Wednesday, November 8, 2017

தொல்-காப்பியக் காதல்

அப்போது அவனுக்கு வயது பதினாறு. க.பொ.த (சா.த) பரீட்சைக்குப் படித்துக்கொண்டிருந்தான்.

இடம்: வேலணை, யாழ்ப்பாணம்
காலம்: 22 ஓகஸ்ற் 1990

'கூவின பூங்குயில் கூவின கோழி
குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்'

அன்றைய விடியலிலும் வழமைபோன்றே காகங்கள் கரைந்திருந்தன. சேவல்களும் தங்கள் கடமைகளைச் சரிவரவே செய்திருந்தன. அவனது அம்மாவும் வழமை போன்றே சிவப்பியில் பாலைக் கறந்து விட்டு கறுப்பியில் கறப்பதற்கு ஆயத்தப்படுத்திக்கொண்டிருக்கையில் அவனும் இயற்கைக்கடனை முடித்துவிட்டுக் குளிப்பதற்காக கிணற்றடியினை அடைந்தான். வழமை போன்றே குளித்துவிட்டு வந்து ஜன்னலின் உள்ளே கொழுவிவிட்டிருந்த திருநீற்றுக்குட்டானிலிருந்து திருநீற்றினை எடுத்துப் பூசிவிட்டுவர, தாயாரும் வழமை போன்றே தயாராக பசுப்பால்த் தேனீரும் பனங்கட்டித்துண்டுடனும் வர, எல்லாமே வழமை போன்றிருக்கையில் தூரத்தில் உலங்குவானூர்தியினதும் குண்டுவீச்சு விமானங்களினதும் சத்தங்கள் கேட்கத் தொடங்கின. அது மட்டும் வழமைக்கு மாறாகவிருந்தது.

அந்த வழமைக்கு மாறான சத்தங்கள் அவர்கள் இருப்பையே வேரோடு பிடுங்கியெறியப்போகின்றன என்பது அந்தக்கணத்தில் அவர்களுக்கு ஒருதுளியேனும் தெரிந்திருக்கவில்லை. மூன்றுநாட்கள் தொடர்ச்சியாக பதுங்குகுழிகளினுள் அவர்களை முடக்கிப்போட்டது அந்த 'முச்சக்திப் (திரவிடபலய) படைநடவடிக்கை'. மூன்றாம்நாள் மாலையில் விமானங்களினது குண்டுவீச்சுக்களும்  உலங்குவானூர்திகளினது துப்பாக்கித் தாக்குதல்களும், எறிகணை வீச்சுக்களும் ஓய்ந்துவிட்ட பின்னரேயே நேர்ந்துவிட்டிருந்த அவல நிகழ்வுகள் அவர்களுக்குத் தெரியவந்தன. சிதைக்கப்பட்டவை தவிர்ந்து எஞ்சியவூர் தானாகவே சிதையலாயிற்று. வல்லூறுகளால் சிதைக்கப்பட்ட அந்த அழகிய கூட்டினைவிட்டு எல்லாப் பறவைகளும் ஒவ்வொரு திக்கில் வெளியேறின.

கைக்கிளை (ஒருதலைக் காதல்)

இடம்பெயர்ந்து தற்காலிகமாக ஒரு உறவினர்வீட்டில் தங்க நேர்ந்தது. அங்கே பலரும் அவனது குடும்பத்தைப்போலவே இடம்பெயர்ந்து தங்கியிருந்தார்கள். அங்கேதான் அவளைக்கண்டான்.

'அணங்குகொல் ஆய்மயில்கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு' – (திருக்குறள் 1081)

அவன் குழம்பிப்போனான். அவள் மானிடப் பெண்ணா இல்லை தேவதையா?

