Tuesday, February 6, 2018

தொல்காப்பியம் கூறும் காதலின் படிநிலைகள் - திரையிசைப்பாடல்கள் வாயிலாக

இது மன்மத மாசம் இது மன்மத மாசம்
இது பன்னிரண்டு மாசங்களில் வாலிப மாசம்
இங்கு உன்னில் நானும் ஒளிந்துகொள்ள வேறில்லை மாசம்




மலரினும் மெல்லிது காமம் சிலரதன்
செவ்வி தலைப் படுவார்  (குறள் எண்:1289)

மலரைவிட மென்மையானது காமம். சிலரே அந்த உண்மை அறிந்து அதன் நல்ல பயனைப் பெறக்கூடியவராய் இருக்கின்றனர்என்கின்றார் தெய்வப்புலவர் வள்ளுவர்.

உயிரிகளின் தொடர்ச்சிக்கு அடிநாதமாக விளங்குவது இனச்சேர்க்கையாகும். அந்த இனச்சேர்க்கைக்கும் வரைவிலக்கணம் வகுத்துத் தன் வாழ்வைப் பண்படுத்தி மேம்படுத்தி  வளர்ந்ததே மனித உயிரினம். வெறுங் காமநுகர்ச்சியைத் தவிர்த்து அதனுடன் காதலுணுர்ச்சியைக் கலந்து தன் வாழ்வியலை மேம்படுத்தியிருக்கும் மனிதகுலம் இன்றைய காலத்தில் பெப்ரவரி மாதத்தில் காதலர்தினத்தையும் கொண்டாடுகின்றது. அந்தவகையில் இக்காதல் எவ்வாறு தோன்றி வளர்கிறது? அதன் படிநிலைகளாக எவற்றைத் தொன்மைத்தமிழர் கொண்டனர் என்பதைப்பற்றிக் கொஞ்சம் அலசுவது இந்த மாதத்திற்குப் பொருத்தமானதாக அமையலாம்.

தமிழ்மொழியின் தொன்மைக்குச் சான்றாக விளங்கி இன்றுவரை தமிழ்மொழியினைச் சிதைவடையாமல் பாதுகாத்து வரும் அரியவொரு நூலாக விளங்குவது தொல்காப்பியமாகும். தொல்காப்பியமானது வெறுமனே தமிழ்மொழிக்கான இலக்கணத்தை மட்டும் கூறாமல், அக்காலத் தமிழரின் வாழ்வியலுக்கும் இலக்கணம் கூறியவொரு இலக்கிய நூலாகவும் திகழ்கிறது. தொல்காப்பியத்தின் மூன்றாவதும் இறுதியுமான பொருளதிகாரமானது அக்கால மாந்தரின் அகப்புற உணர்ச்சிகள் பற்றியும் அவற்றின் வெளிப்பாடுகள் (மெய்பாடுகள்) பற்றியும் கூறும் உளவியல்நூலாகவும் உள்ளது. மனிதனின் அடிப்படை உணர்ச்சிகள் எக்காலத்திலும் மாறாதவையாகவே உள்ளன. ஒரு காதல் அரும்பும் முறையையும் அது வளர்ந்து விருட்சமாகும் கலையையும் பத்துப் படிநிலைகளாக வகுத்துக் கூறி அவ்வொவ்வொரு படிநிலைகளிலும் அக்காதலர்களின் உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் பற்றியும் விரிவாக விளக்கும் தொல்காப்பியக் கூறுகளைப்பற்றிக் கொஞ்சம் பார்ப்போம்

அன்றைய காலத்தில் எட்டுவகையான திருமண வகைகள் இருந்தன. அவற்றுள் சிறப்பாகக் கொள்ளப்படுவது காதல்த் திருமணமாகும். காமம் என்பது அன்றைய காலத்தில் காதலையே அதிகம் குறித்து நின்றது.

