கதவைத் தட்ட அவள் கதவினைத் திறந்தாள். அவனைக் கோபத்துடன் ஏறிட்டாள்.

'இப்ப என்னத்துக்கு இந்தநடுச்சாமத்தில வந்து கதவைத் தட்டுறியள்? பிள்ளைகள் நித்திரை கொள்ளுறது தெரியேல்லையா? வீட்டில மனிசி பிள்ளைகள் இருக்கெண்டு நினைப்பில்லை. இந்த வயதிலையும் அமரடங்காம ஊர்மேய வெளிக்கிட்டிருக்கிறார்'

'என்ன வாயெல்லாம் கண்டகண்டபாட்டுக்கு நீளுது?'

'எனக்கு வாய்தான் நீளுது. உங்கை சிலபேருக்கு கண்டகண்ட இடங்களில என்னென்னவோ எல்லாம் நீளுதாம்'

'உமக்கு இப்ப என்ன பிரச்சனை? ஒரு மனுசன நிம்மதியா வீட்டுக்கு வந்து நித்திரைகூட கொள்ளவிடாம?'

'ஐயோ ராசா, இப்ப உங்களுக்கு நான் பிரச்சனையாப் போயிற்றன் என? புதுசா ஒருத்தி கிடைச்சவுடனே நான் வேண்டாதவளாகிற்றன். நீங்க அவளிட்டையே போங்கோ. என்ரை பிள்ளைகள வளர்க்க என்னால ஏலும். என்ரை அம்மா அப்பாவை என்னைப் படிப்பிச்சது வீணாப் போகாது?'

'என்ன உளருறீர்? உமக்கென்ன விசரா பிடிச்சிருக்கு?'

'விசர்தான். உங்களில பைத்தியமா இருந்தனே. அதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்'

அவனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது. அதேசமயம் தன்மேல் அபாண்டமாகப் பழிசுமத்தும் அவளைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. தன்நிலை விளக்கினான். அவள் சந்தேகங்கள் அடிப்படையற்றவை என்பதைப் புரிய வைத்தான்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். – (திருக்குறள் 1327)

அவள் வென்றவளானாள்.

நெய்தல் (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்)

இடம்: மன்னார் (கடலும் கடல்சார்ந்த இடமும்)
காலம்: 2008 பங்குனி (எற்பாடு பொழுது)

அவன் வேலைநிமித்தம் கிளிநொச்சியிலிருந்து மன்னாருக்குச் சென்றுவரவேண்டியிருந்தது. அக்காலப்பகுதியில் வன்னிக்குள் போக்குவரத்துகள் ஆபத்தானவையாக மாறிக்கொண்டிருந்தன. ஆழஊடுருவித் தாக்கும் படைகளின் கிளைமோர்த் தாக்குதல்களுக்குப் பெரும்பாலும் பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்களே பலியாகிக் கொண்டிருந்தன. அவன் மன்னாருக்குச் சென்றுவரும் ஒவ்வொரு நாளும் அவளுக்குத் துயர் நிறைந்ததாய் மாறிற்று. எங்காவது தூரத்தில் ஏதாவதொரு வெடியோசை கேட்கையிலும் அவள் அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிடுகிறதோ என்று இரங்கிக் கொண்டும் தெய்வங்களிடம் அவனைக் காப்பாற்றுமாறு இறைஞ்சிக் கொண்டுமிருந்தாள்.

பாலை (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்)

இடம்: புதுமத்தாளன் (குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம்)
காலம்: 2009 சித்திரை (நண்பகல்ப் பொழுது)


போர் உக்கிரமடைந்து தொடர்ச்சியான இடப்பெயர்வுகளால் களைத்துப் போய் புதுமத்தாளன் பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். காயப்பட்டவர்களில் சிலர் கப்பலூடாகத் திருகோணமலைக்கு அழைத்தச்செல்லப்படுகையில் களவாகவும் வள்ளங்களில் சிலர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியிருந்தனர். அப்படியொரு வள்ளத்தில் அவர்களும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். எந்தப் பக்கத்தாலும் எந்தப் பகுதியிலிருந்தும் துப்பாக்கிச்சன்னங்கள் பதம் பார்க்கலாம். அவற்றைத் தாண்டிக் கடலுக்குள் வந்துவிட்டாலும், கடற்படையினரதோ அல்லது விமானப் படையினரதோ ரேடார்க் கண்களில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். சுற்றிவர கடல்முழுதும் நீரிருந்தும் பருகுதற்கு ஒருதுளி நீரில்லாத அந்தப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துப் புறப்பட்ட அவர்கள் தாம் அடையவேண்டிய கரையினை ஆண்டவன் அருளால் அடைந்தனர். அங்கே அவர்களை விட்டுவிட்டு, தன் குடும்பத்தின் எதிர்கால நலன்கருதி அவன் கப்பலேறினான்.