அவனுக்குள் ஏதேதோ இரசாயன மாற்றங்கள். அவன் இப்போது அவனாக இல்லை. அவன் உடலின் அத்தனை அணுக்களும் கண்களாகமாறி அவளையே நோக்கிக்கொண்டிருக்க, அவள் அறைக்குள் சென்று மறைந்து விட்டாள். அவன் மனது அவனைவிட்டுப் பிரிந்து அவளுடனேயே சென்றுவிட்டது. அவள் யாராயிருப்பாள்? உறவினளாயிருப்பாளா? அவளை நான் காதலிக்கத் தொடங்கி விட்டேனா? பார்க்க என்னிலும் விடவயது குறைந்தவளாக இருக்கிறாள். அவளுக்கு என்காதல் புரியுமா? எனது காதலை இருவீட்டாரும் ஏற்றுக்கொள்வார்களா? இந்தவயதில் காதலா என்று ஏசமாட்டார்களா? நான் எனது படிப்புகளை முடித்து வேலை பெறுவதற்குள் அவளுக்குத் திருமணம் நடத்திவிடுவார்களா? அவளும் என்னைக் காதலிப்பாளா? அல்லது அவளுக்கு ஏற்கனவே வேறு யாரேனும் காதலன் இருக்கக்கூடுமோ? ச்சேச்சே அவளைப் பார்க்க அப்படியான பெண்ணாகத்தெரியவில்லை. அது மட்டுமன்றி அவளைப்பார்க்கச் சின்னப்பெண்ணாகவே தெரிகிறது. அதற்குள் காதல் கீதல் என்று விழுந்திருக்கமாட்டாள். அப்படியானால்; என்காதலை மட்டும் ஏற்றுக் கொள்வாளா? சிந்தனைச் சிக்கல்களால் உறக்கமில்லா விழிகளின் கனவுகளுடன் உலவினான் அவன்.

காமம் சாலா இளமையோள்வயின்,
ஏமம் சாலா இடும்பை எய்தி,
நன்மையும் தீமையும் என்று இரு திறத்தான்,
தன்னொடும் அவளொடும் தருக்கிய புணர்த்து,
சொல் எதிர் பெறாஅன் சொல்லி இன்புறல்-
புல்லித் தோன்றும் கைக்கிளைக் குறிப்பே.
– (தொல்காப்பியம். பொருள். நூற்பா-53)


அன்பின் ஐந்திணை

குறிஞ்சி (புணர்தலும் புணர்தல் நிமித்தமும்)
             
இடம்: பேராதனை, கண்டி (மலையும் மலைசார்ந்த இடமும்)
காலம்: 1998 கார்த்திகை (கூதிர்காலம் யாமப்பொழுது)

பேராதனைப் பல்கலைக்கழகப் பொறியியல் பீடத்தில் அவன் மூன்றாம் ஆண்டில் கற்றுக்கொண்டிருந்தான். புதுமுகமாணவர்களுக்கான ஆங்கில வகுப்புகள் ஆரம்பித்துவிட்டிருந்தன. கடந்த வருடங்களைப் போலல்லாமல் இம்முறை பகிடிவதைகளின் ஆரவாரம் குறைந்திருந்தது. கடந்தவருடம் வரப்பிரகாஷின் இழப்பின் பின் புதுமுகமாணவர்களுடன் கதைப்பதற்குக்கூட சிரேஷ்ட மாணவர்கள் அஞ்சினர். அவனும் அதற்கு விதிவிலக்காகாமல் தன்பாட்டில் இருந்தான். இல்லையெனில் புதுமுகமாணவர்களைச் சந்திப்பதில் முதல்ஆளாய் நிற்பவன் அவன். அதற்குக் காரணமில்லாமல் இல்லை. சிலவேளை அவளும் அங்கே வருவாளோ என்கின்ற மீ-மிகச்சிறிய நப்பாசை. அவ்வப்போது அவளின் ஞாபகங்கள் தலைதூக்கும். எவ்வளவு பெரிய கோழை அவன்? ஒரு வாரம் ஒரே வீட்டிலேயே இருந்திருக்கிறான் அவளின் பெயரைக்கூடத் தெரியாமல்.

வெள்ளிக்கிழமைகளில் மாலைவேளையில் குறிஞ்சிக்குமரனிடம் செல்வது அவன் பழக்கம். அக்பர்பாலத்தின் மீதாக இலங்கையின் மிகநீண்டநதியான மகாவலியாற்றினைக் கடந்து அந்த மலையில் ஏறிச்செல்வது ஒருவித சுகானுபவம். இந்தமுறை பூசைமுடிந்து இறங்க ஆயத்தமாகுகையில் எதேச்சையாக அவன் கண்களில் தட்டுப்பட்டது?