இன்பமும் பொருளும் அறனும் என்றாங்கு
அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்
காமக் கூட்டங் காணுங் காலை
மறையோர் தேஎத்து மன்றல் எட்டனுள்
துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே. (தொல். பொருள்; -89)

வள்ளுவர் 'அறம், பொருள், இன்பம்' என்கின்ற வகையில் திருக்குறளை அமைத்தார். ஆனால் வள்ளுவரிற்கு முற்பட்ட தொல்காப்பியர் 'இன்பம், பொருள், அறன்' என இங்கே கூறுவது தொல்காப்பியரின் அறிவு நுணுக்கத்தை விதந்து நோக்க வைக்கிறது (வள்ளுவரின் அறத்திற்கும் தொல்காப்பியரின் அறனிற்கும் பெரியளவில் வேறுபாடுகள் கிடையாது. இரண்டுமே ஒருவகையில் கடமையையே வலியுறுத்துகின்றன). ஏனெனில் இன்பத்தை அனைத்து மாந்தருமே விரும்புவர். பொருளினை ஈட்ட பெரும்பாலானோர் விரும்புவர். பொருளீட்டிய எல்லோரும் அறத்தைக் கடைப்பிடிக்க முனைவதில்லை. எனவே எண்ணிக்கைப்படி பார்த்தால் முதலில் இன்பமும் அடுத்து பொருளும் அதன் பிறகே அறனும் வருகின்றன. அதுமட்டுமன்றி. மனிதரின் அகவைப்படி (வயதுப்படி) பார்த்தாலும், பால்யப் பருவம் முடிந்து வாலிப வயதை அடையும் போதே ஒருவர் சுயமான மனிதராக உருவாகுகின்றார். அதுவரையில் தன் பெற்றோரின் அரவணைப்பிலேயே வளர்கின்றார். வாலிப வயதில் காதல் சார்ந்த விடயங்களே அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைகின்றது. அதனாலேயே தொல்காப்பியர் முதலில் இன்பத்தைக் கூறுகின்றார். காதல் கைகூடியதும், அடுத்து இல்வாழ்க்கைக்குப் பொருள் அவசியமாகிறது. பொருளீட்டிய பின்னரே அறம் செய்கின்றனர். அந்தவகையில் தொல்காப்பியரின் வைப்புமுறை வியக்கத் தக்கதே.

இனி தொல்காப்பியம் கூறும் காதல் படிநிலைகளைப் பார்க்கலாம்.

ஒன்றே வேறே என்று இரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பாலது ஆணையின்,
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப,
மிக்கோன் ஆயினும், கடி வரை இன்றே. (தொல். பொருள்; -90)

சேர்த்து வைப்பது, பிரித்து வைப்பது என்கின்ற இருவகைப்பட்ட ஊழ்வினைப் பயன்களில் உயர்ந்ததாகிய சேர்த்து வைக்கும் பயனால், ஒருவருக்கொருவர் எல்லா வகையிலும் பொருந்திய காதலனும் காதலியும் ஒருவரையொருவர் கண்டுகொள்வார்கள். காதலன் தகுதி கூடியவனாயிருந்தாலும் பரவாயில்லை'' என்பது இந்நூற்பாவின் கருத்து. இதற்கு முன்னைய (தொல்காப்பியம் பொருளதிகாரம் நூற்பா- 89) நூற்பாவில், 'அன்பொடு புணர்ந்த ஐந்திணை மருங்கின்' என்று கூறுவதனாலும் ஒருதலைக் காதலாகிய கைக்கிளையும் பொருத்தமில்லாத காதலாகிய (அல்லது அன்பில்லாத காமத்தை மட்டுமே நோக்காகக்கொண்ட) பெருந்திணையும் இங்கே விலக்கப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே தொல்காப்பியம் கூறும் களவுக்காதல் என்பது இக்காலத்தில் கூறப்படும் கள்ளக்காதல் அல்ல என்பதை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளவேண்டும். தொல்காப்பியம் கூறும் இக்களவுக் காதலின் அதாவது திருமணம் புரிந்து கொள்வதற்கு முன்னரான காலப்பகுதியின் பத்துப் படிநிலைகளை இனிப் பார்க்கலாம்

1)     காட்சி:

சிறந்துழி ஐயம் சிறந்தது' என்ப-
'இழிந்துழி இழிபே சுட்டலான. (தொல். பொருள் -90)

வண்டே, இழையே, வள்ளி, பூவே,
கண்ணே, அலமரல், இமைப்பே, அச்சம், என்று
அன்னவை பிறவும் ஆங்கண் நிகழ-
நின்றவை களையும் கருவி' என்ப. (தொல். பொருள் -91)

என்கின்ற இவ்விரண்டு நூற்பாக்களினூடாக காதலின் முதலாம் படிநிலையான (அவத்தை), ஒருவரையொருவர் முதன்முதலில் காண்கின்ற காட்சி அவத்தை விவரிக்கப்படுகின்றது. தலைவன் (இப்போதைய திரைப்படப் பாணியில் கதாநாயகன்) முதன்முதலாகத் தலைவியைக் (கதாநாயகியைக்) காண்கின்றான்.