பெருந்திணை (பொருந்தாக் காதல்)

இடம்: ரொறன்ரோ, கனடா
காலம்: 2017 நவம்பர்

அவன் மட்டும் இங்கே. அவன் வந்த கப்பலின் பின் எதுவுமே இங்கேவர முடியாதாவாறு ஆயிற்று. அவளும் பிள்ளைகளும் மலேசியாவில். அவனது அகதிக்கோரிக்கைக்கும் இன்னமும் ஒரு முடிவு கிட்டாத நிலையில் ஏழாண்டுகளுக்கும் மேலாக அவளையும் தன் பிள்ளைகளையும் காணமுடியாதவாறு தவித்தக் கொண்டிருந்தவனுக்குப் புதிய பிரச்சனையொன்று முளைக்கத் தொடங்கியிருந்தது.

அந்தப் புதியவள் வேற்றினத்தவள். அவனைப்போலவே அகதிக்கோரிக்கையின் பதிலுக்காகக் காத்திருப்பவள். அவனும் அவளும் ஒரேயிடத்திலேயே களவாகப் பணியாற்றுகிறார்கள். அவனிலும் வயதில் மூத்தவள். ஆயினும் இப்போது அவனுக்கு அழகானவளாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறாள். இப்போதெல்லாம் அவள் குனிந்து நிமிர்ந்து வேலைசெய்கையில் அலையும் தன்விழிகளைத் தடுக்கவேண்டுமென்று அவனுக்குத் தோன்றுவதில்லை. கோடைகாலம் முடிந்து குளிர்பனிக்காலம் ஆரம்பித்தாலும் தன் ஆடைகளின் நீள அகலங்களை அதிகரிக்கவேண்டுமென்று அவளுக்கும் தோன்றுவதில்லை. அப்படி அவளுக்குத் தோன்றாமலிருப்பது அவனுடனிருக்கும் நேரங்களில் மட்டுமே என்பதை அவனும் அவளும் தெரிந்தே வைத்திருந்தனர். கண்ணுக்குத் தெரியாதவொரு எல்லைக்கோட்டில் நின்று கண்ணாமூச்சியாடும் அவர்கள், அந்த எல்லைக்கோட்டைக் கடக்காதிருப்பராக.

ஏறிய மடல் திறம், இளமை தீர் திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்,
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ,
செப்பிய நான்கும்-பெருந்திணைக் குறிப்பே

– (தொல்காப்பியம். பொருள். நூற்பா-54)



நன்றி: தாய்வீடு (நவம்பர் 2017)

படங்கள்: இணையத்தில் பெறப்பட்டன.

====================

Wednesday, October 11, 2017

காத்திருக்கும் கண்ணகிகளும் அகலிகைகளும்


1995




தூண்டில் வீசுகின்ற
மீன்கள்!
உன் விழிகள்.




ஏற்கனவே உன் கவிதைகளெனும் தூண்டிலில் இந்த மீன் மாட்டிவிட்டதே கண்ணா? மீண்டுமெதற்காய் வலைவீசுகின்றாய்?”

செல்லமாய்ச் சிணுங்கியவாறே தன் மிதிவண்டியை நிறுத்திவிட்டு, காத்திருந்த அவன் கைவலைக்குள் விரும்பிப்போய் விழுந்தாள் அவள்.