ஓ மை காட்! அவளா?

அவனுக்குள் ஹோர்மோன்கள் ஆர்ப்பரிக்கத் தொடங்கின. கடவுளே அது அவளாகவே இருக்க வேண்டும். அவளுக்கு என்னை ஞாபகம் இருக்குமா? எப்படி அவளை அணுகுவது? பாதணிகளை எடுப்பதற்காக அவள் செல்வதைக் கண்டு அவள் அருகே விரைந்தான்.

'ஹலோ! Fresher-ஆ?

'ஓம் அண்ணா!'

'என்ன? அண்ணாவோ?'

'இல்லை அண்ணா!'

'என்ன நக்கலா? ராக்கிங் ஒண்டும் இல்லையெண்ட நினைப்போ?'

'இல்ல....' என்றவள் நிமிர்ந்து அவனை ஒருநொடி பார்த்துவிட்டு மீண்டும் தலையைக் குனிந்துகொண்டாள்'

'சீனியர்ஸ் எல்லாரையும் தெரிஞ்சிருக்கவேணுமெண்டு தெரியாதோ? என்னைத் தெரியுமோ?'

'தெரியும்'

'தெரியுமோ? எப்பிடி?'

'தெரியும்'

'எப்பிடித் தெரியுமெண்டுதான் கேட்டனான்?'

'அதான் தெரியுமெண்டு சொல்லுறனே. விடுங்கோவன்'

'நல்லா வாய் காட்டுறீர் என. நாளைக்கு பக்கல்ரீல என்ன வந்து சந்திக்கவேணும் சரியா?'

'ஏலாது. நான் ஈ-பக்கல்ரியில்ல. டென்ரல் பக்கல்ரி'

அவன் பதிலை எதிர்பார்க்காமல் அவள்போய்விட்டாள். ஒருவேளை அவளுக்கு என்னை ஞாகபமிருக்குமோ என்னைப்பற்றிய எல்லா விபரமும் அவளுக்குத் தெரிந்திருக்குமோ?’ அவன் குழம்பினான். அடுத்த வெள்ளி மாலைக்காகக் காத்திருக்க ஆரம்பித்தான்

அடுத்த வெள்ளி மாலை நேரத்துடன் சென்று, தன் நண்பனான கோவில்த் தலைவரிடம் அந்தப் பெண்கள் வந்தவுடன் அவர்களைப் பூப்பறிப்பதற்குத் தன்னுடன் அனுப்புமாறு கேட்டுக்கொண்டான்.

குறிஞ்சிக்குமரனின் பூந்தோட்டத்தில் அவனைக் கண்டதும் அவள்தன் தோழிக்குப்பின்னால் ஒளிந்துகொள்ள முற்பட்டாள்.

'எப்பிடி உங்களுக்கு என்னைத் தெரியும்?'

'எடியே இவரையா சொன்னனீ?' என்றாள் அவளுடன் வந்திருந்த அவள் சிநேகிதி.

தன்தோழியின் வாயைத் தன்தளிர்க்கரங்களால் பொத்தினாள் அவள்.

'என்ன சொன்னவா என்னைப்பற்றி? ராக்கிங் குடத்தனானாமோ?'

'ஓ! நீங்க ஏற்கனவே சந்திச்சிற்றீங்களா? கள்ளி இவள் சொல்லவேயில்லை'

'அப்ப என்னெண்டு இவாவுக்கு என்னைத் தெரியுமாம்?'

'இவாவின்ரை மாமி உங்கட சித்தியின்ரை ஒண்டுவிட்ட தங்கச்சியாம். தொண்ணூறில நீங்கெல்லாம் இடம்பெயர்ந்து ஒண்டா இருந்தனீங்கெண்டெல்லாம் சொன்னவள். நீங்க என்ன தெரியாதமாதிரிக் கதைக்கிறீங்கள்?'

'ஓ.....'

சித்தியின்ரை தங்கச்சி அவளுக்கு மாமியெண்டா அவள் தனக்கு என்ன முறை?

ஆயிரந்தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக் கும்மியைக் கொட்டுங்களே....

அவனுக்குள் ஆனந்தக் கும்மி ஆரம்பமாகியது.