கண்டவுடன் அவளின் அழகு அவனைத் திகைக்க வைக்கிறது. மானிடப்பெண்ணோ அல்லது தேவலோகப்பெண்ணோ என்று மயங்குகிறான்.

இந்திரையோ இவள் சுந்தரியோ தெய்வ
ரம்பையோ மோகினியோ - மன
முந்திய தோவிழி முந்திய தோகர
முந்தியதோ வெனவே

(காதலன் திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல் பகுதி திரிகூடராசப்ப கவிராயர் இயற்றிய திருக்குற்றாலக் குறவஞ்சியில் வசந்தவல்லி பந்தடித்தல் எனும் பகுதியில் இடம்பெற்றுள்ளது.)
                            
என்றோ அல்லது

காற்றினில் பிறந்தவளோ
புதிதாய் கற்பனை வடித்தவளோ...
சேற்றினில் மலர்ந்த செந்தாமரையோ
செவ்வந்தி பூச்சரமோ?

கண்களில் நீலம் விளைத்தவளோ
அதை கடலினில் கொண்டு கரைத்தவளோ
பெண்ணுக்கே பெண்ணே
பேராசை கொள்ளும்
பேரழகெல்லாம் படைத்தவளோ?

என்றோ இன்றைய திரையுலகக் கதாநாயகன் கதாநாயகியை வியப்பதுபோல் அவளைச் சிறப்பாக வியந்து நோக்குகிறான். அப்படியல்லாமல் முதல்பார்வையிலே அவளது அழகு அவனைக் கவராவிட்டால் அங்கே தலைவனிடத்துக் காதல் அரும்பாதும் போகலாம்.

அவள் மானிடப்பெண் என்பதை அவள் சூடியிருக்கும் மலர்களைச் சுற்றும் வண்டுகளைக் காண்பதாலும், மானிடர்களால் செய்யப்பட்ட அணிகலன்களை அவள் அணிந்திருப்பதாலும், அவள் தோள்களில் வரையப்பெற்றிருக்கும் தொய்யிற் கொடியினாலும் (இக்காலத்தில் மருதாணி அல்லது மெஹந்தி வைத்தக் கொள்வதைப் போன்றது), அவள் சூடிக்கொண்ட பூக்கள் வாடியிருப்பதாலும், அவளது கண்கள் மருள்வதாலும், அவளிடம் காணப்படும் தடுமாற்றத்தாலும், அவள் விழிகள் இமைப்பதாலும், அவள் அச்சப்படுவதைக் காண்பதாலும் அவைபோன்ற பிறவும் நிகழ்வதாலும் அவள் மானிடப்பெண்ணே என்று உறுதிப்படுத்திக் கொள்கின்றான்.

அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கனங்குழை
மாதர்கொல் மாலும்என் நெஞ்சு  (திருகுறள் -1081)

தெய்வப் பெண்ணோ (மோகினியோ)? அழகிய மயிலோ? தோடு அணிந்த மானிடப் பெண்ணோ என்று வள்ளுவரின் காதலன் மயங்குகிறான்.



வேட்கை, ஒருதலை உள்ளுதல், மெலிதல்,
ஆக்கம் செப்பல், நாணு வரை இறத்தல்,
நோக்குவ எல்லாம் அவையே போறல்,
மறத்தல், மயக்கம், சாக்காடு, என்று இச்
சிறப்புடை மரபினவை களவு என மொழிப (தொல். பொருள்; -97)

வேட்கை முதல் சாக்காடு வரை இந்நூற்பாவில் சொல்லப்பட்ட ஒன்பது படிநிலைகளுடன் மேலே கூறப்பட்ட காட்சிப் படிநிலையையும் சேர்த்து களவுக் காதலில் பத்துப் படிநிலைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது. அப்படிநிலைகளில் அக்காலக் காதலர்களின் உணர்ச்சிவெளிப்பாடுகள் எவ்வாறு அமையும் என்பது மெய்ப்பாட்டியலில் கூறப்படுகிறது.