அதென்ன கண்ணா! எப்போதுமே உனக்கென் கண்மேல்தான் கண்ணா?” செல்லமாய் ஊடினாள்

கண்கண்டார் கண்ணே கண்டாரடி கிளியே! அதற்கும் கீழே அத்துமீறினால், ஆசைகள் அவிழலாம், ஆடைகள் நழுவலாம். எம்நிலையும் வழுவலாம். ஏனடி வீண்வம்பு? கண்டுண்டிலோம் பொறுத்திருப்போம். காலம் வரும்வரை காத்திருப்போமடி

சரிசரி என் கண்ணையே நீபாரு கண்ணா. அதையே நீபாடு கண்ணா

குளம்முழுதும் ஒருமீனாய்
தளும்புமிரு குளங்கள்!
மூழ்கவா நீந்தவா?

நீ எங்கே வரச்சொன்னாலும் நான் வந்து விடுகிறேனடா கண்ணா

என்னதூஉஉஉ?”

நீதானே கண்ணா, என்னை மூழ்க வா, நீந்த வா என்று இருமுறை வரச்சொன்னாய்

ஆகா! அருமை அருமை. நான் உன் விழியாழிகளுக்குள் மூழ்கட்டுமா இல்லை நீந்தட்டுமா என்று கேட்டால், உன்நாவில் தமிழ் வந்து வளைந்து விளையாடுகிறதே என் கண்மணியே

கம்பன் வீட்டுக் கட்டுத்தறியும் கவிபாடுமென்றால், இந்தக் கவிமன்னன் காதலி நாவில் தமிழ் கொஞ்சம் வளையாதோ? நானும் கொஞ்சம் கவிதை சொல்லவா?”

நீயே ஒரு கவிதை இப்போ நீ ஒரு கவி தை.

உருவற்ற அநங்கனின்
கரும்பு வில்லோ? - உன்
அரும்பு மீசை?

எப்படியிருக்கிறது இக்கன்னியின் கன்னிக்கவிதை?

அஞ்சுகமே அடியென் அருஞ்சுகமே - எனைக்
கொஞ்சுவென உனைக் கெஞ்சுவனே
கண்நகைக்கும் அருங் கண்ணகியே
பெண்பகைக்கும் நீ பெருஞ்சகியே!
உன்நெஞ்சமடி அதுவென் மஞ்சமடி -நான்
உன்தஞ்சமடி நீயென் வஞ்சியடி

கொல்லாதேடா கொலைகாராஅவன் மார்பில் தலைசாய்த்து மோகமயத்தில் கிறங்கினாள். அவன் இதழ்களெனும் இருமலர்கள் அவள் விழிவண்டுகளை மொய்த்தன. அவன் நயனங்களைத் துளைக்கும் நோக்குடையவாய் துகிலுக்குள் அவள் நகில்கள். தானாகத் தாழ்ந்த விழிகளை பிடுங்கியெடுத்து சூல்கொண்ட கார்முகிலென திரண்டிருந்த அவள் கூந்தலில் சூடினான்.

அகில் மணக்குமுன் கூந்தல்
அதில் மயங்குமென் மனது
அய்யோ கொடுமையடி!
குறுநகை விழியாளே!
குறுகுறுத்த விழியாலே
எனைப் படித்தவளே!
படிக்கவா நானுமோர்
நல்லதொரு குறுந்தொகையை?

கொங்குதேர் வாழ்க்கை அம்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியற்
செறி எயிற்று அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே (குறுந்தொகை -2)


அடுப்பில் வைத்த சிரட்டை மூசியெரிகையில் உண்டாகும் சீறுமொலியும் அதைத் தொடர்ந்தெழுந்த கூய்ய்ய்ங்ங்ங்.............. எனும் சத்தமும். கிபிர் மிகையொலி விமானங்கள் இரண்டு அருகில் எங்கோ குண்டுவீச தாழப் பறந்துவருவதை உணர்த்திற்று.

கான யானை கைவிடு பசுங்களை
மீன் எறி தூண்டிலின் நிவக்கும்..  (குறுந்தொகை -54 இல் இருந்து)

சட்டென்று பிரிந்து வீழ்ந்து நிலத்தோடு படுத்துப் பதுங்கினார்கள்.

மதயானைகள் புகுந்த மூங்கிற்காடாயானது அருகிலிருந்த நகரம். அவனும் அவளும் அவரவர்வீடு நோக்கி விரைந்தார்கள். சில வாரங்களிலேயே ஊர்முழுதுமே வேருடன் பிடுங்கி வீசப்பட்டது.