'நான் இஞ்சை நிற்கிறது உங்களுக்கு இடைஞ்சலா இருக்குமெண்டா நான் மாலை கட்டுற இடத்துக்குப் போறன்' என்றாள் அவள் தோழி

'உதை வேண்டுவ' என்றாள் அவள்.

அடுத்து வந்த வாரங்களில் ஒன்றில்

'இஞ்சேரும் உம்மட காலில மலையட்டை ஒண்டு ஊருது'

'ஐயோ எங்க?'

'அப்பிடியே அசையாம நில்லும் எடுத்து விடுறன்'

அவன் குனிந்து, யானைத்தந்தங்களைக் கடைந்து உருவாகியிருந்த அவள் கெண்டைக்காலில், ஒட்டிக்கொண்டிருந்த அட்டையை இழுத்தெடுத்தான்

இருவருமே மனதிற்குள் அட்டையைப் போற்றத்தொடங்கினர்.

மெய் தொட்டுப் பயிறல், பொய் பாராட்டல்,
இடம் பெற்றுத் தழாஅல், இடையூறு கிளத்தல்,
நீடு நினைந்து இரங்கல், கூடுதல் உறுதல்,
சொல்லிய நுகர்ச்சி வல்லே பெற்றுழித்
தீராத் தேற்றம் உளப்படத் தொகைஇ.....
- (தொல்காப்பியம். பொருள். நூற்பா-99 இலிருந்து)

முல்லை (இருத்தலும் இருத்தல் நிமித்தமும்)

இடம்: புதுக்குடியிருப்பு, முல்லைத்தீவு (காடும் காடுசார்ந்த இடமும்)
காலம்: 2002 புரட்டாதி (கார்காலம் மாலைப்பொழுது)

அவள் தன் கற்கைநெறி முடிந்து, தற்காலிக பல்மருத்துவராக புதுக்குடியிருப்பு பொன்னம்பலம் ஞாபாகார்த்த வைத்தியசாலையில் பணியாற்றத் தொடங்கியிருந்தாள். குடிசார் பொறியிலாளனான அவன் இலங்கையில் வேலைவாய்ப்பின்மை காரணமாகச் சிங்கப்பூர் சென்றுவிட்டிருந்தான். அவன் சிங்கப்பூர் சென்றபின்னர் இருந்துவந்த அவர்களுக்கிடையிலான தொலைபேசித் தொடர்புகளும் இப்போது துண்டிக்கப்பட்டாயிற்று. வேலைமுடிந்து மாலையில் வீடுவந்தால் வெறுமை அவளை நிரப்பிக் கொள்கிறது.

'மாலை என் வேதனை கூட்டுதடா
காதல் தன் வேலையைக் காட்டுதடா'

என்று அவள் திரையிசைப்பாடல்களை மாற்றி அவனுக்கு மடல்கள் வரையலானாள்.

புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்தாகி அமைதி திரும்பிக்கொண்டிருந்ததால் வடகிழக்கில் குடிசார் பொறியியலாளர்களுக்கான வேலைவாய்ப்புகள் அதிகரிக்க அவனை நாட்டுக்குத் திரும்பிவரும்படி வற்புறுத்தினாள். எடுத்துக்கொண்ட வேலைத்திட்டம் முடியாமல் வரமுடியாது என்றும் இன்னும் ஒருவருடத்தில் அது முடிந்துவிடும், அது முடிந்தவுடன் வந்து விடுகிறேன் என்றும் மடலனுப்பினான் அவன்.

அவன் வருகைக்காக அவள் காத்திருக்கத் தொடங்கினாள்.

மருதம் (ஊடலும் ஊடல் நிமித்தமும்)

இடம்: திருவையாறு, கிளிநொச்சி (வயலும் வயல்சார்ந்த இடமும்)
காலம்: 2004 தை (வைகறை, விடியல் பொழுது)

நியாப் திட்டத்தின் கீழ் ஒரு பொறியியலாளனாக அவனும் இணைந்து கொண்டான். வேலை நிமித்தம் அவன் கிளிநொச்சியில் இருக்கவேண்டியேற்பட்டதால் அவளும் தன் வேலையை கிளிநொச்சியிலுள்ள பொன்னம்பலம் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றிக் கொண்டாள்.