2)     வேட்கை:
வேட்கை என்பது ஒருவரையொருவர் அடையவேண்டுமென்கின்ற ஆராவிருப்பமாகும்.

எனது இரவு அவள் கூந்தலில்
எனது பகல்கள் அவள் பார்வையில்
காலம் எல்லாம் அவள் காதலில்
கனவு கலையவில்லை கண்களில்
இதயம் துடிக்கவில்லை ஆசையில்
வாழ்வும் தாழ்வும் அவள் வார்தையில்
கண்ணுக்குள் இமையாக இருக்கின்றாள்
நெஞ்சுக்குள் இசையாக துடிக்கின்றாள்
நாளைக்கு நான் காண வருவாளோ
பாலைக்கு நீரூற்றி போவாளோ
வழியோரம் விழி வைக்கிறேன்

3)     ஒருதலை உள்ளல்:
இது ஒருவரை    ஒருவர்     இன்றியமையாதவர் என்கின்ற திடமான உறுதியொடு
எந்நேரமும் அவர்பற்றிய சிந்தனையில் இருத்தல்.

எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா?
என்னை விட்டு உன் நினைவைப் பிரிக்க முடியுமா?
கண்கள் காணும் கனவிலே உன் முகம் இருக்கும்
காற்றிலாடும் ரோஜாப் போல் சிவந்தே சிரிக்கும்

4)     மெலிதல்:
எந்நேரமும் தம் காதலர் பற்றிய சிந்தனையிலேயே இருப்பதால் ஊண் உறக்கமின்றி இளைத்துப்போதல்.

மாலை என் வேதனை கூட்டுதடி
காதல் தன் வேலையைக் காட்டுதடி
வேதனை சொல்லிடும் ராகத்திலே
வேகுதே என் மனம் மோகத்திலே
மோகமுள் நெஞ்சிலே பாய்கிறதே

5)     ஆக்கஞ்செப்பல்:
ஒருவரை ஒருவர் அடைவதற்கும், பிரிவின்றிக் காதலின்பத்தில்  திளைத்திருப்பதற்கும் இன்னின்னது செய்யவேண்டுமென தமக்குத்தாமே கூறிக்கொள்ளுதல்.

சொன்னதெல்லாம் பகலிலே புரிவேன்
நீ சொல்லாததும் இரவிலே புரிவேன்
காதில் கூந்தல் நுழைப்பேன்
உந்தன் சட்டை நானும் போட்டு அலைவேன்
நீ குளிக்கையில் நானும் கொஞ்சம் நனைவேன்
உப்புமூட்டை சுமப்பேன்
உன்னையள்ளி எடுத்து உள்ளங்கையில் மடித்து
கைக்குட்டையில் ஒளித்துக்கொள்வேன்
வெளிவரும்போது விடுதலை செய்து
வேண்டும் வரம் வாங்கிக்கொள்வேன்

6)     நாணுவரையிறத்தல்:
காதலன் சாதாரண காலங்களில் செய்ய வெட்கப்படும் செயல்களைச் செய்து காதலிமீது அளவுகடந்த ஆசைகொண்டு நிற்றல். காதலி தன் பெண்மை காரணமாக ஒடுங்கி நின்ற உள்ளம் தன்நிலை  கடந்து  கிளர்ந்து  நிற்றல்.

தேவதாசும் நானும் ஒரு ஜாதி தானடி
உன்னை தேடி இங்கு வந்தேன் நடு வீதி தானடி
உன்னாலே தான் மனம் பித்தானது
கண்ணீ்ரு தான் என் சொத்தானது

7)     நோக்குவவெல்லாம் அவையே போறல்:
தாங்கள் காணும் பறவைகள், விலங்குகள், கடல், காடு, வான் முதலிய முதலிய அஃறிணைப் பொருள்களும்   தம்மைப்போன்றே காதல் வேட்கையில் வருந்துவதாகத் தோன்றுதல் அல்லது தம்காதலரைப் போன்று தோன்றுதல்.

நீரு நிலம் நாலு பக்கம் நான் திரும்பிப் பார்த்தாலும்
அந்தப் பக்கம் இந்தப் பக்கம் அத்தனையும் நீயாகும்
நெஞ்சுக்குள்ள நீங்காம நீதான் வாழுற
நாடியில சூடேத்தி நீதான் வாட்டுற
ஆலையிட்ட செங்கரும்பா ஆட்டுகிற என் மனசை
யார விட்டு தூது சொல்லி நானறிவேன் உம்மனசை

8)     மறத்தல்:
தமது குலப்பெருமைகளையும் தகுதிகளையும் மறந்தும், தாம் விரும்பிச் செய்யும் செயல்களில் சோர்வுற்றும் இருத்தல்.