1998

யாழ்ப்பாணத்துக்கு திரும்பி வந்து ரெண்டு வருசமாச்சு. ஆராரு இப்ப எங்கெங்கை இருக்கினமோ? சும்மா அவனையே நினைச்சுக் கொண்டிருக்காம அடுத்த அலுவலைப் பார்க்கவேணும் நகி. அம்மா சொல்லுறா, கனடாவில இருக்கிற மாப்பிள்ளைக்கு, உன்ரை போட்டோவ ஆற்றையோ கலியாண வீட்டு அல்பத்தில பாத்திற்று பிடிச்சுப்போய்தான் கேட்டு வந்தவையாம். இது உனக்கு நல்ல ஒரு சான்ஸ். விட்டிராத

சும்மா லூசுத்தனமாக் கதைக்காதை

நீதான் விசரி மாதிரிக் கதைக்கிறாய். சும்மா இந்தச் செக்பொயின்ருகளுக்கையும் கேர்பியூக்களுக்கையும் (ஊரடங்குச்சட்டம்) கிடந்து கஷ்ரப்படாம அங்க கனடாக்குப் போனா எவ்வளவு சந்தோஷமா இருக்கலாம் தெரியுமா? அதுமட்டுமில்லை கொஞ்சக் காலத்திலயே உன்ரை அப்பா அம்மாவையையும் ஸ்பொன்சர் பண்ணீரலாம். அதுக்குப்பிறகு நீங்க எல்லாருமே அங்க சந்தோஷமா இருக்கலாம் தானே. இஞ்சை கிருஷாந்தி, ரஜினி ஆக்களுக்கு நடந்த கதை தெரியும் தானே. பிறகேன் யோசிக்கிறாய்”?

அந்தப் கதைகளையெல்லாம் இனி என்னோடை கதைக்காதை. எனக்கு அவனைப்பற்றி நல்லாத் தெரியும். அவன் எப்பிடியும் என்ன கொன்ராக்ற் பண்ணுவான். அதுவரைக்கும் நான் அவனுக்காகக் காத்திருப்பன்.

நீயென்ன சரியான லூசா? அவன் உயிரோட இருக்கிறானோ எண்டுகூடத் தெரியாது. அப்படி எங்கையாலும் இருந்திருந்தா உன்ரை இந்த விலாசத்துக்கு ஒருகடிதமாவது போட்டுப் பாத்திருக்கலாம் தானே?

நிலத்தினும் பெரிதே வானினும் உயர்ந்தன்று
நீரினும் ஆரளவின்றே - சாரல்
கருங்கோற் குறிஞ்சிப் பூக் கொண்டு
பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே. (குறுந்தொகை -3)

இதுக்குத்தான் நான் அப்பவே படிச்சுப் படிச்சுச் சொன்னனான் ஏ.எல்லில கொமர்ஸ்ஸைப் படியெண்டு. கேட்டாத்தானே. இப்பபார் ஆர்ட்ஸ் பக்கல்ரிக்குள்ள போய் அழிஞ்சுபோனதுதான் மிச்சம். வேலையும் எடுக்கேலாது...

கொமர்ஸ் படிச்சாப்போல உனக்கென்ன இப்ப அரசாங்க வேலையா கிடைச்சிருக்கு?”

அடுத்த மாதம் வாற லங்கா முடிதகப்பலில நான் கொழும்புக்குப் போயிருவன். அங்க பிறைவேற் கம்பனிகளில அரசாங்கச் சம்பளத்திலும் விட கூடச் சம்பளம். நீ சும்மா அவனையே நினைச்சுக் கொண்டு உன்ரை வாழ்க்கைய வீணாக்கிப்போடாத. அதமட்டும்தான் என்னால சொல்லேலும். நான் வெளிக்கிடுறன். எனக்கு பயண அலுவல்கள் நிறையக் கிடக்கு

அவன் வாருவானா?