ஒருமடமாது ஒருவனுமாகி
இன்ப சுகந்தரும் அன்பு பொருந்தி
உணர்வு கலங்கி ஒழுகிய விந்து
ஊறு சுரோணிதம் மீது கலந்து..

மாதங்கள் உருண்டோடின. மழலைகளும் ஒன்றன்பின் ஒன்றாய் இரண்டாயிற்று. ஓய்வில்லா வேலை அவளுக்கு. அவனுக்கும் அவளுக்குமிடையே பிள்ளைகள் உறங்க இருவருக்குமான இடைவெளி அதிகமாகியதாய் அவளுக்குத் தோன்றத் தொடங்கியது. அவனும் அடிக்கடி வேலை நிமித்தமெனக்கூறித் தாமதமாக வருவதாய் உணர்ந்தாள் அவள். தான் புறக்கணிக்கப்படுகின்றேனோ என்கின்ற எண்ணம் எழுந்தது. சந்தேகவிதை விழுந்தது. அவன் செயல்களில் ஐயங்கொண்டு அது முளைக்கவும் தொடங்கியது. அம்முளை வெளியே தெரியவும் தொடங்கியது.

பிள்ளைகள் இருவரும் உறங்கிவிட்ட பின்னும் அவன் வரக்காணோம். அன்று அவன் மிகத் தாமதமாகவே வீட்டிற்கு வந்தான். கதவைத் தட்டினான். அவன்மேல் அவளுக்கு மிகுந்த கோபம் உண்டானது. கதவினைத் திறக்காமல் அமைதியாக இருந்தாள். சாளரம் வழியே எட்டிப் பார்த்தான். அவள் கதிரையில் இருப்பது மங்கலாகத் தெரிந்தது. அவள் கோபமாக இருப்பது புரிந்தது. காரணம் புரியாமல் குழம்பினான். மீண்டும் மீண்டும் பலமாகக் கதவைத் தட்ட அவள் கதவினைத் திறந்தாள். அவனைக் கோபத்துடன் ஏறிட்டாள்.

'இப்ப என்னத்துக்கு இந்தநடுச்சாமத்தில வந்து கதவைத் தட்டுறியள்? பிள்ளைகள் நித்திரை கொள்ளுறது தெரியேல்லையா? வீட்டில மனிசி பிள்ளைகள் இருக்கெண்டு நினைப்பில்லை. இந்த வயதிலையும் அமரடங்காம ஊர்மேய வெளிக்கிட்டிருக்கிறார்'

'என்ன வாயெல்லாம் கண்டகண்டபாட்டுக்கு நீளுது?'

'எனக்கு வாய்தான் நீளுது. உங்கை சிலபேருக்கு கண்டகண்ட இடங்களில என்னென்னவோ எல்லாம் நீளுதாம்'

'உமக்கு இப்ப என்ன பிரச்சனை? ஒரு மனுசன நிம்மதியா வீட்டுக்கு வந்து நித்திரைகூட கொள்ளவிடாம?'

'ஐயோ ராசா, இப்ப உங்களுக்கு நான் பிரச்சனையாப் போயிற்றன் என? புதுசா ஒருத்தி கிடைச்சவுடனே நான் வேண்டாதவளாகிற்றன். நீங்க அவளிட்டையே போங்கோ. என்ரை பிள்ளைகள வளர்க்க என்னால ஏலும். என்ரை அம்மா அப்பாவை என்னைப் படிப்பிச்சது வீணாப் போகாது?'

'என்ன உளருறீர்? உமக்கென்ன விசரா பிடிச்சிருக்கு?'

'விசர்தான். உங்களில பைத்தியமா இருந்தனே. அதுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்'

அவனுக்கு அடக்கமுடியாத கோபம் வந்தது. அதேசமயம் தன்மேல் அபாண்டமாகப் பழிசுமத்தும் அவளைப் பார்க்கப் பாவமாகவும் இருந்தது. தன்நிலை விளக்கினான். அவள் சந்தேகங்கள் அடிப்படையற்றவை என்பதைப் புரிய வைத்தான்.

ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்
கூடலிற் காணப் படும். – (திருக்குறள் 1327)

அவள் வென்றவளானாள்.