நானே நானா யாரோ தானா ?
மெல்ல மெல்ல மாறினேனா?
தன்னைத்தானே மறந்தேனே
என்னை நானே கேட்கிறேன்

9)     மயக்கம்:
தம்செயல்களை அறியாது செய்வதும் தப்பாகச் செய்வதும் விளைவறியாது  பேசுதலும்,  செயல்  புரிதவதுமாகும்.

தாய் தந்தை முகமே
மறந்து நெஞ்சில் உந்தன் முகம்
எழுதே பாிட்சை எழுதும் பொழுதும்
கவிதை எழுத வருதே
குளிக்கும் அறையில்
ஒரு கூத்து நினைக்கும் போது
வெட்கம் வருதே ஆடையில்லாமல்
வந்தேன் சோப்பு நுரையை அணிந்தே

10)  சாக்காடு:
காதலன் மடலேறுதல், வரை பாய்தல் முதலியவற்றை  எண்ணுதலும் கூறுதலும்.   காதலி தன்   புலன்கள்   மனத்தின்வழி   நிகழாமல் கவலைப்படுதலும்  சாதற்குத் துணிந்தவளாகக் கூறுதலுமாகும்.

என் சுவாசக் காற்று வரும் பாதை பார்த்து
உயிர்தாங்கி நானிருப்பேன்
மலர்கொண்ட பெண்மை வாராமல் போனால்
மலை மீது தீக்குளிப்பேன்
என் உயிர் போகும் போனாலும் துயரில்லை கண்ணே
அதற்காகவா பாடினேன்
வரும் எதிர்காலம் உன் மீது பழிபோடும் பெண்ணே
அதற்காகத்தான் வாடினேன்

காதலின் பத்துப் படிநிலைகளைக் களவியலில் கூறிய தொல்காப்பியர் காதலின் உணர்ச்சி வெளிப்பாடுகளை மெய்ப்பாட்டியலில் கூறுகிறார். 2500 ஆண்டுகளிற்கும் மேற்பட்ட இக்கால இடைவெளியில், மனிதர்களின் வாழும் சூழலும் வாழ்க்கைமுறையும் முற்றிலுமாய் மாறிவிட்ட நிலையிலும் தொல்காப்பியம் கூறும் காதல் அவத்தைகளின் மெய்ப்பாடுகளில் புகுமுகம் புரிதல், பொறி நுதல் வியர்த்தல், நகு நயம் மறைத்தல், அணிந்தவை திருத்தல், இல் வலியுறுத்தல், பாராட்டு எடுத்தல், மடம் தப உரைத்தல், கொடுப்பவை கோடல், கண்டவழி உவத்தல், புலம்பித் தோன்றல், கலங்கி மொழிதல் போன்ற பலவும் இன்றைய காலத்திற்கும் பொருந்துவனவாவே காணப்படுகின்றன.

மணமாவதற்கு முன்னரான காதலைப் பத்துப் படிநிலைகளாகத் தொல்காப்பியம் வகுத்திருப்பதைப்  பார்த்தோம். உயிரே திரைப்படத்தில் கவிஞர் வைரமுத்து அவர்களால் எழுதப்பட்ட இன்றைய திரையிசைப்பாடல் ஒன்று இக்காதலை ஏழு படிநிலைகளாக வகுத்திருக்கிறது.

என்னுயிரே என்னுயிரே என் ஆருயிரே,
என்னுயிரே என்னுயிரே என் ஓருயிரே
கண்கள் தாண்டி போகதே என் ஆருயிரே என் ஓருயிரே
ஒரு காதலிலே மொத்தம் ஏழு நிலை
இது எந்த நிலை என்று தோன்ற வில்லை.


இப்பாடலிலும் முதல் நிலையாக காட்சி நிலையும் இறுதி நிலையாக மரணமும் குறிப்பிடப்பட்டிருப்பது தொல்காப்பியத் தழுவலையே காட்டுகிறது.



நன்றி: தாய்வீடு (பெப்ரவரி 2018)

படம் - இணையத்தில் பெறப்பட்டது

No comments:

Post a Comment