கன்று முண்ணாது கலத்தினும் படாது
நல்ஆன் தீம்பால் நிலத்துஉக்கா அங்கு
எனக்கும் ஆகாது என்ஐக்கும் உதவாது
பசலை உணீஇயர் வேண்டும்
திதலை அல்குல் என்மாமைக் கவினே. (குறுந்தொகை 27)


2004

வீட்டுக்குள்ள ஒருத்தரையும் காணேல்லை. வீடெல்லாம் திறந்து கிடக்கு, நான் சரியான விலாசத்துக்குத்தான் வந்திருக்கிறனோ எண்டும் தெரியுதில்லை. குசினிப் புகட்டுக்குள்ளால புகை வருகுது. இவள் உள்ளுக்குள்ளதான் இருக்கிறாள் போல. வீட்டுக்காரர்... வீட்டுக்காரர்....

ஆரது? நான் இஞ்ச குசினிக்குள்ள அலுவலா நிக்கிறன். நீங்க உள்ளுக்குள்ள வாங்கோ . . . அடீஇஇ நீயா! எப்பயடி கொழும்பால வந்தனீ? எப்படிப் பயணமெல்லாம்?. யாழ்ப்பாணத்திலயிருந்து கப்பலில கொழும்புக்குப் போனனீ. இப்ப பஸ்ஸில கிளிநொச்சிக்கு என்னைத்தேடி வந்திருக்கிறாய் என? என்ன மாதிரி ஓமந்தையில செக்கிங் பிரச்சினைகளொண்டும் இருக்கேல்லையா?”

அதெல்லாம் ஒண்டும் பெரிய பிரச்சனையில்லை. அதுசரி கல்லயாணமெல்லாம் முடிஞ்சுதெண்டு கேள்விப்பட்டன். எங்கை ஆளைக் காணேல்ல. ஆராள்? என்ன செய்கிறேர்? முந்தியெண்டா குசினிப்பக்கமே எட்டிப் பாக்காத நீ, இப்ப குசினிக்குள்ள அறம்புறமாச் சமைச்சுக்கொண்டு நிக்கிறாய். நான் வருவனெண்டும் உனக்குத் தெரியாது. ஆருக்கு இப்பிடி விசேசமாய்ச் சமைக்கிறாய்?”

கேள்வியெல்லாம் கேட்டு முடிஞ்சுதோ? ஏன் உனக்கு அவரைத் தெரியாதா? அவர் உயிரோட இருக்கிறேரா இல்லையோ எண்டெல்லாம் என்னை நக்கலடிச்சாய். இன்னும் கொஞ்ச நேரத்தில மத்தியானச் சாப்பாட்டுக்கு வந்திருவார். இரு சொல்லுறன் அவரிட்ட

வாவ்! உண்மையாவாடி? ஐ ஆம் சோ ஹப்பீடி. எங்கையாம் இருந்தவர்?”

அவரே வருவேர். நீ அவரிட்டையே கேட்டுக் கொள்ளு. உன்னோட கதைச்சுகதைச்சு நான் சமையலைக் கவனிக்காம விட்டிட்டன்”.

தன் சேலைத் தலைப்பால் அடுப்படியிலிருந்த சட்டியைப் பிடித்து இறக்கும் அவளைக் காண அவள் தோழிக்கு வியப்பாயிருந்தது.

என்னெடி அப்பிடி ஆவெண்டு பாக்கிறாய்?”

இல்ல முந்தியெண்டா உன்ர உடுப்பில ஒரு சின்ன ஊத்தைபட்டாக்கூட கத்திக் கூப்பாடு போடுவ. இப்ப கரிச்சட்டியையே சீலைத்தலைப்பால பிடிச்சு இறக்கிற. அதுதான் நான் பாக்கிறது கனவா இல்ல நனவா எண்டு யோசிக்கிறன்.

இல்லையடி குழம்பு நல்ல பதமா வந்திற்றுது. இதுக்குமேல வத்த விட்டா அவருக்குப் பிடிக்காது அதுதான். சீலையைப் பிறகும் தோச்சுக் கொள்ளலாம் தானே

அம்மா தாயே! உன்னை அடிச்சுக்க யாராலுமே முடியாதும்மா

அடி போடி. தமிழைப் படிக்காத உனக்கெல்லாம் இது எங்க விளங்கப்போகுது?”