நெய்தல் (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்)

இடம்: மன்னார் (கடலும் கடல்சார்ந்த இடமும்)
காலம்: 2008 பங்குனி (எற்பாடு பொழுது)

அவன் வேலைநிமித்தம் கிளிநொச்சியிலிருந்து மன்னாருக்குச் சென்றுவரவேண்டியிருந்தது. அக்காலப்பகுதியில் வன்னிக்குள் போக்குவரத்துகள் ஆபத்தானவையாக மாறிக்கொண்டிருந்தன. ஆழஊடுருவித் தாக்கும் படைகளின் கிளைமோர்த் தாக்குதல்களுக்குப் பெரும்பாலும் பொதுமக்கள் பயணிக்கும் வாகனங்களே பலியாகிக் கொண்டிருந்தன. அவன் மன்னாருக்குச் சென்றுவரும் ஒவ்வொரு நாளும் அவளுக்குத் துயர் நிறைந்ததாய் மாறிற்று. எங்காவது தூரத்தில் ஏதாவதொரு வெடியோசை கேட்கையிலும் அவள் அவனுக்கு ஏதாவது நேர்ந்துவிடுகிறதோ என்று இரங்கிக் கொண்டும் தெய்வங்களிடம் அவனைக் காப்பாற்றுமாறு இறைஞ்சிக் கொண்டுமிருந்தாள்.

பாலை (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்)

இடம்: புதுமத்தாளன் (குறிஞ்சியும் முல்லையும் திரிந்த நிலம்)
காலம்: 2009 சித்திரை (நண்பகல்ப் பொழுது)


போர் உக்கிரமடைந்து தொடர்ச்சியான இடப்பெயர்வுகளால் களைத்துப் போய் புதுமத்தாளன் பகுதியில் தஞ்சமடைந்திருந்தனர். காயப்பட்டவர்களில் சிலர் கப்பலூடாகத் திருகோணமலைக்கு அழைத்தச்செல்லப்படுகையில் களவாகவும் வள்ளங்களில் சிலர் அங்கிருந்து வெளியேறத் தொடங்கியிருந்தனர். அப்படியொரு வள்ளத்தில் அவர்களும் தங்கள் பயணத்தை ஆரம்பித்தனர். எந்தப் பக்கத்தாலும் எந்தப் பகுதியிலிருந்தும் துப்பாக்கிச்சன்னங்கள் பதம் பார்க்கலாம். அவற்றைத் தாண்டிக் கடலுக்குள் வந்துவிட்டாலும், கடற்படையினரதோ அல்லது விமானப் படையினரதோ ரேடார்க் கண்களில் பட்டுவிட்டால் அவ்வளவுதான். சுற்றிவர கடல்முழுதும் நீரிருந்தும் பருகுதற்கு ஒருதுளி நீரில்லாத அந்தப் பயணத்தில் உயிரைப் பணயம் வைத்துப் புறப்பட்ட அவர்கள் தாம் அடையவேண்டிய கரையினை ஆண்டவன் அருளால் அடைந்தனர். அங்கே அவர்களை விட்டுவிட்டு, தன் குடும்பத்தின் எதிர்கால நலன்கருதி அவன் கப்பலேறினான்.

பெருந்திணை (பொருந்தாக் காதல்)

இடம்: ரொறன்ரோ, கனடா
காலம்: 2017 நவம்பர்

அவன் மட்டும் இங்கே. அவன் வந்த கப்பலின் பின் எதுவுமே இங்கேவர முடியாதாவாறு ஆயிற்று. அவளும் பிள்ளைகளும் மலேசியாவில். அவனது அகதிக்கோரிக்கைக்கும் இன்னமும் ஒரு முடிவு கிட்டாத நிலையில் ஏழாண்டுகளுக்கும் மேலாக அவளையும் தன் பிள்ளைகளையும் காணமுடியாதவாறு தவித்தக் கொண்டிருந்தவனுக்குப் புதிய பிரச்சனையொன்று முளைக்கத் தொடங்கியிருந்தது.

அந்தப் புதியவள் வேற்றினத்தவள். அவனைப்போலவே அகதிக்கோரிக்கையின் பதிலுக்காகக் காத்திருப்பவள். அவனும் அவளும் ஒரேயிடத்திலேயே களவாகப் பணியாற்றுகிறார்கள். அவனிலும் வயதில் மூத்தவள். ஆயினும் இப்போது அவனுக்கு அழகானவளாகத் தோன்ற ஆரம்பித்திருக்கிறாள். இப்போதெல்லாம் அவள் குனிந்து நிமிர்ந்து வேலைசெய்கையில் அலையும் தன்விழிகளைத் தடுக்கவேண்டுமென்று அவனுக்குத் தோன்றுவதில்லை. கோடைகாலம் முடிந்து குளிர்பனிக்காலம் ஆரம்பித்தாலும் தன் ஆடைகளின் நீள அகலங்களை அதிகரிக்கவேண்டுமென்று அவளுக்கும் தோன்றுவதில்லை. அப்படி அவளுக்குத் தோன்றாமலிருப்பது அவனுடனிருக்கும் நேரங்களில் மட்டுமே என்பதை அவனும் அவளும் தெரிந்தே வைத்திருந்தனர். கண்ணுக்குத் தெரியாதவொரு எல்லைக்கோட்டில் நின்று கண்ணாமூச்சியாடும் அவர்கள், அந்த எல்லைக்கோட்டைக் கடக்காதிருப்பராக.

ஏறிய மடல் திறம், இளமை தீர் திறம்,
தேறுதல் ஒழிந்த காமத்து மிகு திறம்,
மிக்க காமத்து மிடலொடு தொகைஇ,
செப்பிய நான்கும்-பெருந்திணைக் குறிப்பே

– (தொல்காப்பியம். பொருள். நூற்பா-54)



நன்றி: தாய்வீடு (நவம்பர் 2017)

படங்கள்: இணையத்தில் பெறப்பட்டன.

====================

5 comments:

  1. அற்புதமான கதை ஐயா! நான் சங்க இலக்கியம் படித்ததில்லை. ஆனால், சங்க இலக்கியம் குறித்த அறிமுகம் உண்டு. அதில்தான் இப்படி ஒரு கதைக்குத் திணை, பொழுது போன்ற பின்னணிகள் கொடுத்துப் பாக்கள் இயற்றப்பட்டிருக்கும் எனப் படித்திருக்கிறேன். ஆனால், அதே பாணியில் இந்த இருபத்தோராம் நூற்றாண்டில் ஒரு சிறுகதை! வெகு அருமை!

    ஆனால், முடிவு முடிவாகவே இல்லையே ஐயா! இணையர் இருவரும் இணையவும் இல்லை. தலைவனின் பெருந்திணைக் காதல் தலைவியின் நிலை என்னாகுமோ எனும் அச்சத்தைக் கூட்டுகிறது. அப்படியே விட்டுவிட்டீர்களே!

    ReplyDelete
  2. அருமை பாராட்டுக்கள்

    ReplyDelete
  3. எம் இருண்டகால இன்னல்களை நன்கு உள்வாங்கிய எழுத்தாளர், அந்த இன்னல்கள் மத்தியில் உருவான 'அவனும்' 'அவளும்' காதலை இங்கு படமாக்கியுள்ளார். காட்சிகள் ஐவகை நிலங்களிலும் படமாக்கப்பட்டவை. காட்சிகளுக்கு மெருகூட்ட பண்டைத்தமிழ்நூல் ஆசிரியர்களின் பாடல் வரிகள் முக்கியமான இடங்களில் சேர்க்கப்படுகின்றன. கேள்விக்குறி ஒன்று படத்தின் முடிவாகிறது. சொந்த மனைவியைப்பிரிந்த கணவன் ஒருநாட்டிலும், மனைவியும் பிள்ளைகளும் இன்னொரு நாட்டிலுமான நிலையில், குடும்பம் ஒன்றிணைவதிலுள்ள ஏழாண்டிற்குமேலான தாமதம், குடும்ப அமைப்புக்கான எல்லைக்கோட்டை தகர்த்துவிடுமோ என்பதே அக்கேள்வி. மெச்சக்கூடிய படைப்பு. எழுத்தாளர் தமக்கே உரித்தான எழுதுப்பாணியில் மேலும் பல படைப்புகளைத் தொடர்வராக! - வேலணை வாணர்

    ReplyDelete