முளிதயிர் பிசைந்த காந்தள் மெல்விரல்
கழுவுறு கலிங்கம் கழாஅது உடீஇ
குவளை உண்கண் குய்ப்புகை கழுமத்
தான் துழந்து அட்ட தீம்புளிப் பாகர்
இனிதுஎனக் கணவன் உண்டலின்
நுண்ணிதின் மகிழ்ந்தன்று ஒண்ணுதல் முகனே (குறுந்தொகை 167)


2017

கண்முன்னே கட்டிய காதல் கணவனைக் கைதாக்கிக் கயவர் கொண்டுசெல்ல கையறுநிலையில் கலங்கி நின்று கதறியவள் அவள். காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தருமாறு நடாத்தப்படுகின்ற எல்லாப் போராட்டங்களிலும் அவளும் கண்ணீர் உகுக்கக் கால்கள் தேயக் கலந்து கொள்கிறாள். அவனில்லா வீட்டில் அவள் நுழைய முடியாத அளவிற்கு அவன் ஞாபகங்கள் அங்கிங்கெனாது எங்கும் நீக்கமற வியாபித்துப் பரவியிருந்தன. களைத்து வந்த, அவள் தளிர் மேனி ஒரு மூலையில் குறங்கிக் கிடக்கிறது. திருமணத்தின் போது அவளைத் தழுவியவாறு நின்று அவன் எடுத்து படம் அவள் மனதை வதைக்கிறது.


விண் ஊர்பு திரிதரும் வீங்கு செலல் மண்டிலத்து,
முரண் மிகு சிறப்பின் செல்வனுடன் நிலைஇய
உரோகிணி நினைவனள் நோக்கி நெடிது உயிரா
மா இதழ் ஏந்திய மலிந்து வீழ் அரிப் பனி
செவ் விரல் கடைக்கண் சேர்த்தி, சில தெறியா
புலம்பொடு வதியும் நலம் கிளர் அரிவை  (நெடுநல்வாடை 161 -166)


தவமாய்த் தவமிருந்து வற்றாப்பளை கண்ணகை அம்மன் அருளால் பிறந்த பெண்ணாயிற்றே அவள். அந்தத் தெய்வத்தின் அருள்கூடவா அவளை விட்டுப் போயிற்று? கண்ணகி என்று பெயர் வைத்ததே தப்போ? சிலப்பதிகாரக் கண்ணகியின் காத்திருப்பில் கோவலன். மாதவியிடமிருந்து மீண்டு வந்தானே. சங்ககாலக் கண்ணகியின் பேகனை வம்பப் பரத்தையரிடமிருந்த மீட்டுப் பாணர்கள் கொடுத்தார்களே. இந்தக் கண்ணகியின் கண்ணாளனை வஞ்சகரிடமிருந்து யார் மீட்டுத் தருவாரோ?

..... இன்னாது
இகுத்த கண்ணீர் நிறுத்தல் செல்லாள்
முலையகம் நனைப்ப விம்மி
குழல் இணைவதுபோல் அழுதனள் (புறநானூறு 143 இல் இருந்து)

கயவர் கொண்டு சென்ற தம் காதற்கணவர்களின் வருகைக்காய்க் காத்திருக்கும் பலநூற்றுக்கணக்கான கண்ணகிகளில் இவளும் ஒருத்தி, இவளாலும் உறங்க முடிவதில்லை.

நோமென் நெஞ்சே நோமென் நெஞ்சே
புன்புலத் தமன்ற சிறியிலை நெருஞ்சிக்
கட்கின் புதுமலர் முட்பயந் தாஅங்
கினிய செய்தநங் காதலர்   (குறுந்தொகை 202 இல் இருந்து)
காணாமல் ஆனதால் நோமென் நெஞ்சே

எழுந்து கால்போன போக்கிலே நடந்து போகிறாள் அப்பேதை.

ஐயோ! யாராவது அவளிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லுங்களேன். பாதங்களைக் கொஞ்சம் பார்த்து வைக்குமாறு. இராமனுக்காய் இப்போதும் காத்திருக்கும் அகலிகைகளில் ஒருத்தி அவளை அரவணைத்துக்கொள்ளக்கூடும்.

இராமனின் பாதத் தீண்டலுக்காய்
இராப்பகலாய்க் காத்திருக்கிறார்கள்
மிதிவெடி அகலிகைகள்!

                                           *************

உசாவல்: குறுந்தொகை, புறநானூறு, நெடுநல்வாடை

படம் - இணையத்தில் பெறப்பட்டது

=================

நன்றி: தாய்வீடு (ஒக்ரோபர் 2017)